சிங்ஹலே அமைப்பு எதிராக களத்தில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் #SihaLe

NEWS


செய்தியை அனுப்பிவைத்தவர்  பழுலுல்லாஹ் பர்ஹான் - காத்தான்குடி
மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகின்ற சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியின்  தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள விஷேட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் பாதுகாப்பான போக்குவரத்து சேவையினை வழங்கி வருகின்ற 'பிக் மீ' என்கின்ற நிறுவனம் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கு பெரும் தொகைப் பணத்தை அன்பளிப்பு செய்துள்ளதாக பொய்யான தகவலொன்று இனவாத அடிப்படையில் பரப்பப்பட்டு வருகின்றது. சிங்கலே என்கின்ற இனவாத அமைப்பின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இது தொடர்பான திரிவுபடுத்தப்பட்ட செய்திகள் - படங்களை அது வெளியிட்டுள்ளது. 

'பிக் மீ' நிறுவனத்துக்கும் - மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரிக்கும் எந்தவிதி தொடர்பும் கிடையாது. அவ்வாறு எந்த நிதி உதவிகளும் வழங்கப்படவுமில்லை. சிங்கலே அமைப்பினால் திட்டமிட்ட ரீதியில் இவ்வாறான பொய் பிரசாரங்களை மேற்கொண்டு பெரும்பான்மை மக்களைக் குழப்ப முற்படுகின்றது.

மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி தொடர்பில் தொடர்ந்தும் பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்ற சிங்கலே, நேற்று வியாழக்கிழமை தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரி தொடர்பில் வெளியிட்டுள்ள செய்தி முற்றிலும் பொய்யானது. அதில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள புகைப்படம் திரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே இது தொடர்பில் பொலிஸ் முறைப்பாடொன்றை மேற்கொண்டு சிங்கலே அமைப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருகின்றோம் எனவும் அவ் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6/grid1/Political
To Top