எம்.என்.எம்.புஹாரி
திருகோணமலை சேருநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பகுதியில் பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டாம் என பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் பயிர்ச்செய்கையாளர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நீணாக்கேணி பகுதியில் உள்ள காணி உரிமையாளர்கள் சேனைப் பயிர் செய்வதற்காக தமது காணிகளை உழவு இயந்திரத்தைக் கொண்டு உழுது கொண்டிருக்கும் போது சேருநுவர பொலிஸார் அவ்விடங்களுக்கு வருகை தந்து பயிர் செய்கையில் ஈடுபட வேண்டாம் இது தொல் பொருள் திணைக்களத்திற்குரிய காணியென தமது வேலைகளை நேற்று தடுத்து நிறுத்தியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு தாம் இப் பிரதேசத்தில் 40 வருடங்களுக்கு மேலாக குடியிருந்து வருவதோடு பயிர்செய்கை மேற்கொண்டு இதனாலேயே தாம் ஜீவனோபாயத்தை கொண்டு செல்வதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளை தமது நீணாக்கேணி கிராம மக்கள் குடியிருக்கின்ற காணிகளில் அதிகமானவை வில்கம் விகாரைக்குரிய 49 ஏக்கர் காணிக்குள் உள்ளடக்கப்படுவதாக வில்கம் விகாரையின் விகாராதிபதி சேருநுவர பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டுக்கமைவாகவே இவ்வாறு தமது பயிர் செய்கை வேலைகள் பொலிஸாரினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளை தாம் பல வருடங்களாக மின்சாரம் பெற்று வீடுகளை அமைத்து குடியிருந்து வருவதாகவும் மக்கள் தெரிவிப்பதோடு இந்தப் பிரச்சினை நீண்டு செல்லாது இது விடயத்தில் உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.