Top News

முஸ்லிம் மக்களை சுயநல அரசியலுக்காக ரவூப் ஹக்கீமே திட்டமிட்டு பிரித்தார் #Hathim



கல்முனை, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் வாழ்கின்ற முஸ்லிம் மக்களுக்கு இடையில் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பிரதேசவாதம், பிரிவினைவாதம் ஆகியவற்றை உருவாக்கி வைத்திருக்கின்றார் என்று கல்முனை வர்த்தகர் சங்க தலைவரும், கல்முனை பட்டின சபையின் முன்னாள் தலைவர் கே. கே. மரைக்காரின் புதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத்தின் சகோதரருமான தொழிலதிபர் ஷாபி ஹாதிம் தெரிவித்தார்.

கல்முனை பள்ளிவாசல் பொது அமைப்புகளின் சம்மேளனம் ஒரு மாத காலத்துக்கு முன்னர் கொழும்புக்கு சென்று அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா ஆகியோரை சந்தித்து பேசியது. இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் மாநாடு ஒன்றை ஷாபி ஹாதிம் நேற்று புதன்கிழமை நடத்தினார்.
இவர் இங்கு தெரிவித்தவை வருமாறு:-

1897 ஆம் ஆண்டு கால பகுதியில் இருந்து 1987 ஆம் ஆண்டு வரை கல்முனையில் 04 உள்ளூராட்சி சபைகள் இயங்கின. கல்முனை பட்டின சபை கல்முனையிலும், கரைவாகு தெற்கு கிராம சபை சாய்ந்தமருதிலும், கரைவாகு வடக்கு கிராம சபை மருதமுனை, பாண்டிருப்பு ஆகியவற்றை சேர்த்ததாகவும், கரைவாகு மேற்கு கிராம சபை சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை ஆகியவற்றை சேர்த்ததாகவும் இயங்கின. கரைவாகு வடக்கு கிராம சபை, கரைவாகு மேற்கு கிராம சபை ஆகியவற்றின் தலைவர்களாக தமிழர்கள் வந்து உள்ளனர். புரிந்துணர்வு அடிப்படையில் கல்முனை பட்டின சபையின் தலைவர் பதவி தமிழருக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களும் இருந்து உள்ளன. உண்மையில் கல்முனையில் அன்றைய காலத்தில் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கு இடையில் மிக நல்ல உறவு நிலவி வந்தது.

ஆனால் மேற்சொன்ன 04 உள்ளூராட்சி சபைகளையும் சேர்ந்த மக்களின் அபிப்பிராயம், ஒப்புதல் ஆகியவற்றை பெறாமல், இவற்றை ஒன்றாக சேர்த்து 1987 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டது. அது கால ஓட்டத்தில் நகர சபையாகவும், மாநகர சபையாகவும் மாற்றப்பட்டது.

ஆனால் சாய்ந்தமருது பிரதேச மக்கள் அவர்களுக்கு தனியான பிரதேச சபை வேண்டும் என்று அண்மைய பல வருடங்களாக தொடர்ச்சியாக கோரி வருகின்றனர். இவ்வாறு கோருவதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது என்பதில் மறுப்போ, மாற்றமோ எமக்கு கிடையாது. ஆனால் கல்முனையில் இயங்கி வந்த 04 உள்ளூராட்சி சபைகளும் மக்களின் அபிப்பிராயம், ஒப்புதல் ஆகியன பெறப்படாமல் ஒன்றாக சேர்க்கப்பட்டதால் மாற்றீடாக 04 பிரதேச சபைகள் கட்டாயம் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும். மாறாக சாய்ந்தமருதுக்கு மாத்திரம் பிரதேச சபை அமைத்து கொடுக்கப்படுவது மற்றைய மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகத்தான் இருக்கும். ஆகவேதான் நாம் அவசரமாக கொழும்புக்கு சென்று அமைச்சர்களை சந்தித்து கல்முனையில் 04 பிரதேச சபைகளை உருவாக்கி தாருங்கள் என்கிற கோரிக்கையை வலியுறுத்தினோம். அவர்களும் எமது கோரிக்கையில் நியாயம் உள்ளது என்பதை ஏற்று கொள்வதாக தெரிவித்து எமது கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பார்கள் என்று உறுதிமொழி வழங்கினார்கள். இதை அடுத்தே சாய்ந்தமருதை தனியான பிரதேச சபையாக பிரகடனப்படுத்துகின்ற வர்த்தமானி அறிவித்தல் இன்னமும் வெளிவரவில்லை.
ஆனால் 04 பிரதேச சபைகளையும் உருவாக்கி தருகின்ற நடவடிக்கையில் ரவூப் ஹக்கீம் முழுமையான நழுவல் போக்கையே கைக்கொள்கின்றார் என்பதும், இவருக்கு கல்முனையை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் ஒத்து ஊதுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கவை ஆகும். ரவூப் ஹக்கீம், ஹரிஸ் ஆகியோர் காரணமாகத்தான் இவ்விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படுவதாக இல்லை. இன்று கல்முனை, சாய்ந்தமருது மக்களுக்கு இடையில் பிரதேசவாதம், பிரிவினைவாதம் ஆகியன தலை விரித்து ஆடுகின்றன என்றால் அதற்கு அடிப்படை காரணி ரவூப் ஹக்கீமே ஆவார். கிழக்கிலங்கையில் நாகரிகத்தின் கருவூலமாக கல்முனை மண் அறியப்படுகின்றது. இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் கேந்திர நிலையமாக விளங்குகின்றது. ஆகவேதான் ஸ்ரீலங்கா முஸ்லிம்களுக்கான தீர்வுகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பால் வலியுறுத்தப்பட்ட பெரும்பான்மை முஸ்லிம் மாகாண கோரிக்கையாக இருக்கட்டும், தென்கிழக்கு அலகாக இருக்கட்டும், கரையோர மாவட்ட கோரிக்கையாக இருக்கட்டும் அவை கல்முனையை மையப்படுத்தியவையாக உள்ளன. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் உண்மையான அரசியல் எழுச்சி கல்முனை மண்ணில் இருந்தே இடம்பெறும் என்பதையும் யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில்தான் கல்முனை மண்ணில் இருந்து இலங்கை முஸ்லிம்களின் உண்மையான தலைவன் தோற்றம் பெற்று விடுவான் என்கிற நியாயமான அச்சம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை பீடித்து உள்ளது. எனவே இவரின் தலைமை பதவியையும், இருப்பையும் பாதுகாக்க ரவூப் ஹக்கீம் கல்முனை மண்ணை திட்டமிட்டு சிதைத்து வருகின்றார். கல்முனை மக்கள் அரசியல் விழிப்பு பெற கூடாது என்பதில் குறியாக உள்ளார்.

கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலில் அதிக விருப்பு வாக்குகளை பெற்று சாய்ந்தமருதை சேர்ந்த சிராஸ் மீரா ஷாகிப் கல்முனை மாநகர முதல்வராக வந்தார். இவர் மிக திறமையாகவும், அருமையாகவும் முதல்வராக செயற்பட்டு வந்த நிலையில் இவரிடம் இருந்து இப்பதவியை பிடுங்கி எடுத்து நிசாம் காரியப்பருக்கு வழங்கினார் ஹக்கீம். ஆனால் நிசாம் காரியப்பர் பிரதி மேயராக பதவி வகித்த காலத்திலும் சரி, முதல்வராக செயற்பட்ட காலத்திலும் சரி கல்முனையில் காணப்பட்ட நாட்களை விட கொழும்பில் காணப்பட்ட நாட்களே அதிகம். இவருடைய காலத்தில் கல்முனை கெட்டு குட்டி சுவராகி விட்டது என்பதுடன் கல்முனை மாநகர சபையின் வரலாற்றில் மிக மோசமான முதல்வர் இவரேதான் ஆவார். மீரா ஷாகிப் வகித்த முதல்வர் பதவி அடாத்தாக பறிக்கப்பட்டு நிசாம் காரியப்பருக்கு கொடுக்கப்பட்டதில் இருந்தே கல்முனை, சாய்ந்தமருது மக்களுக்கு இடையில் பிரதேசவாதம், பிரிவினைவாதம் ஆகியன தலை தூக்கின. சாய்ந்தமருதை சொந்த இடமாக கொண்டு, கல்முனைக்குடியில் திருமணம் செய்த எம். சி. அஹமட் கல்முனை பட்டின சபையின் தலைவராக விளங்கிய அந்த நாளை நினைத்து பாருங்கள்.

கல்முனை மண்ணுக்கு உருப்படியான ஒரு தலைமை இருக்க கூடாது என்பதால்தான் ஹரிஸ் எம். பி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஜவாத் ஆகிய பலவீனமானவர்களை ஹக்கீம் கல்முனை மக்களின் பிரதிநிதிகளாக உலாவ விட்டு உள்ளார். மேலும் ஹரிஸ், ஜவாத் ஆகியோரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமாக பிரித்து வைத்து இருவரையும் மோத விட்டு வேடிக்கை பார்க்கின்றார்.

கல்முனை, சாய்ந்தமருது மக்களை நிரந்தரமாக பிரித்து வைப்பதற்காக சாய்ந்தமருது மக்களின் தனியான பிரதேச சபை கோரிக்கையை கையில் எடுத்தார் ஹக்கீம். கடந்த பொது தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை கல்முனைக்கு கொண்டு வந்து சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையை உருவாக்கி கொடுப்பார் என்று அவரை சொல்ல வைத்தார். சாய்ந்தமருது மக்களுக்கு தனியான பிரதேச சபையை அமைத்து கொடுக்க ஹாரிஸ் இணங்கியதில் முழுக்க சுயநலமே உள்ளது. இதன் மூலமாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் சாய்ந்தமருது மக்களின் பேராதரவை பெற முடியும் என்று ஹரிஸ் கனவு காண்கின்றார்.
Previous Post Next Post