சர்வதேச ரீதியில் கண்டனத்தை சம்பாதித்துள்ள மியன்மார் முஸ்லிம்களின் படுகொலை விடயத்தில் மஹிந்த அணி அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியான கூட்டு எதிர்க்கட்சி மற்றும் பொதுஜன பெரமுண கட்சி என்பவற்றின் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் குழுவொன்று இன்று இலங்கையில் உள்ள மியன்மார் தூதுவரைச் சந்தித்து அந்நாட்டு அரசாங்கத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மியன்மாரில் சிறுபான்மை ரோஹிங்கிய முஸ்லிம்கள் பெரும்பான்மை பௌத்தர்களால் இனப்படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிராக சர்வதேச மட்டத்தில் எதிர்ப்புக் குரல்களும் கண்டனங்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மியன்மாரில் இனப்படுகொலை நடைபெறவே இல்லை என்றும் அவ்வாறான பொய்ப்பிரச்சாரம் ஒன்றின் மூலம் அடிப்படைவாதிகள் சிலர் பௌத்த மதத்துக்கு களங்கம் ஏற்படுவதாகவும் மஹிந்த அணியின் முக்கியஸ்தர்கள் மியன்மார் தூதுவருடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளனர்.
எனவே மியன்மார் அரசாங்கத்துக்கு தமது ஆதரவை தெரிவித்துக் கொள்வதாகவும், இவ்வாறான நெருக்கடிமிக்க நிலையில் மியன்மார் பௌத்தர்களுடன் இலங்கை பௌத்தர்கள் கைகோர்த்துக் கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அடிப்படைவாத தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டவை என்று தெரிவித்துள்ள மேற்குறித்த குழுவினர் அது தொடர்பாக தமது மனவருத்தங்களையும் மியன்மார் தூதுவரிடம் வெளிப்படுத்தியுள்ளனர்.
மியன்மார் தூதுவரைச் சந்தித்து ஆதரவு தெரிவிக்கச் சென்ற குழுவில் மஹிந்த தரப்பு முக்கியஸ்தர்களான முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, மாதுரு ஓயா தம்மிஸ்ஸர தேரர், கலாநிதி சன்ன ஜயசுமன, விசேட வைத்திய நிபுணர் அசோக கமலதாச, இலங்கை-மியன்மார் நட்புறவுச் சங்கத்தின் தலைவர் குமார சேமகே உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.