ஹஸன் இக்பால்
இலங்கையில் அடைக்கலம் கோரும் மியன்மாரின் ரோஹிங்ய முஸ்லிம்களை திருப்பி அனுப்புதல் தொடர்பான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யுமாறு தேசிய சமாதான பேரவை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
ரோஹிங்ய அகதிகள் தொடர்பில் கரிசனை கொள்ளுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசை கோரியுள்ளதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது, மியன்மாரிலிருந்து ரோஹிங்ய முஸ்லிம்கள் பெருந்தொகையில் வெளியேறி வேறு நாடுகளுக்கு தஞ்சம் கோரி வருவது சர்வதேச சமூகத்தினதும், அதன் ஓர் அங்கமான இலங்கையினதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வாறு வெளியேறும் ரோஹிங்ய முஸ்லிம்கள் பெரும்பாலும் பங்களாதேஷ், இந்தியா மற்றும் மலேஷியா போன்ற அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் பெற்றுள்ளனர். மிக சொற்பமான ரோஹிங்ய அகதிகளே இலங்கையில் அடைக்கலம் பெற முயற்சித்தனர்.
பெண்கள், குழந்தைகள் என்று பாரபட்சமின்றி பல வருடங்களாக தொடரும் ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு எதிரான அட்டூழியங்கள் கடந்த சில வாரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதன் உச்சத்தை அடைந்துள்ளன எனலாம்.
இலங்கைக்குள் நுழையும் ரோஹிங்ய மக்களுக்கு அனுமதியை ரத்துச் செய்யுமாறு இலங்கை அரசினால் குடிவரவு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டிருப்பது தொடர்பில் ‘தேசிய சமாதானப் பேரவை’ மிகுந்த வேதனை அடைகிறது. அகதிகள் என்றும் கருத்திற்கொள்ளப்படாது அவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வருத்தத்துக்குரிய விடயம்.
மியன்மாரில் வன்முறைகள் காரணமாக சொத்துக்களையும் வாழ்விடங்களையும் நேசத்துக்குரியோரையும் இழந்து தவிக்கும் குறிப்பிட்ட சமூகத்தவர்களின் இந்த நிர்க்கதி நிலை ஒருவகையில் இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகளை எதிரொலிப்பதாய் இருக்கின்றது. மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற இன முரண்பாடு, பயங்கரவாதம் மற்றும் உள்நாட்டுப் போர் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உலகில் பல்வேறு நாடுகளிலும் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.
இலங்கையர்களாகிய நாம் அவர்களை இழந்து விட்டோம். ரோஹிங்ய முஸ்லிம்கள் அகதிகளாக இலங்கைக்குள் நுழைவதை தடுக்கும் இலங்கை அரசின் நிலைப்பாட்டை மீள் பரிசீலனை செய்யுமாறு தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்துகின்றது. எமது நாட்டிலிருந்து புகலிடம் கோரிச் சென்றவர்களுக்கு ஏனைய நாடுகள் அடைக்கலம் வழங்கியதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக மனிதாபிமான அடிப்படையில் நாமும் அகதிகளைப் பொறுப்பேற்க வேண்டும். ஐ.நாவின் அங்கத்துவ நாடு என்றவகையில் அகதிகள் நிலைப்பாட்டில் விழுமியங்களை பேணியவாறு சர்வதேச பொறுப்புக்களில் பங்கேற்க வேண்டும் எனும் கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.
பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டும் வகையில் வன்முறைகளை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என மியன்மார் அரசுக்கு அழுத்தங்களை வழங்குமாறும், சர்வதேச தன்னார்வ அமைப்புக்கள் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அரசைக் கோரியுள்ளமையை மேற்கோள் காட்டுகின்றோம்.
இலங்கை மத ரீதியாக பிணைக்கப்பட்ட, இறுக்கமான உறவுகளை மியன்மாருடன் நீண்டகாலமாகப் பேணி வருகின்ற நாடாகும். பல தசாப்தங்களாகத் தொடர்ந்த உள்நாட்டு போர் மற்றும் முரண்பாடுகளை களைந்து சமரச இணக்கப்பாடுகளை நோக்கி நடைபயிலும் நாடாக இலங்கை இருக்கின்றபோதிலும், மியன்மார் நாட்டுக்கும் மியன்மார் மக்களுக்கும் தேவையின்போது உதவ வேண்டிய தார்மீகக் கடப்பாடு இலங்கைக்கு உள்ளது.