முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு தொடுக்க முடியும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சில் துணிகளை விநியோகிக்குமாறு உத்தரவிட்டது தாமே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக் கொண்டுள்ளார். எனவே அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம் என்று அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு 24 நாட்கள் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்பாடல் ஒழுங்குறுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட ஆகியோருக்கு சிறைத்தண்டனையுடன் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
இத்தகைய பின்னணியில் தாமே சில் துணிகளை விநியோகிக்குமாறு உத்தரவிட்டதாக திரு மஹிந்த ராஜபக்ஷ கூறுவாராக இருந்தால், அதன் அடிப்படையில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
வோட்டர்ஸ் எட்ஜ் காணி வழக்கில் திருமதி சந்திரிக்கா குமாரதுங்கவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை அவர் இதன்போது நினைவுகூர்ந்தார்