Top News

முஸ்லிம்களை சீண்டிய தேரர் உள்ளிட்ட 8 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு #Rohingya


மியன்மார், ரோஹிங்கிய அகதிகள் தொடர்பில் அமைதியற்ற வகையில் செயற்பட்ட சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமண தயாரத்ன தேரர் உள்ளிட்ட 08 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
 
இன்றைய தினம் குறித்த 08 பேரும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அக்மீமண தயாரத்ன தேரரை நாளைய தினம் (10) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
அத்துடன் ஏனைய 07 பேரையும் அடையளம் காணும் பொருட்டு, எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 
கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி, மியன்மார், ரோஹிங்கிய அகதிகள் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்த ஐ.நா. தற்காலிக முகாமிற்கு முன்னால் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில், கடந்த ஒக்டோர்ப 02 ஆம் திகதி அக்மீமண தயாரத்ன தேரர் வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு குற்றவியல் பிரிவில் ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட மேலும் 07 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
 
குறித்த சம்பவத்தை, முன்னாள் பொலிஸ் ​கான்ஸ்டபில் ஒருவர் மேற்கொண்டுள்ளதாக, "தாய்நாட்டைப் பாதுகாக்கும் இராணுவவீரர்கள்" அமைப்பு தெரிவித்திருந்தது.
 
மிரிஹாணை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் ​கான்ஸ்டபிளான டி.என்.ஜே.டி வாஸ் குணசேகர என்பவர் அங்கே தங்கியிருந்த ரோஹிங்கிய பெண்ணொருவரை முகாமிலிருந்து வெளியே அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.
 
குறித்த சம்பவத்தை, முன்னாள் பொலிஸ் ​கான்ஸ்டபில் தன் மீது ஏற்பட்ட களங்கத்தை மறைப்பதற்கும் தற்போது நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கான சாட்சியங்களை இல்லாதொழிப்பதற்குமாக தனது குடும்பத்தாருடன் இணைந்து இச்சூழ்ச்சியை முன்னெடுத்துள்ளதாக "தாய்நாட்டைப் பாதுகாக்கும் இராணுவவீரர்கள்" அமைப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
Previous Post Next Post