Top News

மஹிந்த தன் வாயால் மாட்டிக் கொண்டுள்ளார்- விஜித ஹேரத்


“சில் ஆடை” விநியோக சம்பவம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கை முன்னெடுக்கப்படும் காலகட்டத்தில்,  தான் சம்பவத்துக்கு பொறுப்பு என்பதை ஏற்றுக் கொள்ளாத மஹிந்த ராஜபக்ஷ, வழக்கு தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் அதற்கான பொறுப்பு தான் என கூறுவதன் மூலம் இந்நடவடிக்கை திட்டமிட்ட ஒரு செயற்பாடு என்பது தெளிவாவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்ல, பலவத்தவிலுள்ள ஜே.வி.பி.யின் பிரதான காரியாலயத்தில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

19 ஆவது அரசியல் யாப்பு திருத்தச் சட்டத்தில் அரச அதிகாரி யார் என்பது குறித்து வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, 19 ஆவது சரத்தை வாசிக்குமாறு நாம் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொள்கின்றோம். 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஏற்ப ஜனாதிபதியின் செயலாளர் ஒரு அரச நிறுவாகியாவார். 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு முன்னரும் ஒரு அரச நிறுவாகிக்கு அரசியல் யாப்புச் சட்டத்துக்கு முரணா செயற்பட முடியாது என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.

எமது நாட்டில் அரச நிறுவாகியாகவுள்ள ஒருவர் சர்வதேச சட்டமொன்றையாவது மீறி நடக்க முடியாது. எழுத்து மூல சட்டதிட்டங்களின் அடிப்படையில் அவர் செயற்பட கடமைப்பட்டுள்ளார். இதனால், மஹிந்த ராஜபக்ஷாக்களுக்கு அரசியல் அமைப்புக்கு மாற்றமாக செயற்பட்டு, லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டிலிருந்து தப்ப முடியாது.

இன்றுள்ள பிரச்சினை லலித் வீரதுங்க அரசியலமைப்புக்கு ஏற்ப திருடரா? அரசியலமைப்புக்கு எதிரான திருடரா? என்பதல்ல. அவர் அரச நிருவாகி அல்ல எனக் கூறுவதாயின், அவர் ஒரு  சாதாரண  நபராக இருந்து கொண்டு  ரி.ஆர்.சி. யிலிருந்து 600 மில்லியன் ரூபா எடுத்து சில் ஆடை விநியோகிக்க முடியுமா? என்பதாகும்.

அதேபோன்று, இந்நடவடிக்கை அரசாங்கத்தின் கொள்கையில் உள்ள ஒரு நடவடிக்கையே என மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார். அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தால், அது வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடங்கப்பட்டிருக்க வேண்டும். அது அப்படி பதிவாகவும் இல்லை.

அத்துடன், இந்த ரி.ஆர்.சி. யில் ஒரு வருடத்துக்கான வேலைத்திட்டமாக குறித்த சில் ஆடை விநியோக நடவடிக்கை அமைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷாக்கள் கூறுகின்றனர். இருப்பினும், இதற்கான எந்தவொரு எழுத்து மூல சாட்சிகளும் இல்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனால், அரச நிதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது.

 தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷாக்கள் தாம் பொறுப்பை ஏற்பதாக கூறுகின்றனர். இருப்பினும், நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெறும் போது இந்த பொறுப்பை ஏற்க அவர்கள் முன்வரவில்லை. இதனால், இந்த நடவடிக்கை மஹிந்த ராஜபக்ஷவும் லலித் வீரதுங்கவும் சேர்ந்து மிக திட்ட மிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒன்று எனவும் விஜித ஹேரத் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post