Top News

அதீத இணையப்பாவனையால் முஸ்லிம் மாணவர்களின் கல்வித்தரம் வீழ்ச்சி #VCNajim



எம்.வை.அமீர் 

கடந்த காலங்களைவிட  பல்கலைக்கழகங்களுக்கான பிரவேசத்தில் ஆண் மாணவர்களின் தொகை கணிசமான அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் குறித்த இவ்வீழ்ச்சிக்கு தகவல் தொழில்நுட்பத்தை மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதும் காரனமாய் அமையலாம் என்று தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் முதன்முறையாக இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒன்லைனூடாக பரீட்சை முடிவுகளை பார்ப்பதுபோன்ற ஒரு செயற்திட்டத்தை கல்முனை சாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) 2017-09-21 ஆம் திகதி அங்குராப்பணம் செய்து வைத்தது. கல்லுரியின் அதிபர் எம்.எஸ் முஹம்மட் தலைமையில் காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த அங்குராப்பண நிகழ்வுக்கு  பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஒன்லைன் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து. உரையாற்றியபோதே எம்.எம்.எம்.நாஜீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலைக்கு என ஒன்லைன் சேவை ஒன்றை அங்குராப்பணம் செய்திருப்பதுதகவல் தொழில்நுட்பத்தினூடாக அனைத்தும் என்ற அடிப்படையில் வளர்ந்துவரும் இன்றைய உலகில் ஒரு மைக்கல்லாகும் என்றும், தனியான இணையத்தளம் ஒன்றை உருவாக்குவது இலகுவான விடயம் என்பதனால்  அதனை இன்றைய மாணவர்கள் இலகுவில் உருவாக்கிக்கொள்வதாகவும்  ஒன்லைன் சேவை என்பது அவ்வாறான ஒன்றல்ல என்றும் தெரிவித்தார்.

இப்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவையில் தகவல்களை உள்ளடக்குதல் மற்றும் பாதுகாப்பான செயல்முறை என இரு முக்கிய விடயங்கள் இருப்பதாகவும் இதனுள் உரிய நபர்களைத்தவிர மற்றவர்கள் நுழையமுடியாத பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும்  அப்படி யாரும் நுழையக்கூடிய வாய்ப்பு இருக்குமானால் அதனூடாக வெளிவரும் தகவல்கள் உண்மைத்தன்மை அற்றதாக மாறிவிடும் என்றும் தெரிவித்தார்.

கல்முனை ஸாஹிரா கல்லூரியில் இன்று உருவாக்கப்பட்ட இந்த சேவையானது இப்பாடசாலை தகவல் தொழில்நுட்ப துறையில் ஆர்வம் கொண்டுள்ளதை எடுத்துக்காட்டுவதாகவும் நாம் வாழும் இன்றைய காலமானது தகவல் தொழில்நுட்பத்துடன் மக்கள் பெருவாரியாக இணைந்து சேவைகளைப்பெறுவதாகவும் தகவல் தொழில்நுட்பத்திலேயே தங்களது காலத்தை கடத்துவதாகவும் தெரிவித்தார். அனேகரது கைகளில் ஸ்மாட் தொலைபேசிகள் இருப்பதாகவும் அவர்கள் உலகத்தை ஒரு நொடியில் சுற்றிவருவதாகவும் இதில் சாதகங்கள் இருப்பதாகவும் பாதகங்கள் இருப்பதாகவும் இங்கு முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் தகவல் தொழில்நுட்பத்தை நாங்கள் எதற்காக பாவிக்கிறோம் என்பது, பெற்றோரைப் பொறுத்தமட்டில் எல்லோரது வீட்டிலும் சங்கடமான நிலை கையடக்கத் தொலைபேசிகள் இணையத்தளம் மடிகணனிகள் பரவலாக எல்லோரதும் கைகளில் வந்ததனூடாக ஒரு பெரிய பிரச்சினை உருவாகியிருக்கக்கூடிய நிலையை நாங்கள் அவதானிக்கின்றோம். பிரச்சினை என்னவென்றால் குறித்த உபகரணங்களை வலையமைப்பில் இணைத்துவிட்டு முக்கியமாக கேம்ஸ் விளையாடக்கூடிய நிலைமையை நாம் காணக்கூடியதாகவுள்ளதாகவும்  தெரிவித்தார்.

கேம்ஸ் விளையாட்டில் அதிகம் ஈர்க்கப்பட்டுள்ள குழுவினர் என்றால் அது மாணவர்களே என்றும் இந்த தொழில்நுட்பத்தை தவறாக பாவித்து அவர்களது முக்கியமான நேரத்தை வீணடித்து அதனால் அவர்களது வாழ்வில் தோல்வியை காண்பதாகவும், நல்ல விடயங்களுக்காக பயன்படுத்தவேண்டிய இந்த நவீன தொழில்நுட்பத்தை சில வளர்ந்தவர்கள் கூட தவறாக பாவித்து அதனூடாக அதாவது சில சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்திகளை பரவவிடுவதாகவும் இவ்வாறான தவறான செயற்பாடுகளால் வரும் செய்திகளின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெறுமதியான நேரத்தை கேம்ஸ் விளையாட்டில் சில மாணவர்கள் தாங்களை உள்ளாக்கி விட்டார்கள் ஆனால் அவர்களை அதிலிருந்து மீட்டெடுப்பது மிகக்கடினமான விடயமாகும் எனவே பெற்றோர் இந்தவிடயத்தில் தங்களது பிள்ளைகளை அவதானத்துடன் வழிநடத்தவேண்டும் என்றும் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் கேட்டுக்கொண்டார்.

தகவல் தொழில்நுட்பத்தை பிரயோசனமான முறையில் பயன்படுதுவோமானால் அதனூடாக பல்வேறு நன்மைகளை அடைய முடியும் என்றும், இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி பாடங்களுக்கான தெளிவை பெறுவதுமுதல் வைத்தியரை சந்திப்பது, கட்டணங்களை செலுத்துவது வரையான அனைத்தயும் செய்ய முடியும் என்றும் தகவல் தொழில்நுட்பத்தினூடாக இலகுவக்கப்பட்டுள்ள வாழ்க்கைச்சக்கரத்தில் சில தொழில்நுட்பங்களை புகுத்தி அதனை சிக்கலாக்கியும் சிலர் வைத்துள்ளதாகவும் இவைகள் விடயத்திலேயே மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என்றும் பிள்ளைகளுக்கு தகவல் தொழில்நுட்பத்தை பாவிக்க விடுமாறும் அதிலும் கட்டுப்பாட்டை வைத்துக்கொள்ளுமாறும் கட்டுப்பாடு மீறும் பட்சத்தில் தவறான பாவனையின் காரணாமாக அவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதை உணர்ந்துகொள்ள வேண்டும் என்று பெற்றோரைக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம் தந்த முகநூல், வட்ஸ்அப் போன்ற வரப்பிரசாதங்கள், சிலரால் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு அதனூடாக வெளிவரும் தகவல்களை நம்பகத்தன்மையற்றதாக மாற்றுவதற்கான செயற்பாடுகளில் சிலர் ஈடுபடுவதாகவும் இவ்வாறான வழிமுறைகளில் தங்களை ஆட்படுதியுல்லோர்  தவிர்ந்துகொள்வது அவர்களுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் பிரயோசனமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தனது வீட்டில் பிள்ளைகள் கையடக்க தொலைபேசிகள் கணணி பாவிப்பது மற்றும் வலையமைப்பில் உலாவுதல் போன்றவற்றில் முழுமையாக தடைசெய்துள்ளதாகவும் பிள்ளைகளின் நலன்கருதியே இவ்வாறான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் தேவைகள் ஏற்படும்போது எங்களது கண்காணிப்பில் இவைகளை பாவிக்கக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஆண் மாணவர்கள் தங்களது கல்வி விடயத்தில் மிகுந்த கருசனை செலுத்த வேண்டும் என்றும் அவ்வாறு இல்லாதுபோகுமிடத்து பாரிய சமூக சீர்கேடு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்த விடயத்தில் பெற்றோரும் ஆசிரியர்களும் மிகுந்த அவதானத்துடன் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

ஒரு பல்கலைக்கழகம் அதன் அமைவிடத்துக்கு அண்மையில் உள்ளவர்களுக்கு பயன்படவேண்டும் என்ற அடிப்படையில் உங்களுக்கு அருகில் உள்ள தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளங்களை இப்பிரதேச மானவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் புதிதாக தொழில்நுட்ப பீடம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட இரண்டு துறைகளில் மாணவர்கள் கல்வி பயில்வதாகவும் குறித்த துறைகளையும்  மாணவர்கள் கற்க முன்வரவேண்டும் என்றும்  அந்தத் துறைகள் எதிர்காலத்தில் மிகுந்த பிரயோசனமாக அமையும் என்றும் பிரதேச அபிவிருத்திக்கு தொழில்நுட்பத்தின் தேவையும் மிகப் பிரதானமாக அமையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.றமீஸ் மற்றும் கல்முனை பிரதேச பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.எம்.எம். றஹீம் ஆகியோரும் குறித்த சேவையை வடிவமைத்த இணைய பொறியியலாளர் ஏ.ஆர்.எம்.நிஷாட் உட்பட அதிதிகளாக பிரதி அதிபர் எம்.எஸ்.அலிக்கான், எம்.எம்.நிஸார்டீன்,-ஸாஹிரா திட்ட முகாமையாளர் ஷாஹ்பி எச் இஸ்மாயில்  மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் ஏ.பிB.ஜௌபர்உள்ளிட்டவர்களும்  பெற்றோரும் கலந்துகொண்டனர்.
Previous Post Next Post