Top News

தோப்பாகிய தனிமரம்



பிறவ்ஸ்

நேற்று முன்தினம் சனிக்கிழமை (16.09.2017) பொத்துவில் அஷ்ரஃப் கலாசார மண்டபத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வில் பேசப்பட்ட விடயங்களை தொகுத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

--------------------------------------------------------

மூதூர் அப்துல் மஜீத் தலைமையிலான இஸ்லாமிய சோஷலிச கட்சி 1968ஆம் ஆண்டு இஸ்லாமும் சோஷலிசமும் என்ற தலைப்பிலான ஒரு பேச்சுப்போட்டியை நடாத்தியது. கல்முனையில் சாதாரணதரம் படித்துவிட்டு இருந்த முஹம்மது ஹுசைன் முஹம்மது அஷ்ரஃப் என்ற சிறுவன் அதில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டார்.

நடுவர்களை நடுவன்னர்கள் என்று விழித்து தனது பேச்சை தொடங்கிய அஷ்ரஃப், இஸ்லாம் என்றால் என்ன, சோஷலிசம் என்றால் என்னவென்று முதலில் தெளிவுபடுத்தினார். இரண்டும் இரு துருவங்கள் என்றும், இரண்டுக்கும் சம்பந்தம் இல்லையென்றும் நிரூபித்தார். இவையிரண்டுக்கும் தொடர்பிருக்கிறது என்பவர்களின் மண்டையில் என்ன உருக்கா இருக்கிறது என்று கேள்வியெழுப்பியதும் சபையில் கரகோசம் வெடித்தது.

இஸ்லாத்தில் சோஷலிசம் இருக்கிறது என்று பேசிவிட்டு பரிசைப் பெறுவார்கள் என்று ஏற்பாட்டுக்குழு எதிர்பார்த்தது. ஆனால், அஷ்ரஃப் தலைப்புக்கு எதிராக உண்மையே பேசிவிட்டு வந்தார். இதனால், மூதூர் அப்துல் மஜீத், அஷ்ரஃபுக்கு எதிராக எழுத ஆரம்பித்தார்.

இக்காலப்பகுதியில் தினபதி பத்திரிகையில் ஆரம்பிக்கப்பட்ட புனித ரமழான் சிந்தனைகள் என்ற பத்தியை அஷ்ரஃப் எழுதிவந்தார். தொடராக எழுதிவந்த இப்பத்தி நோன்பு 21இன் பின்னர் பிரசுரிக்கப்படவில்லை. பிந்திய ரமழான் சிந்தனையில் ஸகாத் பற்றி எழுதியிருந்ததால், அது சோஷலிசத்துக்கு எதிரானது என்று அப்பத்திரிகையில் பிரசுரமாகாதவாறு தடுக்கப்பட்டது.

பின்னர், மூதூர் அப்துல் மஜீத் இந்தியாவிலிருந்து அழைந்துவந்த பீர்முஹம்மது எம்.எல்.ஏ. திருக்குர்ஆனும் திருக்குறளும் ஒன்று என்று பேசினார். ஆச்செய்தி பத்திரிகையில் வெளிவந்த பின்னர் மறுநாள் அஷ்ரஃப் அதற்கு மறுப்பு அறிக்கையொன்றை எழுதினார். மூதூர் மஜீதிடம் கல்முனை அஷ்ரஃப் கேள்வி என்ற தலைப்பில், குர்ஆனும் திருக்குறளும் வேறு என்று அன்ற பேசிய நீங்கள், இப்போது இரண்டும் ஒன்று என உங்கள் அரசியல் சிந்தனையை மாற்றிவிட்டீர்களா என்று தினபதி பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது.

அதற்கு மூதூர் மஜீத் ஒரு மழுப்பலான பதிலை வழங்கியிருந்தார். அதற்கு மீண்டும் பதிலளித்து அஷ்ரஃப் அறிக்கையொன்றை விட்டிருந்தார். அதில் அவர், "உங்கம்மா உம்மா எங்கம்மா சும்மாவா" என்று கேட்டிருந்தார். ஆனால் இரண்டாவது பதில் பிரசுரிக்கப்படவில்லை.

சாதாரணதரம் படித்த ஒரு சிறுவனை ஒரு அரசியல்வாதிக்கு சவால் விடும் அளவுக்கு நாட்டின் மாபெரும் சக்திமிக்கவனாக காட்டிய பெருமை தினபதி பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகத்தையே சாரும். 

அதுபோல தினகரன் முன்னாள் ஆசிரியர் சிவகுருநாதன், எழுச்சிக்குரல் முன்னாள் ஆசிரியர் எம்.பி.எம். அஸ்ஹர், ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பாராளுமன்ற செய்தியாளராக இருந்த ராசைய்யா ஆகியோர் அஷ்ரஃபின் அரசியல் எழுச்சிப் பயணத்தில் பக்கபலமாக நின்றிருக்கிறார்கள். இவர்களின் ஊடகப்பணி அவரது அரசியல் பயணத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல பெரிதும் உதவியது.

முஸ்லிம்களுக்கான அரசியல் அந்தஸ்து என்பது மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃபினால் பெற்றுக்கொடுக்கப்பட்டதொன்று. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை உருவாக்கி, அதன்மூலம் முஸ்லிம்களின் உரிமைக்கு குரல்கொடுக்கும் ஒரு தளத்தை அஷ்ரஃப் உருவாக்கிக்கொடுத்தார். இந்நிலையில், நான் முஸ்லிம் காங்கிரஸ் தலைவராக இருந்தும் அஷ்ரஃபின் வெற்றிடத்தை நிரப்பமுடியாது என்று ரவூப் ஹக்கீம் அதை பெருமனதுடன் ஒத்துக்கொள்கிறார்.

அஷ்ரஃப் எனும் தனிமனிதன் முஸ்லிம் உரிமைக்கான அரசியலுக்கு வித்திட்டார். அவரால் தமிழ் சமூகத்துக்கு பல ஆபத்திருப்பதாக கதைகள் கட்டிவிடப்பட்டன. இதன்மூலம் தமிழ் மக்களையும் விடுதலைப்பு புலிகளையும் அவருக்கெதிராக திருப்பிவிட்டனர். பிரேமதாச ஆட்சிக்காலத்தில், விடுதலைப்புலிகளின் தேநிலவு காலமான இருந்த 1990களில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அவர்களது வீடுகளில் இருக்கமுடியாத அச்சுறுத்தல் காணப்பட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊர்களில் தஞ்சமடைந்திருந்தனர்.

கல்முனை அம்மன் கோயில் வீதியிலுள்ள அவரது வீடு திக்கிரையாக்கப்பட்டது. இதனால் அஷ்ரஃப் கல்முனையிலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். கொழும்புக்கு வந்தும் அவர் ஒரு இடத்தில் இருக்கவில்லை. பல இடங்களில் மாறி மாறி தஞ்சம்புகுந்தார். ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் வீடு, பாத்திமா சேர்ச்சிலுள்ள அலுவலகம், கிருள வீதி, டாம் வீதி, எல்விட்டிகல பிளட்ஸ் என்று பல இடங்களில் தங்கியிருந்தார். 

கொழும்பில் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவிடம், ரவூப் ஹக்கீம் ஒரு இளம் சட்டத்தரணியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது பாயிஸ் முஸ்தாபாவின் வீட்டில் அஷ்ரஃப் தஞ்சமடைந்திருந்தார். அங்கு வரவேற்பறைக்கு அருகிலுள்ள அறை அஷ்ரஃபுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 1985ஆம் ஆண்டுகளில் அங்கு அஷ்ரஃபுடன் ஏற்பட்ட நெருக்கம்தான் ரவூப் ஹக்கீமை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவந்து சேர்த்தது. அந்த உறவுதான் முஸ்லிம் காங்கிரஸை இன்றுவரை வழிநடாத்துவதற்கு துணைபுரிகிறது.

1989-1994 வரை அஷ்ரஃப் எதிர்க்கட்சியில் இருந்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சி என்பது அபரிதமானது. அப்போது அம்பாறை மாவட்டத்தில் 3 பாராளுமன்ற ஆசனங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரேயொரு ஆசனம் மட்டுமே கிடைத்தது. அதை வைத்துக்கொண்டு எதிர்கட்சியில் இருந்துகொண்டு அஷ்ரஃப் செய்த அரசியல் என்பது சாமானியமானதல்ல. 

இன்று முஸ்லிம் காங்கிரஸுக்கு அம்பாறையில் 3 பாராளுமன்ற ஆசனங்கள், கிழக்கு மாகாணத்தின் ஆட்சி அதிகாரம், தலைவருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு நாங்கள் செய்பவற்றை அன்று அஷ்ரஃப் எதிர்க்கட்சியில் இருந்து, தனியொரு மனிதனாக செய்துகொண்டிருந்தார்.

6 வருடங்கள் எதிர்கட்சியில் இருந்துகொண்டு அஷ்ரஃப் பாராளுமன்றத்தில் செய்த சாகசங்கள் முஸ்லிம் காங்கிரஸை நாட்டின் மூலைமுடுக்கெங்கும் கொண்டுபோய் சேர்த்தது. அவர் கேட்கின்ற கேள்விகளால் அமைச்சர்களே ஆடிப்போனார்கள். அவருடைய பாராளுமன்ற உரைகளை கேட்பதற்கென்றே ஒரு கூட்டம் இருந்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டத்தாபனத்தில் செய்தியாளராக இருந்த ராசைய்யா தொகுத்து வழங்கிய பாராளுமன்றத்தில் இன்று நிகழ்ச்சியில் அஷ்ரஃபின் பேச்சைக் கேட்டு பலர் முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டார்கள்.

எதிர்க்கட்சி அரசியல் வாழ்க்கையில் அஷ்ரஃப் அனுபவிக்காத கஷ்டங்களே இல்லையென்று சொல்லலாம். ஒரு பராhளுமன்ற உறுப்பினாக இருந்துகொண்டு குடும்பத்துடன் வெறும் தரையில் படுத்துறங்கினார். முஸ்லிம் அரசியல் செய்வதற்கு யாரும் நிதியுதவி கொடுக்கவில்லை. இதனால் தேர்தல் காலங்களில் பல சவால்களுக்கு முகம்கொடுக்க முடியாமல் முஸ்லிம் காங்கிரஸ் பல கஷ்டங்களை சந்திக்க நேரிட்டது.

டாம் வீதியில் முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகம் இருக்கும்போது, அஷ்ரஃப் புதுக்கடை நீதிமன்றத்துக்கு சென்று வழக்காடி விட்டு வருவார். அதில் கிடைக்கும் அன்றைய வருமானத்தை வைத்துத்தான் கட்சி அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு தேநீர் வாங்கிக்கொடுப்பாhர். தளபாடங்களே இல்லாத கட்சி அலுவலகத்தில் வெறுந்தரையில் பத்திரிகைகளை விரித்து, அதில் சோற்றுப்பார்சல் சாப்பிட்டுத்தான் அஷ்ரஃப் இந்தக் கட்சியை வளர்த்தெடுத்தார்.

தாருஸ்ஸலாம் கட்டிட திறப்பு விழாவின்போது பத்திரிகையில் வெளியாகி அனுபந்தமொன்றில், ரவூப் ஹக்கீம் இந்த விபரங்களை ஒரு கட்டுரையாக எழுதியிருந்தார். அதனை வாசித்துப்பார்த்த அஷ்ரஃப், அவரை வெகுவாகப் பாராட்டினார். 

பிரேமதாசவை ஆட்சிபீடமேற்றுவதில் முஸ்லிம் காங்கிரஸின் வகிபாகம் மிகவும் பிரதானமானது. அதுபோல, முஸ்லிம் காங்கிரஸோ அல்லது அஷ்ரஃபோ இல்லையென்றால் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அப்போதே ஜனாதிபதியாக வந்திருப்பார். 1998 டிசம்பர் 19ஆம் திகதி நள்ளிரவில் அஷ்ரஃபுடன் பேச்சுவார்த்தையின் பலனாக அடுத்தநாள் பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் அரசியலில் தனியொரு மனிதனாக நின்று பெரும் சாதனையை அஷ்ரஃப் நிகழ்த்திக் காட்டினார்.

எதிர்க்கட்சி அரசியல் முடிந்து, அஷ்ரஃப் ஆளும்கட்சியில் சேர்ந்து கப்பல்துறை, புனர்வாழ்வு அமைச்சராக பதவியேற்றார். அப்போது நடைபெற்ற கூட்டமொன்றில் எதிர்க்கட்சியில் இருந்தபோது அனுபவித்த கஷ்டங்கள் குறித்து ரவூப் ஹக்கீம் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த அஷ்ரஃப் கூட்டத்திலேயே தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார்.

அஷ்ரஃப் இறுதியாக ஹாபிஸ் நஸீருடன் 7 நாட்கள் உம்ரா பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கிருந்து தொலைபேசி மூலம் ரவூப் ஹக்கீமை தொடர்புகொண்டு, முஸ்லிம் காங்கிரஸின் மரம் சின்னத்தை தேசிய ஐக்கிய முன்னணிக்கு (நுஆ) மாற்றவேண்டும் என்று 45 நிமிடங்களாக பேசியுள்ளார். ஆனால், முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகால அடையாளமாக இருந்த மரம் சின்னத்தை நுஆ கட்சிக்கு மாற்றுவதில் ரவூப் ஹக்கீமுக்கு உடன்பாடு இருக்கவில்லை.

உம்ரா கடமையை முடித்துவிட்டு நாடுதிரும்பியவுடன் கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் பெரியளவிலான பேராளர் மாநாட்டை அஷ்ரஃப் நடாத்தினார். அக்கரைப்பற்று உதுமாலெப்பை, றிஸ்வி சின்னலெப்பை ஆகியோர் ஐ.தே.க.வின் 500 ஆதரவாளர்களோ முஸ்லிம் காங்கிரஸில் அன்றையதினம் சேர்ந்துகொண்டார்கள். அப்போது கட்சியின் செயலாளராக இருந்த ரவூப் ஹக்கீமை அவரது பதவியிலிருந்து விலகுமாறு அஷ்ரஃப் வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் ஹிஸ்புல்லாவையும் இராஜினாமா செய்யச் சொன்னார்.

பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளராக டொக்டர் ஹப்ரத் நியமிக்கப்பட்டார். நுஆ கட்சியின் செயலாளராக ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் நுஆ கட்சியில் மரச் சின்னத்தில் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் களமிறக்கப்பட்டார். தாருஸ்ஸலாமில் நடைபெற்ற வேட்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வில், ரவூப் ஹக்கீமை ஆரத்தழுவி "நீ தேர்தலில் வென்று, என்னுடைய சபாநாயகராக இருப்பாய்" என்று ஆரூடம் கூறினார். ஆனால், அந்த தேர்தலில் ரவூப் ஹக்கீமின் பெற்ற வெற்றியை பார்ப்பதற்கு அவர் உயிரோடு இருக்கவில்லை என்பதுதான் சோகம். 

ஐக்கிய தேசியக் கட்சி டி.எஸ். சேனநாயக்கவை நினைவுகூருவதுபோல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவை நினைவுகூருவதுபோல, மக்கள் விடுதலை முன்னணி விஜயவீரவை நினைவுகூருவதுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தந்தை செல்வாவை நினைவுகூருவதுபோல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம்.எச்.எம். அஷ்ரஃபை நினைவுகூரத் தேவையில்லை. ஏனென்றால், மறைந்தவர்களைத்தான் நினைகூரவேண்டும்.

ஆனால், முஸ்லிம் அரசியலுக்கு வித்திட்ட தலைவரின் நினைவுகள் அன்றும் இன்றும் எம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மாறாக அவர் முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுத்த அரசியல் அந்தஸ்துக்காக இன்று கொண்டாப்படுகிறார்.

மர்ஹூம் அஷ்ரஃபுக்கு அல்குர்ஆன் ஒதுவது என்பது மிகவும் பிடித்தமான விடயம். அதனைக் கொண்டாடும் வகையில், அஷ்ரஃபின் 16ஆவது ஞாபகார்த்த தினத்தில் கடந்தவருடம் "அழகிய தொனியில் அல்குர்ஆன்" எனும் தலைப்பில் பிரமாண்ட அல்குர்ஆன் ஓதும் போட்டியை நடாத்தியது.

அதுபோல இவ்வருடமும் அஷ்ரஃபின் ஞாபகார்த்த தினத்தில் சர்வதேச அல்குர்ஆன் ஆராய்ச்சி மாநாட்டை மிகப் பிரமாண்டமாக நடாத்துவதற்கு திட்டமிட்டிருந்து. எனினும், தவிர்க்கமுடியாத காரணங்களால் அந்த மாநாடு பிற்போடப்படுள்ளது. இதனால், கடந்த வருடம் நடைபெற்ற "அழகிய தொனியில் அல்குர்ஆன்" போட்டியில் வெற்றிபெற்றவர்களின் கிராஅத் மீள் அரங்கேற்றத்துடன் அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நினைவு நிகழ்வு "தோப்பாகிய தனிமரம்" எனும் தலைப்பில் பொத்துவில் நகரில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாருஸ்ஸலாம் ஏற்பாடு செய்த "தோப்பாகிய தனிமரம்" அஷ்ரஃப் நினைவேந்தல் நிகழ்வு பொத்துவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் வாஸித் தலைமையில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், எஸ்.எச். ஆதம்பாவா மௌலவி, மு.கா. தவிசாளர் அப்துல் மஜீத், கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பர், முதலமைச்சர் நஸீர் அஹமட் ஆகியோர் மர்ஹூம் அஷ்ரஃபுடன் இருந்த காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்துகொண்டனர். 

கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற முன்னாள் உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.

(நன்றி: நவமணி 18.09.2017)
Previous Post Next Post