பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் அப்போதைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோருக்கு எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் விக்ரமசேகரவின் கீழ் பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்ர விமலசிறி தலைமையிலான குழுவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் இவை கண்டறியப்பட்டுள்ளதாகவும், மிக விரைவில் தாஜுதீன் கொலை தொடர்பில் இதுவரை வெளிப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல்கள் வெளிப்படும் எனவும் நேற்று மன்றுக்கு அறிவிக்கப்பட்டது. பிரதி சொலிசிற்றர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க இதனை நேற்று மன்றுக்கு அறிவித்தார்.
வஸீம் தாஜுதீன் படுகொலை தொடர்பிலான வழக்கு விசாரணை நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ஜெயராம் டொஸ்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது இக்கொலை தொடர்பில் கைதாகி பிணையில் உள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, முன்னாள் நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய குற்றவியல் பொறுப்பதிகாரி சுமித் சம்பிக்க பெரேரா ஆகியோர் மன்றில் ஆஜராகி இருந்தனர்.
இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் டிலான் ரத்நாயக்க மன்றில் ஆஜரானார். குறித்த கொலை தொடர்பிலான விசாரணையின் தற்போதைய நிலைமையை அவர் மன்றுக்கு அறிவித்தார்.
இதன்போதே, கொலை இடம்பெற்ற தினத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலருக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் தொடர்பில் சாதகமான தகவல்களை மிக விரைவில் வெளிப்படுத்தும் கட்டத்தில் உள்ளோம் என தெரிவித்தார். தற்போதும் அது தொடர்பிலான விசாரணைகளைத் தொடர்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் அது தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க ஆலோசனை வழங்கிய நீதிவான், விசாரணை அறிக்கையை எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி சமர்ப்பிக்க உத்தரவிட்டு அன்றைய தினத்துக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.