(க.கிஷாந்தன்)
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்தை பகுதி பிரதேசவாசிகள் 03.09.2017 அன்று காலை 10 மணியிளவில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வசிக்கும் பிரதேசவாசிகள் பருகும் குடிநீரில் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்து கசிவுக்குள்ளாகிய மசகு எண்ணெய் பிரதேசவாசிகள் குடிநீர் பெற்றுக் கொள்ளும் பிரதான நீர்தாங்கியில் கலப்பதை எதிர்த்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் குடிநீரை பெற்றுக்கொள்ளும் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இந்த விடயத்தில் உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இப்பகுதிக்கான குடிநீரையும் சுத்திகரிப்பு நடவடிக்கையில் அதிகாரிகள் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த வட்டவளை பொலிஸார் குறித்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தின் முகாமையாளருடன் பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்போது முகாமையாளர் மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தற்காலிகமாக ஒரு நீர்குழாய் ஒன்றினை அமைத்துக் கொடுப்பதாக உறுதி தெரிவித்ததையடுத்து எதிர்ப்பு நடவடிக்கை தற்காலிகமாக நிறைவுக்கு வந்துள்ளமை மேலும் குறிப்பிடதக்கது.