பிறவ்ஸ்
முஸ்லிம் மக்கள் மத்தியில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று (27) அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன் மற்றும் அசாத் சாலி ஆகியோரை தனது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித வணிகசிங்க, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி, அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும் தற்போது கொழும்பு மாவட்ட அரசாங்க அதிபருமான சுனில் கன்னங்கர, நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
ஒரு மணித்தியாலத்துக்கு மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில், இதன்போது முஸ்லிம்கள் மத்தியில் நீண்டகாலமாக தீர்வுகாணப்படாமல் இருக்கின்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. இதில் சில பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வும், சில பிரச்சினைகளுக்கு தொடர்ந்து மேலதிக சந்திப்புகளை மேற்கொண்டு தீர்வுகளை எட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டன.
நீண்டகாலமாக மக்களுக்கு கையளிக்கப்படாத நிலையில் பாழடைந்து காணப்படும் நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை எதிர்வரும் ஜனவரி மாத்தில் பகிர்ந்தளிப்பதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது. இதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ள நிலையில், இவ்வீட்டுத்திட்டத்தில் 303 வீடுகள் முஸ்லிம்களுக்கும், 170 வீடுகள் தமிழர்களுக்கும், 130 வீடுகள் சிங்களவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் நிதியில் வீடுகள் துப்பரவாக்கப்பட்ட பின்னர், அவை மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அதன்பின்னர் சவூதி நிறுவனமொன்றின் நிதியைப் பெற்று அவற்றை புனரமைப்புச் செய்வதற்கான நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு இதன்போது இணக்கம் காணப்பட்டது.
அடுத்து நீண்டகாலமாக இழுபறி நிலையிலுள்ள தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை தொடர்பாக பேசப்பட்டது. பள்ளிவாசல் புனிதபூமி பிரதேசத்துக்குள் வருவதாக கூறப்படுகின்ற காரணத்தினால், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள 40 பேர்ச் காணியில் பள்ளிவாசலை அமைப்பதற்கு அனுமதி வழங்குமாறு இதன்போது கோரப்பட்டது.
தம்புள்ளை சந்தைக்கு அருகில் 20 பேர்ச் காணியை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க, எதிர்ப்பினால் அதை கைவிட்டுள்ளார். பள்ளிவாசல் அமையப்பெறும் காணி விடயத்தில் தீர்க்கமானதொரு முடிவு எட்டப்படாத நிலையே காணப்படுகிறது. எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட எல்லா அரசியல்வாதிகளுடனும் பேசி, இதற்கான தீர்வை மேற்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
கிரண்ட்பாஸ் பள்ளிவாசல் தற்போது பழைய இடத்திலும் பள்ளிவாசல் இல்லை, புதிய இடத்திலும் பள்ளிவாசல் இல்லை. இது உங்களுடைய தேர்தல் காலங்களில் பேசப்பட்ட விவகாரம். தற்போது மறக்கடிக்கடிக்கப்பட்டுள்ள இப்பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள் என்று ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் வேண்டிநின்றார்.
விரைந்து இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வொன்றை வழங்குங்கள். இதைத் தீர்ப்பதற்கு ஏதாவது உதவிகள் தேவைப்படின் என்னை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஜனாதிபதி, நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தெஹிவளை, பாத்தியா மாவத்தையிலுள்ள பள்ளிவாசல் பிரச்சினைகள் தொடர்பாக அசாத் சாலி விளக்கமளித்தார். குறித்த பள்ளிவாசல் கட்டிடம் சட்டவிரோதமானது என்றும் அதனை அகற்றுமாறும் நகர அபிவிருத்தி அதிகாரசபை அடிக்கடி அனுப்பிவருவதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து கலந்துரையாடிய பின்னர் தீர்வுகளை வழங்குவதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக நிலவிரும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதிக்கு விளங்கப்படுத்தினார். காணப்படும் இடங்களுக்கு களவிஜயம் மேற்கொண்டு பிரச்சினைகளை நேரில் அவதானித்தோம்.
உங்களது அமைச்சின் கீழ் வருகின்ற வன பாதுகாப்பு திணைக்களமும், வன ஜீவராசிகள் திணைக்களமும்தான் இப்பிரச்சினைக்கு முட்டுக்கடையாக இருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் அவர்கள் விருப்பமில்லாமல் இருக்கின்றனர். இறுதியாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலும் எனக்கு திருப்தியில்லை. எனவே, நீங்கள்தான் இப்பிரச்சினையை தீர்த்து தரவேண்டும் என்று ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் காட்டமாக தெரிவித்தார்.
அடுத்து, வட்டமடு காணப்பிரச்சினை தொடர்பில் ரவூப் ஹக்கீம் விளக்கமளித்தார். வட்டமடுவில் நீண்டகாலமாக விவசாயம் செய்துவந்தனர். இப்போது அது முற்றாக தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையில், மாரிப் போகத்திலாவது அங்கு விவசாயம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு தனியொரு கலந்துரையாடலை மேற்கொண்டு அதற்கான தீர்வுகள் குறித்து தீர்க்கமான முடிவுகளை எடுப்போம் என ஜனாதிபதி இதற்கு பதிலளித்தார்.
இறக்காமம், மாணிக்கமடுவிலுள்ள மாயக்கல்லிமலையில் அடாத்தாக பெளத்த மடாலயம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது. தொல்பொருளியில் திணைக்களத்தினால் பாதுகாப்பு பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் எப்படி புதிய கட்டிடங்களை கட்டமுடியும் என்று ரவூப் ஹக்கீம் கேள்வியெழுப்பினார்.
புதிய கட்டிடம் கட்டுவதற்கு தொல்பொருளியில் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்படக்கூடாது. வெளியிலிருந்து படையெடுத்து கிளம்பி வருகின்றவர்கள்தான் இங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். இதற்கு இடமளிக்காமல் உறுதியான சில முடிவுகளுக்கு வரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
மெளலவி ஆசிரியர் நிமயனங்கள் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடப்பட்டது. 300 வெற்றிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது 170 பேருக்கு மெளலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சில மாகாணங்களில் இதற்கு நேரடியாக பட்டதாரிகளை உள்வாங்குவதற்கு தீர்மானித்திருக்கிறார்கள்.
தமிழ்மூல பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்கள் மற்றும் மெளலவி ஆசிரியர் நியமனங்கள் தொடர்பில் தீர்க்கமான முடிவுகளை எட்டுவதற்கு உங்களது தலைமையில், மாகாண கல்வி அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்கள் மற்றும் மத்திய கல்வி அமைச்சரை அழைத்து திறந்த கலந்துரையாடலொன்றை நடாத்துமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் ஆலோசனை கூறினார்.
அவர்களை விரைவில் அழைத்துவந்து இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம். அதற்குமுன் தற்போது ஆயத்தமாகவுள்ள மெளலவி ஆசிரியர் நியமனங்களை விரைவில் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று ஜனாதிபதி இதன்போது உத்தரவிட்டார்.