வடக்கு கிழக்கில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ஒரு கலாசாரம் பிராந்திய சர்வதேச நிகழ்ச்சி நிரலோடு இணைந்து இடம்பெறுமாகவிருந்தால் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும். இது திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. இது பல்வேறு சர்வதேச அரசியலுடன் தொடர்புபட்டுள்ளது. ஆகவே தமிழ், முஸ்லிம் தரப்பு இதனை நிதானமாகவும் பொறுப்பாகவும் கையாளவேண்டும் என சித்திலெப்பை ஆய்வு மையத்தின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் "ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்" எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது "வடக்கு கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களும்" எனும் தலைப்பில் பதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் புதிய அரசியலமைப்பு தொடர்பான தெளிவுபடுத்தல் கூட்டம் "ஓர் அரசியல் தீர்வை எதிர்கொள்ளல்" எனும் தலைப்பில் செவ்வாய்க்கிழமை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது "வடக்கு கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களும்" எனும் தலைப்பில் பதில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில், வடக்கு, கிழக்கு இணைப்பும் முஸ்லிம்களும் என்ற விவகாரம் சர்ச்சைக்குரிய விடயம் அல்ல. சந்தைக்கு வரவேண்டிய விடயம். கத்தரிக்காய் முற்றினால் சந்தைக்கு வந்துதான் ஆகவேண்டும். அந்த யதார்த்தத்தை பேசுவதற்கு முஸ்லிம் தரப்பிலிருந்து பொறிமுறை எதுவுமில்லை என்பதுதான் எமது முதலாவது குற்றச்சாட்டாகும். காணி நிலம் வேண்டும் என பாரதி பாடினான். சமஷ்டி பற்றி பேசினாலும் வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றிப் பேசினாலும் அவை நிலம் சார்ந்த அரசியல் பரிமாணங்களேயாகும்.
வடக்கும் கிழக்கும் நில ரீதியாக இணைந்த பிரதேசம், தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலம் என்ற அடிப்படையில் 1956 ஆம் ஆண்டு திருமலை மாநாட்டிலிருந்து ஒன்றாகவே இருந்துள்ளோம். தமிழ் மக்களுக்கு சமஷ்டி பேசப்படும் போது முஸ்லிம்களுக்கு தென்கிழக்கு அலகு பற்றிப் பேசப்பட்டு வந்தது. கங்காருவும் குட்டியும்போல தமிழ்த்தேசத்தின் மடியிலேதான் முஸ்லிம் தேசியம் அடைகாக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
இருப்பினும் ஆங்காங்கே நடந்த கருத்தியல் சம்பவங்களும் ஆயுதக்குழுக்களின் துன்பியல் சம்பவங்களும் எங்களுடைய தாய்மையை கேள்விக்குள்ளாக்கியது. அவ்வாறு கேள்விக்குள்ளாக்கப்பட்டதன் விளைவாக வடக்கு கிழக்கு இணைப்பிற்கு முஸ்லிம்கள் எதிரானவர்கள் என்று இந்த அரசாங்கம் திட்டமிட்ட பரப்புரையை முன்னெடுத்துவருகின்றது.
வடக்கு கிழக்கு இணைப்பு என்று வருகின்றபோது தமிழர்களும் முஸ்லிம்களுக்கு பேச வேண்டும் என்பதோடு வடக்கும் கிழக்கும் பேசவேண்டும் என்ற இரு நிலமைகள் உள்ளன. வடகிழக்கு இணைப்புக்குறித்து முஸ்லிம்களில் உள்ள பொறிமுறைக் கோளாறுகளை வடமாகாண தரப்புக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
வடக்கு கிழக்கு இணைப்பிற்காக உருவாக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை மையப்படுத்திய முஸ்லிம் தலைமை கால ஓட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு வெளியில் சென்றமையால் இந்த விடயத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கின்ற துரதிஷ்ட வசமான நிலமை ஏற்பட்டிருக்கின்றது.
சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு என்ற விடயத்தை குறிப்பிட்டிருந்தார். செய்கூலி தெரிந்த ஒருவருக்குத்தான் சேதாரம்பற்றிய வலி தெரியும். இவருக்கு செய்கூலியும் தெரியாது சேதாரமும் தெரியாது.
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக அவர் மௌனமான பார்வையாளராக செயற்படுகின்றார். வடக்குகிழக்கு முஸ்லிம்கள் தொடர்பாக உரித்தோடு உரத்த தொனியில் பேசினால் அவரால் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது போய்விடும்.
இதேபோன்று வடக்குகிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த்தேசியத்தினை எடுத்துக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் பிம்பமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொறிக்குள் சிக்குண்டுள்ளது.
இதேபோன்று வடக்குகிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ்த்தேசியத்தினை எடுத்துக்கொண்டால் ஐக்கிய தேசியக் கட்சியின் பிம்பமாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பொறிக்குள் சிக்குண்டுள்ளது.
இவ்வாறான நிலையில் முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் தேர்தல் நலனை மட்டும் மையமாக வைத்து செயற்படும் அரசியல் கட்சிகளுக்கு அப்பால் தேசிய முஸ்லிம் தலைமைத்துவ சபை ஒன்று அவசியம் எனக் கருதினார்கள். இதன் காரணத்தால் கிழக்குமாகாண சிவில் சமூகம் மற்றும் அரசியல் வாதிகள் கூட்டிணைந்து கிழக்கு மக்கள் அவையம் என்பதை உருவாக்கியுள்ளோம். கிழக்கு மக்கள் அவையத்தின் இணைச் செயலாளர் என்ற வகையில் தமிழ் மக்கள் பேரவையுடன் கிழக்கு மக்கள் அவையம் வடக்குகிழக்கு இணைப்புத் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலைச் செய்வதற்கு பகிரங்க அழைப்பை இந்த இடத்தில் விடுக்கின்றது என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தற்போது வடக்கு கிழக்கு இணைப்பு விவகாரத்தில் கிழக்கிலுள்ள முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் பற்றி தவறான கருத்துக்களை வடக்கிலும் வடக்கிலுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் பற்றி கிழக்கிலும் தவறாக பிரசாரம் செய்கின்றார்கள். தமிழர்கள், முஸ்லிம்கள் ஒரு மேசைக்கு வருகின்றபோது வடகிழக்கு இணைப்பு என்பது பெரியதொரு விடயமல்ல.
இந்த இடத்தில் மற்றுமொரு முக்கியமான விடயத்தைக்கூறக் கடமைப்பட்டுள்ளேன். அமெரிக்காவும் சீனாவும் இந்தியாவும் இலங்கையில் நடத்தும் சித்து விளையாட்டில் தமிழ், முஸ்லிம் உறவை கூறுபடுத்தி வைத்திருக்கவே விரும்புகின்றார்கள். இதற்கு முதலில் தீர்வைக் காண வேண்டும். தமிழர்களின் அரசியல் மையம் வடக்கிலும் முஸ்லிம்களின் அரசியல் மையம் கிழக்கிலும் இருக்கின்றது என்ற யாதார்த்தத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
வடகிழக்கு இணைக்கின்றபோது இந்தியாவிலே முஸ்லிம்களுக்கு இருக்கின்ற காப்பீடு தொடர்பான பிரச்சினை போன்று ஒன்றிணைந்த இந்த பூமியில் அவ்வாறான ஒரு நிலமை ஏற்பட்டு விடுமோ என்ற சந்தேகம் முஸ்லிம்களுக்கு இருக்கின்றது. இதற்கு இரு தரப்பிற்கும் இடையில் உரிய பேச்சுவார்த்தை முறைமை காணப்படாமையே காரணமாகின்றது.
என்னுடைய தந்தையார் காலத்திலிருந்த தமிழ், முஸ்லிம் உறவும் என்னுடைய காலத்தில் இருக்கும் தமிழ் முஸ்லிம் உறவும் என்னுடைய பிள்ளைகளுடைய காலத்தில் இருக்கப்போகின்ற தமிழ், முஸ்லிம் உறவும் ஒரே நேர்கோட்டில் இருப்பதற்காக பொறிமுறையை உருவாக்கவேண்டும் என்பதை தமிழ்த் தரப்பினரிடம் வினயமாக கேட்டுக்கொள்கின்றேன்.
அளுத்கமவில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் ஆட்சியாளர்களை மாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சதி என்றே நான் கருதுகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக பல சர்வதேச சதிகள் இருந்தன என முதலமைச்சர் குறிப்பிட்டிருந்தார். மகிந்த ராஜபக் ஷ புனிதமானவர் என நான் கருதவில்லை. அவ்வாறு இருக்கையில் ஆட்சிக்கு வந்தவர்களும் முஸ்லிம்களுக்கான சட்டத்தில் கைவைத்தார்கள். அவ்வாறு கைவைப்பதற்காக காரணத்தின் பின்னணியைப் பார்க்கவேண்டியுள்ளது.
முஸ்லிம்களுக்கான சட்டத்தில் கைவைக்கின்ற போது இளைஞர்கள் உணர்சிவப்படுவார்கள். அவர்களை அடுத்த கட்டம் தீவிரவாதிகளாக சித்திரிப்பதேயாகும்.
வடக்கு கிழக்கில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் ஒரு கலாசாரம் பிராந்திய சர்வதேச நிகழ்ச்சிநிரலோடு இணைந்து இடம்பெறுமாகவிருந்தால் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குட்படுத்தும்.
இது திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. பல்வேறு சர்வதேச அரசியலுடன் தொடர்புபட்டுள்ளது. ஆகவே தமிழ் முஸ்லிம் தரப்பு இதனை நிதானமாகவும் பொறுப்பாகவும் கையாளவேண்டும் என்றார்.