(பழுலுல்லாஹ் பர்ஹான்)
எமது சமூகத்துக்காக ஓர் அணி திரள்வோம் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடியில் ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக பெண்கள்,சிறுவர்கள் மாத்திரம் கலந்து கொண்ட கவனயீர்ப்பு போராட்டமும், மஹஜர் கையளிப்பும் இன்று 04 திங்கட்கிழமை மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவியும்,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்ஸாவின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் முகமூடி அணிந்த நிலையில் சில பெண்களும், முகமூடி அணியாமல் சில பெண்களும்,சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் இலங்கையின் நல்லாட்சி அரசே இம் மனிதப் பேரவலத்தைக் கண்டியுங்கள்,மியன்மார் அரச தலைவியே உமக்கு நோபல் பரிசு தந்தது இவ்வாறான கொலை புரிவதற்கா?,மியன்மார் அரச தலைவியே நீயும் பெண்தானே –உமக்கு அட்டூழியங்களை தடுக்க மனித நேயமற்று இருப்பது ஏனோ?,அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம்களை பாதுகாப்போம் ,அழிகிறது மனித இனம் ஐநா சபையே நிறுத்து படுகொலையை,நிறுத்து நிறுத்து முஸ்லிம் படுகொலைகளை நிறுத்து,ஐக்கிய நாடுகள் சபை ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்,அரபுலகமே இன்னும் ஏன் மௌனம்??,மியன்மார் அரசே ரோஹிங்யா குழந்தைகளை கொல்லாதே,மியன்மார் அரசே மனிதப் படுகொலையை நிறுத்து,யுத்த தருமத்தை மீறி பெண்களை ,சிறுவர்களை கொலை செய்கிறாயே நிறுத்து கொலையை,முஸ்லிம் தலைவர்களே முஸ்லிம்களைக் காப்பாற்றுங்கள்,துருக்கித் தலைவரே குரல் கொடுக்கும் உங்களுக்கு எங்கள் நன்றிகள் போன்ற பல்வேறு தமிழ்,ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
அமைதியான முறையில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ரோஹிங்யா முஸ்லிம் மனிதப்படுகொலையை, இனச் சுத்திகரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்,மியன்மாரில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு குடியுரிமையை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்புவற்காக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா அமீர் ஹம்ஸாவினால்; காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மிலிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.