Top News

சமூகத்தின் தன்மானத்தை விலையாகக் கொடுத்துவிட்டனர்; சிப்லி கவலை


கடந்த காலங்களில் எமது சமூகத்தைச் சேர்ந்த ஒரு சில அரசியல் வாதிகள் ஆட்சியில் உள்ளவர்களின் கால்களைப் பிடித்து தமது அதிகாரத்தினையும் அமைச்சுப் பதவிகளையும் தக்கவைத்துக் கொண்டதன் பலனாக எமது சமூகத்தின் பிரதிநிதிகள் இந்த சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக குரலெழுப்புகின்ற போது அதனை இந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் கவனத்தில் கொள்ளாமல் மாற்றமாக இவர்களுக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்தால் வாய் மூடி இருந்து விடுவார்கள் என்று கேவலமாக நினைக்கின்ற ஒரு நிலைமை இன்று ஏற்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சின் 7.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள காத்தான்குடி இயற்கை பசளை தயாரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு 2017.09.06ஆந்திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. அல்ஹாஜ் Z.A. நசீர் அஹமட் அவர்களும், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களும் கலந்துகொண்டு இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர். இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துவிட்டு உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

இவ்வாறு சமூகத்தின் தன்மானத்தினை விற்று அரசியல் பிழைப்பு நடாத்த வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் எங்களுக்கு கிடையாது, அரசியல் எங்களுடைய தொழிலும் அல்ல மாறாக அரசியல் என்பது மக்கள் எங்களுக்கு தந்த ஒரு அமானிதமான பொறுப்பு ஆகும். அதனை இந்த சமூகத்தின் கௌரவம், உரிமைகள், அபிலாசைகள் என்பனவற்றை உரிய விதத்தில் பாதுகாத்து முன்கொண்டு செல்லவேண்டிய பொறுப்பு எங்களுக்கு உள்ளது.

ஆகவேதான் நாங்கள் முதலமைச்சர் தலைமையிலான கிழக்கு மாகாணத்தின் ஆட்சியினைப் பொறுப்பேற்று வெறுமெனே இரண்டு வருடங்களுக்குள் மாத்திரம் இந்த பிரதேசத்தில் 280 மில்லியன் ரூபா செலவிலான அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

ஆனால் நாங்கள் எந்தவொரு அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை என்ற ஒரு வேடிக்கையான கருத்தினை கௌரவ இராஜாங்க அமைச்சர் MLAM. ஹிஸ்புல்லாஹ் அவர்கள் அண்மையில் முன்வைத்திருந்தார்.

ஆனால் அதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தின் போது பிரதேச அபிவிருத்தி இணைத்தலைவர் என்ற வகையில் நாங்கள் கொண்டுவந்த வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு அவர்தான் அனுமதியளித்திருந்தார்.

அதுமாத்திரமல்லாமல் அண்மையில் நடைபெற்ற நகர சபை கட்டிட திறப்பு விழா தொடர்பாகவும் கௌரவ இராஜாங்க அமைச்சர் அவர்களால் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது. ஆகவே அதுவிடயம் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டிய ஒரு பொறுப்பு எமக்கு உள்ளது.

உலக வங்கியினுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாணம் பூராகவும் காத்தான்குடி நகர சபை கட்டிடம் உள்ளிட்ட 25 நகர சபை, பிரதேச சபைகளுக்கான கட்டிடங்கள் நெல்சிப் திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்டது.

இருப்பினும் காத்தான்குடி நகர சபை கட்டிடம் தவிர்ந்த ஏனைய கட்டிடங்கள் அவை எதற்காக அமைக்கப்பட்டதோ அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட வேளையில் காத்தான்குடி நகர சபைக்கென அமைக்கப்பட்ட சுமார் 11000 சதுர அடி பரப்பளவிலான கட்டிடம் மாத்திரம் ஒரு தனி நபரினுடைய சொந்த இலாபத்திற்காக தனியார் கல்லூரி ஒன்றிற்கு வெறுமெனே 5000 ரூபாய் மாதவாடகைக்கு மிக மோசடியாக தங்களுடைய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து குத்தகைக்கு பெறப்பட்டிருந்தது. ஆனால் இலங்கை மதிப்பீட்டுத் திணைக்களத்தினால் இதற்கான வாடகை 197,500.00 என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேலும் குறித்த கல்லூரியிடமிருந்து 2014ஆம் ஆண்டு 11ஆம் மாதம் குறித்த கட்டடத்தினை குத்தகைக்கு வழங்குமாறு விண்ணப்பக்கடிதம் அனுப்பப்பட்டிருக்க விண்ணப்பம் அனுப்பப்படுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே அதாவது 2014ஆம் ஆண்டு 5 ஆம் மாதம் அக்கல்லூரிக்கு நகர சபை கட்டடத்தினை வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. மேலும் தற்போதுவரை இதற்காக காத்தான்குடி நகர சபைக்கென சுமார் 60 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகையினை அவர்கள் செலுத்தவேண்டியுள்ளது.

ஆகவே இவ்வாறு தங்களுடைய அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்து மக்களுடைய பணங்களை வீணடித்துவிட்டு அவ்வாறன விடயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தமைக்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்ற கேவலமான அரசியல் கலாச்சாரங்களை் எமது சமூகத்திலிருந்து முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும்.

எனவே அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காக பொய்யான விடயங்களைக்கூறி நேரத்தை வீணடிப்பதற்கு மாற்றமாக எங்களுக்கு கிடைத்திருக்கின்ற அதிகாரத்தினை பயன்படுத்தி இந்த சமூகத்திற்கு முடியுமான சேவைகளை ஆற்ற தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்றோம்.

அந்த வகையில் எதிர்வருகின்ற செய்வாய்க்கிழமை இப்பிரதேசத்தில் சுமார் பத்து கோடி ரூபாய் அளவிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதோடு எதிர்காலத்திலும் மேலும் பல அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம் என தனது உரையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு. சித்திரவேல், காத்தான்குடி நகர சபையின் செயலாளர் SMM ஸபி, காத்தான்குடி நகரசபையின் முன்னாள் முதல்வர் மர்சூக் அஹமட் லெப்பை, காத்தான்குடி இளைஞர் காங்கிரஸ் தலைவர் இல்மி அஹமட் லெப்பை, ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் பாசித் மற்றும் நகரசபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், முக்கிய ஊர் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post