இலங்கையின் இன்றைய தேசிய இனப்பிரச்சினை சிங்கள மக்களினதும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களினதும் பிரச்சினையாக மாத்திரம் பார்க்கப்படக் கூடாது. தேசிய இனப்பிரச்சினை என்பது வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள், தென்னிலங்கை முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியதாகும். இந்த உண்மையை நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் அமைதித் திட்டங்களில் நினைவுகூர வேண்டும். இதனை ஏற்றுக்கொள்வதிலுள்ள மனத் தடைகள் நீக்கப்பட வேண்டும். இந்தக் குறுகிய பார்வை அகற்றப்பட்டு, பரந்த கண்ணோட்டத்தில் இப்பிரச்சினை பார்க்கப்பட வேண்டும்.
தற்போது ஒற்றையாட்சி அரசியலமைப்பைக் கைவிட்டு சமஷ்டி ஏற்பாடு குறித்து அரசாங்கம் சிந்திக்கத் தொடங்கியுள்ளது. சமஷ்டிக்குக் குறைந்த எந்த அரசியல் நிலைப்பாட்டையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை என்பதும் உறுதியாகின்றது. இச்சூழ்நிலையில், வடக்கு கிழக்கு இணைப்புப் பற்றிய கோரிக்கைகள் மீளவும் மேலெழுந்துள்ளதை சமீபத்திய அரசியல் மேடைகளில் அவதானிக்கலாம்.
தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில், அதனூடு எட்டப்படும் முடிவுகளில் முஸ்லிம் காரணி புறந்தள்ளப்படும் அபாயத்தை இம்முறையும் நாம் எதிர்கொள்ளக்கூடாது. இதில் முஸ்லிம் சிவில் சமூகம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயலாற்ற வேண்டியுள்ளது.
ஒற்றையாட்சி அரசியலமைப்பை மாற்றி, சமஷ்டி அல்லது கூட்டாட்சி அமைப்பை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் அரசின் மீது திணிக்கப்படுகின்றது. மேற்கு நாடுகளிலிருந்து இந்த நிர்ப்பந்தத்தை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது. இணைந்த வடக்கு, கிழக்கில் அந்த சமஷ்டித் தீர்வு நடைமுறைக்கு வர வேண்டும் என தமிழ்த் தரப்பு அழுத்தமாக வலியுறுத்தி வருகின்றது.
கடந்த காலங்களில் இணைக்கப்பட்ட (முஸ்லிம் அபிலாஷைகளுக்கு எதிராகவும் முஸ்லிம்களை கலந்தாலோசிக்காமலும்) வடக்கு, கிழக்கில் முஸ்லிம் சிறுபான்மை மக்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பதை இந்நாடு நன்கு அறியும். முஸ்லிம்களும் இலங்கையின் தேசிய இனம் என்பதும் இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம் தரப்பும் தட்டிக் கழிக்க முடியாத பங்காளிகள் என்பதும் அந்த இணைப்பின் போது வசதியாக மறக்கப்பட்டது.
இலங்கை- - இந்திய ஒப்பந்தம் நள்ளிரவோடு நள்ளிரவாக முஸ்லிம் சமூகத்தை நாதியற்றவர்களாக நடுத்தெருவில் நிறுத்தியது. அவர்களது குரல்கள் நசுக்கப்பட்டு, கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டப்பட்டன. பேரினவாதம் போன்று அதிகாரமளிக்கப்பட்ட தமிழ் குறுந் தேசியவாதமும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு ஆபத்தானதுதான் என்ற உண்மையை முஸ்லிம்களுக்கு அது உணர்த்தியது.
முஸ்லிம் பிரதேசங்களில் தமிழ் ஆயுதக் குழுக்களாலும் அதிகாரமளிக்கப்பட்ட தமிழ் நிர்வாகிகளாலும் திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படு கொலைகளும் இன ஒதுக்கலும் தமிழ் ஆதிக்கத்தின் கீழ் முஸ்லிம்கள் வாழ முடியாது என்ற உண்மையை வலுவாக நிலைநிறுத்தியிருந்தது.
1987 ஒப்பந்தத்தின் பின்னர் வடக்குக் கிழக்கு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் இருக்கவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் ஆட்சியதிகார மாற்றத்தை ஏற்படுத்தக் காரணமாகி, சமாதான சூழலுக்கு முஸ்லிம்களின் ஆதரவுடன் வழிவகுத்த தற்போதைய முஸ்லிம் தலைமைகளானது வழமைபோன்று மிக மோசமான அரசியல் தவறுகளை இழைக்கக் கூடிய ஆபத்து மீளவும் எழுந்துள்ளது.
இதுவரை இம்முஸ்லிம் தலைமைகள் சமூகத்தில் எவ்விதமான, காத்திரமான அரசியல் உரையாடல்களையும் நடத்தவில்லை. சமூகத்தைச் சூழ்ந்துள்ள அரசியல் நிலைமைகள், பேச்சுவார்த்தைகள், தீர்வுத் திட்டங்கள், அரசியலமைப்பு மாற்றம், தேர்தல் முறை சீர்திருத்தம், எல்லை மீள்நிர்ணயம் தொடர் பாக நமது மக்களை ஆழ்ந்த மயக்கத்தில் வைத்திருக்கவே முஸ்லிம் அரசியல் தலைமைகள் விரும்புகின்றன. முஸ்லிம் அரசியல் கட்சிகளின் சமீபத்திய போக்குகள் இதனையே தெளிவாக எடுத்துரைக்கின்றன.
சிவில் சமூகத்திலிருந்து எழும் தன்னியல்பான அரசியல் உணர்வுகள் திரட்சியடையும்போது சமூக நிறுவனங்களால் முன்வைக்கப்படும் தீர்வுத் திட்டங்களுக்கு செவி சாய்ப்பது போல் பாசாங்கு செய்யும் அரசியல் தலைமைகள் இறுதியில் அதிகாரத்தில் உள்ளோருக்கு அடிபணிந்து வருவதே வரலாறாகியுள்ளது.
முஸ்லிம் அரசியல் தலைமைகளின் இந்த கபடத் தனத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் தரப்பினர் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை, கலாசார தாயக பாரம்பரிய பூமி, தமிழர் தேசம், சமஷ்டியை உள்ளடக்கிய ஐக்கிய இலங்கை என்பவற்றை உள்ளடக்கிய மாதிரி அரசியலமைப்பொன்றை முன்வைத்துள்ளனர்.
தமக்கான அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து விரிந்தளவில் கலந்துரையாடி வருகின்றனர். சமஷ்டியே தமக்கான தீர்வு என்றும், அது இணைக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வடக்கு கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கை என்ன என்பது தெளிவாக முன்வைக்கப்பட வேண்டும். மங்கலான நிலைப்பாடுகளிலிருந்து தெளிவான நிலைப்பாட்டுக்கு வருவதும் அவற்றை தேசிய நிலைப்பாடுகளாக மாற்றுவதும் அரசியல் கட்சிகளை ஏற்கச் செய்வதும் இன்றைய சிவில் சமூகத்தின் உடனடிப் பணியாக மாறவேண்டும்.
இந்த இடத்தில் வடக்கு, கிழக்கு இணைப்புப் பற்றிய சமீபகால தமிழர் தரப்பு நிலைப்பாடு குறித்து பரிசீலிப்பது அவசியம். இணைக்கப்படும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம்கள் மென்மேலும் சிறுபான்மையாக்கப்படுவதோடு, அதிகாரமற்ற அபலைகளாக மாற்றப்படும் ஆபத்துள்ளது என்பதை முன்னைய கட்டுரைகளில் வரலாற்று ரீதியிலும் புள்ளிவிபரம் சார்ந்தும் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அண்மைக்கால தமிழ் தேசியக் கூட்டணியினரின் அரசியல் மேடைகளில் இணைப்புக்கு முஸ்லிம்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் சிறுபான்மை மக்களின் அரசியல் ஐக்கியத்தைப் பாதுகாக்கவே இதைக் கோருகிறோம் என்றும் கூறி வருகின்றனர். முஸ்லிம்கள் மீதான தமிழ்த் தேசியத்தின் இந்தக் கழிவிரக்கம் குறித்து முற்று முழுதாக விசுவாசம் கொள்ளும் நிலையில் வட கிழக்கு முஸ்லிம்கள் இல்லை.
10.07-.2016 அன்று வெள்ளவத்தை தமிழ்ச் சங்க நிகழ்வொன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் இணைந்த வடக்குக் கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்றுக்கொள்ள நாம் தயார் என்று கூறியிருந்தார். அவரது கருத்து பின்வருமாறு அமைந்திருந்தது.
“இணைந்த வடக்குக் கிழக்கு மாகாணத்தில் ஒரு பக்குவமான, படித்த முஸ்லிம் நபரை எமது முதலமைச்சராக ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். இதனை முஸ்லிம் தலைவர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள வேண் டும். தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதனாலேயே வடக்குக் கிழக்கு இணைந்திருக்க வேண்டும் என திடமாக வலியுறுத்தி வருகின்றோம். எமக்கு எதிராக எமது போராட்டத்திற்கு எதிராக பல அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன. பிரஜா உரிமைச் சட்டம் பாராளுமன்றில் சமர்ப் பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டதை அடுத்து தமிழ் மக்களின் அரசியல் பலம் குறைக்கப்பட்டது.
நாடு சுதந்திரம் அடைந்திருந்தபோது தமிழுக்கும் சிங்க ளத்திற்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என ஏற்றுக்கொள்ளப்பட்டி ருந்தது. ஆயினும், பின்னர் தனிச் சிங் களச் சட்டம் 1956 இல் நிறைவேற்றப் பட்டது.
பெரும்பான்மையினம் தமிழ் பேசும் இனங்களின் பிரதேசங்களில் குடியேற்றப்பட்டனர். விஷேடமாக கிழக்கு மாகாணத்தில் குடியேற்றங்கள் மிகத் தீவிரமாக இடம்பெற்றிருந்தன. எமது நாட்டில் 1947 ஆம் ஆண்டுக்கும் 1983 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் சிங்கள மக்களின் இயற்கையான அதிகரிப்பு 2.5 வீதமாகும். இக்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் அதிகரிப்பு வீதம் 9 ஆகும். தற்போதும் வடக்கு மாகாணத்தில் இவ்விதமான நிகழ்வுகளை நிறைவேற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இக்காரணத்தின் நிமித்தம் தான் வடக்கு, கிழக்கு இணைந்திருக்க வேண்டும்; தமிழ் பேசும் மக்களின் பெரும்பான்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை திடமாக வலியுறுத்துகின்றோம். இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் தலைவர்களும் புரிந்துகொள்ள வேண்டும்."
சம்பந்தர் போன்று இன்னும் பல தமிழ் அரசியல் தலைமைகள் முஸ் லிம்- - தமிழர் ஒற்றுமை குறித்து முழங்கி வருகின்றனர். தமிழ் தரப்புக்கு வழங் கப்படும் எந்தத் தீர்வுத் திட்டத்திற்கும் முஸ்லிம்கள் எதிரானவர்கள் அல்லர். அதேவேளை, வடக்கு, கிழக்கில் முஸ் லிம்களுக்கான தனியான அதிகாரப் பகிர்வு குறித்த விவாதமும் காலம் கடந்தது. மீளவும் கரையோர மாவட்டம் என்றோ, நிலத் தொடர்பற்ற மாகாண சபை என்றோ பேச வெளிக்கிடுவது நடைமுறை அரசியல் யதார்த்தத்திற்கு மிகவும் அந்நியமானவை.
முஸ்லிம் அரசியல் தலைமைகள் நிபந்தனையுடனான இணைப்பை ஏற்ப தோ நிபந்தனையற்ற இணைப்பை ஏற்பதோ இரண்டும் பெரும் அரசியல் துரோகமாகவே எதிர்காலத்தில் பார்க் கப்படும். இது குறித்து முடிவு செய்யும் தார்மீக அருகதை முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு இல்லை என்பதை சிவில் சமூகம் உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆக, வடக்குக் கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது தான் வடக்குக் கிழக்கு வாழ் முஸ்லிம் சிவில் சமூகத்தின் தெளிவான நிலைப் பாடாகும். கருத்துக் கணிப்புகளும், பிரதேச ரீதியான கலந்துரையாடல்களும் இதனை உறுதி செய்துள்ளது.