கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் பதவிக்கு ஆசைப்படும் ஒருவர். அதன் காரணமாகவே அவர் 20ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதில் மும்முரமாகச் செயற்பட்டவர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
20ஆவது சட்டத் திருத்தம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டத்தில், 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு வடக்கில் எதிர்ப்பும், கிழக்கில் ஆதரவும் வழங்கப்பட்டுள்ள நிலையில், இரட்டை நிலைப்பாட்டை எடுக்கும் இரா.சம்பந்தனை நீங்கள் எவ்வாறு தலைவராக கருதுகிறீர்கள் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இதில் இரட்டை நிலமையென்று சொல்லும்போது, கிழக்கு மாகாண முதலமைச்சர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிக்குரியவரல்ல.
அவர் தொடர்ந்து முதலமைச்சர் பதவியில் இருப்பதற்கு ஆசைப்படும் ஒருவர். இந்த மாதத்துடன் கிழக்குமாகாணசபையின் காலம் நிறைவடைகின்றது. ஆகவே 20ஆவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றினால் தான் இன்னும் இரண்டு வருடம் முதலமைச்சராக இருக்கலாம் என்பதற்காகவே சில நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம்.
அதற்கு, அவர் 20ஆவது திருத்தச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொண்டுள்ளார்கள் எனவும்தெரிவித்தார். ஆனால் இன்னமும் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.
இது தனிப்பட்ட நபர்களின் முடிவு. அத்துடன் அவருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. கிழக்கு மாகாணமுதலமைச்சர் இன்னொரு கட்சியைச் சேர்ந்தவர்.
இருப்பினும், அவர் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சொல்வதைத் தானே கேட்கின்றார் என ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு, இதுவரை காலமும் அப்படிஅங்கு எதுவும் நடைபெறவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.