நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இன்று (07) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மலையகப் பகுதிகளிலும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காலி, பொத்துவில் ஊடான மட்டக்களப்பு கடற்கரைப்பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழைபெய்யும் வேளைகளில் கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அகலவத்தை, வலலவிட்ட, பலிந்துனுவர, இங்கிரிய, பதுரலிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற அவசர உதவி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.