Top News

மட்டக்களப்பு தென்பகுதி முஸ்லிம்கள் வரலாறு; ஆய்வுக்கட்டுரை #HistoryofSouthEastMuslims




தென்கிழக்கு என்று பலராலும் சொல்லப்படும் பகுதியானது மட்டக்களப்பிற்கு தென்பகுதியில் உள்ள முஸ்லிம் பிரதேசமாகும்.இலங்கையின் அதிகளவான முஸ்லிம்கள் செறிந்து வாழும் தனித் தேசம் இந்த தென்கிழக்கு ஆகும். அதாவது ஒப்பீட்டு அளவில் ஏனைய மாவட்டங்களைப் பார்க்கிலும் இந்த பிரதேசங்களில் தான் அதிகப்படியான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதி முஸ்லிம்கள் பூர்வீக பூமியாக இல்லாவிட்டாலும் இவர்கள் இங்கு புதிய பாரம்பரிய கலாச்சாரங்களையும் தங்களுக்கென உருவாக்கினர். இலங்கையிலுள்ள ஏனைய மாவட்டங்களில் வாழ்கின்ற முஸ்லிம்களை பார்க்கிலும் மொழியாற்றழிலும் எழுத்தாற்றழிலும் தேர்ச்சி பெற்றுள்ள இத்தேச மக்கள் தனித்தன்மை கொண்டவர்களாக காணப்படுகின்றனர். தனியாக இத்தேசத்தினை முஸ்லிம்களின் தேசம் என பிரகடனப்படுத்துவதற்கு பல காரணம் உண்டு.

மட்டக்களப்பு தென்பகுதி முஸ்லிம்கள் வரலாறு 
08ஆம் நூற்றாண்டில்  பட்டாணிமார் என்று அழைக்கப்படும் ஏழு(7) பேர் இப்பகுதியில் வியாபார நோக்கமாக வந்தனர். இவர்கள் இந்தியர் என்றும் அரேபியர் என்றும் கூறப்படுகிறது. அக்காலத்தில் தமிழ் இனத்தை சேர்ந்த முக்குவர்களும் திமிலரும் இப்பகுதியில் வாழ்ந்தனர்.

திமிலரும் முக்குவர்களுக்கும் இடையில் ஓர் யுத்தம் நடைபெற்றது. முக்குவர் பட்டாணிமாரின் உதவியைக் கொண்டு திமிலரை தோற்கடித்தனர். ஏழு பட்டாணிமாரும் இவ்யுத்தத்தில் முக்குவருக்குச் செய்த உதவி என்று மறக்க முடியாத உதவி ஆகையால் மட்டக்களப்பு தென்பகுதியில் உள்ள முக்குவப் பெரியார்கள் ஒன்று சேர்ந்து ஒரு மாபெரும் கூட்டம் நடத்தினர்.

பட்டாணிமார்களுக்கு என்ன பதில் உபகாரம் செய்வதென ஆராயப்பட்டது. பெரும் திரவியங்கள் காணி முதலியவை கொடுக்கத் தீர்மானித்தனர்.
பட்டாணிமார் அவற்றை ஏற்கவில்லை. தாங்கள் இப்பகுதியில் சீவிக்கப் போவதாகவும் அவர்கள் விவாகம் முடித்து குடித்தனம் நடத்த ஏழு பெண்கள் தர வேண்டுமெனக் கேட்டனர். அதன் பிரகாரம் பெரும் குடியையும் பெரும் குடும்பத்தையும் சேர்ந்த ஏழு அழகான பெண்களை ஏழு பட்டாணிமார்களுக்கு மணம் முடித்துக் கொடுத்தனர். இவ் ஏழு பட்டாணிகளால் பரப்பப்பட்ட முஸ்லிம்களே இன்று மட்டக்களப்பு தென்பகுதி; முஸ்லிம்கள்.

கல்லடி பாலத்திற்கு தென்பகுதியிலுள்ள முஸ்லிம்கள்
இலங்கை வாழ் முஸ்லிம்களில் இவர்களுக்கிடையில் மட்டும் இராசப்பிள்ளைக்குடி வட்டுனாச்சி குடி  என்றும் இன்னும் பல பெயர்களைக் கொண்ட குடிகளும் உண்டு.

குடி என்று அழைக்கப்படும் குடும்ப வரலாறு முக்குவருக்கிடையே பண்டு தொட்டு இருந்து வந்தது. முஸ்லிம் பட்டாணிமார்கள் முக்குவர் பெண்களை முடித்தபடியால் இப்பகுதி முஸ்லிம்களுக்குமிடையில் 'குடி' என்று அழைக்கப்படும் குடும்ப வரலாறு உண்டு.

திருக்கோயிலில் இருக்கும் பழம் பெருமை நினைவக கோயிலில் இப்பகுதி முஸ்லீம்களுக்கும் உரிமை உண்டு. இப்பகுதி முஸ்லிம் எழுபது என்பது வருடகாலமாக உரிமை கோராதபடியால் இவ் உரிமை இழக்கப்பட்டு வருகின்றது.

அக்கரைப்பற்று - கழியோடை ஆற்றுக்கு தென் பகுதியில் உள்ள ஆகப் பழய கிராமம் ஒலுவில் அதன்பின் ஏற்பட்ட கிராமம் அட்டாளைச்சேனை அதன் பின் கருங்கொடித்தீவு என்று அழைக்கப்படும் அக்கரைப்பற்று பின்னர் பாலமுனை அக்கரைப்பற்றில் குடியேரியவர்களில் பெரும்பாலானோர் அட்டாளைச்சேனையைச் சேர்ந்தவர்கள் இவர்கள் அக்கரைப்பற்றில் குடியேறியது.

கி.பி. 1780ம் வருடமளவில் (இதற்குமுன் முஸ்லிம்களைப் பற்றி சரித்திரம் இக்கிராமத்திலே கிடையாது) இதே காலத்தில் பதுளை மாவட்டத்தை சேர்ந்த கொட்டபோவ என்னும் முஸ்லிம் கிராமத்தை சேர்ந்த சின்னலெப்பை ஆராச்சிஇ சேகுலெப்பை ஆராச்சிஇ கோழியன் ஆராச்சிஇ தம்பிக்காரியப்பர் ஆகியோர் அரசாங்க ஆட்சி நிர்வாகம் நடத்துவதற்காக இப்பகுதிக்கு அழைக்கப்பட்டனர்.

கல்முனை மாவட்ட நிர்வாக அரசினர் நிருவாகத்தை பொறுப்பேற்று நடத்தினர். சேகுலெப்பை ஆராச்சிஇ கோழியன் ஆராச்சி ஆகியவர்களின் மூலம் இப்பகுதி முஸ்லிம்கள் பெருகினர்.

இவர்கள் மூவரும் கொட்டபோவேயைச் சேர்ந்த நெருங்கிய சொந்தக்காரர். இவர்கள் சிங்களத் தாய் வழியாக வந்தவர்கள். இவர்களுக்கு 'குடி' என்று அழைக்கப்படும் குடும்ப வரலாறு கிடையாது. இவர்கள் இப்பகுதி முஸ்லிம் பெண்களை முடித்தபடியால் இவர்களின் சந்ததியர் 'குடி வரலாற்றை தொடர்து கடைப்பிடிக்கின்றனர். கொட்டபோவஇ இறக்காமம் ஆகிய முஸ்லிம் கிராமங்கள் இலங்கையிலுள்ள ஆதி முஸ்லிம் கிராமங்கள் என்று சொல்லப்படுகின்றது.


களியோடை ஆற்றுக்கு அக்கரையிலுள்ள கிராமங்கள் அக்கரைப்பற்று கிராமம் என அழைக்கப்பட்டது

கழி ஓடை ஆற்றுத் தென்பகுதியிலுள்ள கிராமங்களுக்கு மேற்படி ஆற்றில் அக்கரைப்பட்டு செல்ல வேண்டி இருந்தபடியால் ஒலுவில் பாலமுனை மீனொடைக்கட்டு அட்டாளைச்சேனை கருங்கொடித்தீவு ஆகிய இக்கிராமங்களுக்கு அக்கறைப்பற்று என்று முன்னோரால் அழைக்கப்பட்டது. இக்கிராமங்களில் விருத்தியடைந்து கொண்டு வந்த கருங்கொடித்தீவுக்கிராமம் இக்கிராமங்களுக்கு தலை நகராக இருந்தபடியால் கருங்கொடித்தீவு கிராமத்தை அக்கறைப்பற்று என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இக்கிராமத்தின் உண்மையான பெயர் கருங்கொடித்தீவு இப்பெயரை தற்போது அதாவது 1930ம் வருடத்திற்கு பின் படிப்படியாய் கருங்கொடித்தீவு என்று பிழையாக அழைத்து வருகின்ரார்கள். அக்கறைப்பற்றுக்கு சரியான பெயர் கருங்கொடித்தீவு.

கி.பி. 1780ம் வருடமளவில் பெரிய பள்ளிக்குச் சமீபத்தில் இருந்த மேட்டு நிலத்திலும் தமிழ் பகுதி பிள்ளையார் கோயிலுக்கு அண்டியுள்ள நிலத்திலும் கருங்கொடி காடிருந்தது. இவற்றை வெட்டி முதல் முதல் இப்பகுதியில் மக்கள் குடியேறினர். ஆகவே இக் கிராமத்திற்கு கருங்கொடித்தீவு என பெயர் சூட்டப்பட்டது. இக்கிராமத்திற்கு வடக்கே ஆறும் கிழக்கே கடலும் மேற்கே உப்பாறும் தெற்கே தில்லை ஆறும் இருந்தபடியால் அக்காலத்திலுள்ள மக்கள் இதை ஒரு விருத்தியடையக்கூடிய கிராமமென கருதி இவ் எல்லையிலுள்ள பெரும் காடுகளையும் சேர்த்து ஒரு தீவாக கருதினர். இக்கிராமத்திலுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் முக்குவ சாதியைச் சேர்ந்தவர்கள்.

ஆக தென்கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்கு தனியொரு வரலாறு இருப்பதனை எம்மால் அறியமுடிகிறது. ஏனைய சமூகத்தவரோடு அன்பாகவும் பண்பாகவும் அவர்களின் கலாச்சாரத்தை மதிக்க கூடியவர்களாகவும் இந்த பகுதி முஸ்லிம்கள் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளது. தமிழ், சிங்கள, கிறிஸ்தவ சமூகத்தவரோடு நல்ல உறவை பேணிய முஸ்லிம் பிற்காலத்திலும் அவர்களின் பெண்களை திருமணம் முடித்து இஸ்லாமிய மதத்திற்கு மாற்றி முஸ்லிம்களாக வாழ்ந்து வந்துள்ளனர். தூய தமிழை அழகாக பேசும் இப்பகுதி முஸ்லிம்கள், தமிழ் பண்பாட்டு, கலை, கலாசாரத்தையும் இன்றும் பேணிவருகின்றனர். பொல்லடி, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாட்டு, சீனடி, சிலம்படி, வாள்வெட்டு, றபான்பாட்டு, மீனவப்பாட்டு போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்று அக்கலை அம்சங்களை இன்றும் மேடையேற்றி வருகின்றனர்.

இலங்கை முஸ்லிம்களின் பெரும்பான்மை இடமாக கருதப்படும் இப்பகுதி பல அரசியல் கட்சிகளையும், சமூகத்தலைவர்களையும், மார்க்கப் பெரியார்களையும், கல்விக்கூடங்களையும், அரபுக்கலாசாலையும், பல்கலைக்கழகத்தையும் தன்னகத்தே கொண்ட பிரதேசமாகவும். இயற்கை வளங்களான கடல், வயல், தோட்டங்கள், காடுகள், இயற்கை வனங்கள், மலைகள், முகடுகள், ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றாலும் அழகுபெறுகிறது. மீன்பிடி, விவசாயம், வர்த்தகங்களை செய்யும் இப்பகுதி முஸ்லிம்கள் இதன் மூலம் அதிகளவான வருமானங்களை ஈட்டுகின்றனர். வந்தேறு குடிகள் என்பதற்கு அப்பால் இந்நாட்டின் கரையோர பாதுகாப்பில் ஈடுபட்ட பழங்குடி வம்சத்தை சேர்ந்த இந்நாட்டு சோனகர்கள் என்ற தனித்தன்மை இம்மக்களுக்கு உண்டு.

பஹத் ஏ.மஜீத்
பிரதம ஆசிரியர் - சிலோன் முஸ்லிம்


Previous Post Next Post