Top News

கிழக்கு கோட்டையைக் கைப்பற்ற மு.காவை வளைக்க அரசு வியூகம் #LeakNews



எதிர்வரும் தேர்தல்களில் கூட்டாகப் போட்டியிடுவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கொள்கையளவில் இணங்கியுள்ள நிலையில், கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் இணைத்துக் களமிறக்குவது குறித்து யோசனை செய்திருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
 
அரசமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம் வெளிவந்த பின்னர் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டால் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் நேற்றுமுன்தினம் பின்னிரவு வரை பேச்சில் ஈடுபட்டனர்.
 
அரச புலனாய்வு அறிக்கைகளின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் செல்வாக்கில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளது.
 
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக அரச புலனாய்வுத் தகவல்கள் கூறுவதால் அவர்களையும் அரச கூட்டுடன் இணைத்துக்கொள்வதற்குப் பேச்சுகளை நடத்துவதென மேற்படி சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
தேர்தலொன்று வருமாயின், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய இடங்களில் அரச கூட்டணியாக வரும் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும் கிழக்கு மாகாணத்தில் அது தனியாகவே போட்டியிடும் எனவும், இதனால் மு.காவை இணைக்கும் பேச்சு இலகுவானதல்ல எனவும் இந்தச் சந்திப்பின்போது கருத்து வெளியிடப்பட்டதாக அறியமுடிகின்றது.
Previous Post Next Post