நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் நிலவும் விளையாட்டுத் துறைக்கான ஆசிரியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கடந்த சில நாட்களாக கல்வி அமைச்சில் நடைபெற்ற நேர்முகப் பரீட்சைக்கு 17 ஆயிரம் பேர் தோற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களில் 3860 பேர் விளையாட்டுத் துறை ஆசிரியர்களாக நியமிக்கப்படவுள்ளனர். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடம் சித்தியடையாத ஏனைய பாடங்களில் 3 திறமைச் சித்திகளைப் பெற்று ஆறு பாடங்கள் சித்தியடைந்துள்ளவர்கள் இந்த நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற தகுதி பெற்றனர். இத்தகைமைகளுடன் விளையாட்டுத் துறையில் உள்ள சிறப்புத் திறமைகள் விசேட தகைமையாக கொள்ளப்படும்.
நாட்டின் சகல மாகாணங்களிலுமுள்ளவர்கள் இந்த நேர்முகப் பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் தெரிவு செய்யப்படுபவர்கள், ஆசிரியர்கள் குறைபாடு நிலவும் பாடசாலைகளுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் கல்வி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.