1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளால் ஆயுத முனையில் வடக்கிலிருந்து ஒட்டுமொத்த முஸ்லிம்களும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 27 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அம்மக்களுக்கு தொடர்ந்தும் அநீதி இழைக்கப்பட்டு வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கிலிருந்து வெ ளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக்குடியமர்த்தவோ அவர்களுக்கான வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவோ இதுவரை அரசாங்கத்தினால் முறையான முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
முஸ்லிம் அரசியல் கட்சிகளும் வடக்கு முஸ்லிம்கள் விவகாரத்தில் அக்கறையுடையவர்களாக தம்மைக் காட்டிக் கொள்கின்ற போதிலும் நடைமுறையில் அம் மக்களுக்கு பிரயோசனமளிக்கும் வகையிலான திட்டங்கள் எதுவும் அமுல்படுத்தப்படாமையும் கவலைக்குரியதாகும்.
அத்தோடு, யுத்தம் நிறைவுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்தும் அம்மக்களின் மீள்குடியேற்றத்திற்கு அரசாங்கத்தினாலும் தொண்டு நிறுவனங்களாலும் முறையான திட்டமொன்றை வகுக்க முடியாது போயுள்ளதாகவும் சிவில் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேவேளை, மீள்குடியேற்ற செயற்பாடுகளில் முஸ்லிம் அரசியல் தரப்புகளுக்கும் வடக்கிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்படுவதனாலும் அரசாங்க அதிகாரிகள் இன ரீதியாக பாரபட்சமாக நடந்து கொள்கின்றமையாலும் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் சிக்கல் நிலைக்குள்ளாகியுள்ளது.
இதேவேளை, மீள்குடியேற்ற செயற்பாடுகளில் முஸ்லிம் அரசியல் தரப்புகளுக்கும் வடக்கிலுள்ள அரசாங்க அதிகாரிகளுக்குமிடையே முரண்பாடுகள் ஏற்படுவதனாலும் அரசாங்க அதிகாரிகள் இன ரீதியாக பாரபட்சமாக நடந்து கொள்கின்றமையாலும் மீள்குடியேற்றம் தொடர்ந்தும் சிக்கல் நிலைக்குள்ளாகியுள்ளது.
இவ்வதிகாரிகள் வடக்கின் வீட்டுத்திட்டங்களில் முஸ்லிம் மக்களை உள்ளீர்ப்பதில் பல்வேறு தடங்கல்கள் ஏற்படுத்துவதனால் வடக்கு முஸ்லிம்களுக்கு பாரியளவில் அநீதி இழைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இதேவேளை, மீள்குடியேற்ற விடயத்தில் கடந்த மற்றும் தற்போதைய அரசாங்கங்கள் கையாண்ட பொறிமுறைகள் முஸ்லிம் மக்களின் குடியேற்றத்தில் கடும் தாக்கத்தை செலுத்தியுள்ளன. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்காக ஜனாதிபதி குழு நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் முன்னேற்றங்கள் காண முடியாதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வட மாகாண முஸ்லிம்கள் விடயத்தில் முஸ்லிம் அரசியல் மற்றும் சிவில் தலைமைகள் ஒன்றிணைந்து அரசியல் வேறுபாடுகளுக்கப்பால் நீடித்து நிலைத்து நிற்கத்தக்க திட்ட மொன்றை வரைந்து அதனை நடை முறைப்படுத்துவதற்குத் தேவையான அழுத்தங்களை அரசாங்கத்துக்கு வழங்க வேண்டும் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.