சமூக மறுசீரமைப்பிற்கு பௌத்த பிக்குகள் குரல் கொடுக்க வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாடு பல்வேறு மறைமுக நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளது. எமது நாடு மிகவும் தீர்மானம் மிக்க ஓர் நிலையில் காணப்படுகின்றது.
சுதந்திரம் பெற்றுக் கொண்டு 70 ஆண்டுகள் கடந்துள்ளது. மிகவும் அதிக சனத்தொகையைக் கொண்டதும் கல்வி அறிவில் பின்தங்கியதுமான பங்களாதேஸின் பொருளாதாரம் பின்னடைவினை எதிர்நோக்கி வருகின்றது.
ஒட்டுமொத்த நாடே கடனாளியாகியுள்ளது. மக்களின் வாழ்க்கைச் செலவு அபாயகரமாக நாளுக்கு நாள் உயர்வடைந்து செல்கின்றது.
வரிச் சுமையும் மிகவும் அதிகரித்துள்ளது. அரசியல்வாதிகள் அரச அதிகாரிகள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
புத்தஜீவிகள், பயிற்றப்பட்ட தொழில் நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
வெறுமனே அரசாங்கத்தையோ அல்லது அரசியல் தலைவர்களையோ மாற்றுவதினால் நாட்டில் மாற்றம் ஏற்படாது.
ஜனநாயகம் மற்றும் அரசாங்கம் தொடர்பிலான மக்களின் நம்பிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டு மக்கள் அரசியல்வாதிகளின் அடிமைகளாகவே காணப்படுகின்றனர்.
இன, மத, ஜாதி மற்றும் வர்க்க பேதங்கள் தலைதூக்கியுள்ளன. மீளவும் இணைக்க முடியாத அளவிற்கு இடைவெளிகள் ஏற்பட்டுள்ளன என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.