மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும். அத்துடன் கொடூர கொலைத்தாக்குதல்களை நிறுத்தி உடனடியாக ஐ.நா. விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி இன்று ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று அட்டாளைச்சேனை கோணாவத்தையில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்டப் பொதுப் பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் யூ.எல்.எம்.வாஹிட், பிரதி சுகாதார அமைச்சின் இணைப்பாளர் போராளி சுபியான் ரமீஸ், வைத்திய கலாநிதி டாக்டர் நக்பர் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைக்காக வந்திருந்த பெரும்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு உடனடியாக அராபிய நாடுகள் கடும் போக்குடனான கட்டளைகளையிட வேண்டும் என்றும் வல்லரசுகள் முஸ்லீம்கள் விடயத்தில் பொடுபோக்காய் இருப்பதனை கண்டிக்கிறோம் என்றும், ரோஹிங்கிய முஸ்லீம்களுக்கு சரியான பாதுகாப்பு வழங்க நடவடிக்க எடுக்க வேண்டும் அல்லது அம்மகளுக்கு பிறநாடுகளில் அடைக்கலம் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கோசம் எழுப்பினர்.
அத்துடன் மியன்மாரில் ராங்கைன் மாநிலத்தில் சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்கள் அங்கு 1200 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருவதாக வரலாற்றுச் சான்றுகள் இருந்தும் அம்மக்களுக்கு குடியுரிமை வழங்க மியன்மார் அரசு முன்வரவில்லை. குடியுரிமை இல்லாமையால் எந்த உரிமையும் அற்ற சமூகமாக மிகவும் மோசமான முறையில் பௌத்த தேசியவாத அமைப்புக்களாலும் - மியன்மார் அரசினாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். உலகின் மிகப்பெரிய ‘நாடற்ற சிறுபான்மை சமூகமாக’ அடையாளப்படுத்தப்படும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது பௌத்த தேசியவாத அமைப்புக்களினதும் - மியன்மார் இராணுவத்தினதும் வரம்பு மீறிய அட்டூழியங்கள், தாக்குதல்கள் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளன”
குறித்த நாட்டுக்குள் சமூத தொண்டு நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள், விசாரணைக் குழுக்கள் யாரையும் அனுமதிக்க முடியாது என்று அந்நாட்டு அரசு பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில் அங்கு பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் மக்களின் சரியான நிலமையினை கண்டு அல்லது கேட்டறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே குறித்த கொடூரமான கொலைக்களமாக மாறியுள்ள மியன்மார் பிரச்சனையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த அம்பாரை மாவட்ட பொதுப்பணிகள் அமைப்பின் தலைவரும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ்.எல்.முனாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.