மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மக்கள் மத்தியில் தெளிவூட்டல் செய்யும் விதமாக வீடு வீடாக பிரச்சாரம் செய்வதுடன் நாட்டின் முக்கிய நகரங்களில் பொதுக்கூட்டங்களையும், கொழும்பில் "வாழ்வுரிமை மாநாடு" என்ற தலைப்பில் ஒரு மிகப்பெரிய மாநாட்டையும் நடத்துவது என நேற்று (05.10.2017) கம்பலையில் நடைபெற்ற ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய செயற்க்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமைப்பின் தலைவர் சகோ. MFM ரஸ்மின் MISc தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கடந்த காலங்களில் முஸ்லிம் தலைவர்கள் போராடி பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் இரவோடிரவாக விட்டுக்கொடுக்கும் அரசியல் தலைமைகளின் செயல்பாடுகள் மற்றும் உள்ளூராட்சி, மாகாண சபைகள் சட்ட மூலத்தின் பாதிப்புகள் தொடர்பிலும் விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டது.
செயற்குழுவில் நிறைவேற்ற முக்கிய தீர்மானங்கள்:
01. உள்ளுராட்சியில் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்வதை காரணமாக கூறி 25.08.2017 அன்று உள்ளுராட்சி தேர்தல் திருத்த சட்டம் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள் திருத்த சட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. குறித்த சட்டத் திருத்தத்தின் மூலம் உள்ளுராட்சி தேர்தல் முறையில் தொகுதிவாரி முறையில் 60 சதவீதமும் விகிதாசார முறையில் 40 சதவீதமும் என்ற அடிப்படையில் கலப்புத் தேர்தல் முறையில் தேர்தல்கள் நடத்தப்படும் என்ற சட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்த கலப்புத் தேர்தல் முறை என்பது முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை வெகுவாக குறைத்து முஸ்லிம்களின் ஜனநாயக உரிமையை இழக்கச் செய்யும் முறையாகும்.
அரசியல் சாசனத்தில் சீர்திருத்தம் செய்வதின் மூலம் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை கொள்ளைப் புறமாக மேற்கொள்வதின் மூலம் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை சிரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.
02. அதே போல் கடந்த 20.09.2017 அன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட மாகாண சபைகள் திருத்த சட்ட மூலத்தில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதாகவும், மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்பதற்காகவும் சட்ட மூலத்தை கொண்டு வருவதாக அறிவித்த ஆளும் நல்லாட்சி அரசாங்கம் இறுதி நேரத்தில் முஸ்லிம்களின் மாகாண சபைகளுக்காக பிரதிநிதித்துவத்தை குறைக்கும் விதமாக கலப்பு தேர்தல் முறை என்ற பெயரில் 60 சதவீதம் தொகுதிவாரி முறையிலும், 40 சதவீதம் விகிசார முறையிலும் தேர்தல்களை நடத்தும் ஒரு சட்ட மூலத்தை சமர்ப்பித்தது. குறித்த சட்ட மூலத்தின் மூலம் நல்லாட்சி அமைய அரும்பாடுபட்ட முஸ்லிம் சமுதாயத்தின் ஜனநாயக குரல்வலை நசுக்கப்பட்டு பெரும் அநியாயம் இழைக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைந்து விடும் அபாயம் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.
நாட்டு நலனை காரணம் காட்டி சட்டம் கொண்டுவந்து முஸ்லிம்களின் ஜனநாயக உரிமையை இரவோடு இரவாக குழிதோண்டி புதைக்கும் காரியத்தில் ஈடுபட்ட ஆளும் அரசாங்கத்தின் துரோகத் தனத்தை இந்த செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
03. பாராளமன்ற மரபுகளுக்கும், வழிமுறைகளுக்கும் மாற்றமாக ஒரு சட்ட மூலத்தை குழு கட்டத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவது சட்ட விரோதமானது என்பதுடன் ஒரு பாராளமன்ற சட்டம் மூலமாக இலங்கை தாய் சட்டமான அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்வது என்பது சட்டத்தின் ஆதிக்கத்தை கேள்விக்குரியாக்கும் ஒரு விவகாரமாகும்.
அந்த வகையில் சட்டத்தை புறம் தள்ளிவிட்டு நிறைவேற்றப்பட்டுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டங்களின் மாற்றம் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை பரிப்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் செய்துள்ளது என்பது வெளிப்படையாக தெரிகிறது.
மேலும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கபே, பெப்ரல் போன்ற அமைப்புகளும் இந்த சட்ட திருத்த முறை சட்ட விரோதமானது என்றும் ஜன நாயக விரோதமானது என்றும் கண்டங்களை வெளியிட்டுள்ளன.
இந்த சட்ட திருத்தங்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானதே என கூறி முன்னால் உயர் நீதி மன்ற நீதியரசர் சரத் என். ஸில்வா அவர்கள் உயர் நீதி மன்றத்தில் அடிப்படை மனித உரிமை வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த சட்ட விரோத சட்ட திருத்தத்தை இலங்கை அரசு வாபஸ்பெற வேண்டும் என்று இலங்கை அரசிடம் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்தும் இச் செயற்குழு மூலம் கோரிக்கை வைக்கிறது.
04. இலங்கைக்கு புதிய அரசியல் யாப்பு ஒன்றை கொண்டு வரும் முயற்சிகளில் தற்போதைய ரனில்-மைத்திரி கூட்டாட்சி ஈடுபட்டு வருகிறது. புதிய அரசியல் யாப்பு மூலம் வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைந்து ஒரே மாகாணமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. எதிர் கட்சி தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின் அண்மைய கருத்துக்களும் இதனை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளன.
புதிய அரசியல் யாப்பு விவகாரத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்கப்பட்டால் முஸ்லிம்களின் சனத்தொகை விகிதாசாரம் குறைந்து அரசியல் தனித்துவம் பலமிழக்கப்பட்டுவிடும் என்பதால் அரசாங்கத்தின் செயற்பாடுகளை இலங்கை முஸ்லிம்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என்பதுடன் வடக்கு கிழக்கு இணைப்பு என்ற பேச்சுக்கே இடம் வைக்கக் கூடாது என்பதையும் இச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.
05. முஸ்லிம் சமுதாயத்தின் பறிக்கப்படுகின்ற இந்த அரசியல் உரிமைகளை பரிகொடுத்த முஸ்லிம் அரசியல் தலைவர்களை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன் மறுக்கப்படும் உரிமைகளை மீள பெற்றுக் கொள்வதற்காக மக்களுக்கு விளக்கும் விதத்தில் ஜமாஅத் சார்பாக இரண்டு மாத காலத்திற்கு நாடு பூராகவும் 20க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கு இச்செயற்குழு தீர்மானிப்பதுடன் இறுதியில் மிகப் பெரிய வாழ்வுரிமை மாநாடொன்றை நடத்தி நல்லாட்சி அரசுக்கு அழுத்தம் தெரிவித்து முஸ்லிம் சமுதாய வாழ்வுரிமையை பாதுகாக்கும் போராட்டத்தில் ஜமாஅத் ஈடுபடும் என்பதையும் செயற்குழு அரசுக்கு தெரிவித்துக் கொள்கிறது.
06. முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகளை காரணம் காட்சி முஸ்லிம்களின் வாக்குகளை பெற்றுக் கொண்டு ஆட்சியை பிடித்த மைத்திரி - ரனில் கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சினைகள் எந்த விதத்திலும் முடிவுக்கு வரவில்லை.
பள்ளிகள் தாக்கப்படுவதும், முஸ்லிம்களின் பூர்விக நிலங்கள் கைப்பற்றப்படுவதும், முஸ்லிம்களுக்கு எதிரான வெருப்புணர்வுப் பிரச்சாரங்கள் செய்யப்படுவதும் அன்றாடம் நடைபெறும் காரியங்களாகவே இன்று மாறிவிட்டது.
முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து இனவாதிகள் மேற்கொள்ளும் தாக்குதல்கள் காரணமாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் பல தீயில் கருகியதின் மூலம் பல கோடிக் கணக்காக சொத்துக்களை முஸ்லிம் வியாபாரிகள் இழந்துள்ளார்கள்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற இனவாத செயல்பாடுகளை மிஞ்சும் விதமான பாரிய இனக் குரோத செயல்பாடுகள் நல்லாட்சி நடைபெறுவதாக கூறப்படும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போதும் நடைபெற்று வருகிறது. ஆனால் குறித்த இனவாத செயல்பாடுகளுக்கு எதிராக எவ்விதமான முழுமையான நடவடிக்கைகளையும் இவ்வரசாங்கம் மேற்கொள்ளாமல் இருப்பதுடன்,இனவாதிகளை பாதுகாக்கும் விதமாகவும் நடந்து கொள்கிறது.
முஸ்லிம்களின் இருப்பையும், வாழ்வாதாரத்தையும் அழிக்க நினைக்கும் இனவாதிகளுக்கு துணை போகும் அரசாங்கத்தின் செயல்பாடுகளை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
07. மியன்மாரின் ரோஹிங்யா மாநிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் மீது அந்நாட்டு அரசாங்கமும், இராணுவமும் சேர்ந்து நடத்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டு, பல இலட்சக் கணக்கான முஸ்லிம்கள் உயிர் பிழைப்பதற்காக தப்பித்து ஓடி அகதிகளாக பல நாடுகளிலும் தஞ்சமடைகிறார்கள்.
அந்த வகையில் கடல் வழியாக தப்பி வந்த ரோஹிங்கிய அகதிகளில் சிலர் இலங்கை கடற்பரப்பில் தத்தளித்த வேலை இலங்கை இராணுவத்தினால் காப்பாற்றப்பட்டு ஐ.நா. வின் அகதிகளுக்கான இலங்கை ஆணையாளர் மூலம் முறைப்படி இலங்கையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
குறித்த அகதிகளை இலங்கையில் இருந்து வெளியேற்றுமாறு கோரி, அடைக்கலம் தேடிய அகதிகள் என்றும் பாராது அவர்கள் மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட இனவாதிகள் மீது அரசு முழுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், மனித நேயத்திற்கு முழு எதிரிகளாக தங்களைத் தாங்களே காட்டிக் கொண்டவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்தி உரிய தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கு முறையான முழு முயற்சிகளிலும் அரசு தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இச்செயற்குழு அரசை கோருகிறது.
இனவாத பிரச்சினைகளின் போது முஸ்லிம்களை ஏமாற்றும் விதமான சில நடவடிக்கைகளை மாத்திரம் கண்துடைப்புக்காக செய்வதும், நிலைமை கட்டுக்குள் வந்த பின்னர் குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுவதும் இனவாத விவகாரங்களில் தொடர்ந்தும் நடைபெற்று வரும் ஒரு நாடகமாகும்.
கடந்த காலங்களில் நடத்தப்பட்ட கைது நாடகங்களைப் போல் ரோஹிங்யா அகதிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் விஷயத்திலும் அவர்களை தப்பிக்க வைக்கும் நாடக முயற்சிகள் நடைபெறக் கூடாது என்றும் அப்படி நடப்பது சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கையை சிறுபான்மை மக்கள் மத்தியில் இழக்கச் செய்து விடும் என்பதையும் ஆளும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் இச் செயற்குழு அரசை வேண்டிக் கொள்கிறது.
08. இலங்கையில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ள ரோஹிங்யா அகதிகளைப் பொருத்த வரையில் ஐ.நா சபை ஊடாக ஐ.நா. வின் அகதிகளுக்கான இலங்கை ஆணையாளர் தீர்மானிக்கும் ஓர் நாட்டுக்கு அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும் வரை இலங்கையில் அவர்கள் இருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களுக்குறிய முழுமையான பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றும் இச் செயற்குழு வேண்டிக் கொள்வதுடன், ரோஹிங்யா அகதிகள் இங்கு தங்கும் கால கட்டத்தில் அவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியவசிய தேவைகளையும் முழுமையாக பூர்த்தி செய்து அவர்களை விருந்தாளிகளாக மனமுவந்து கவனிப்பதற்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் எப்போதும் தயாராக இருக்கிறது.
குறித்த அகதிகளை கவனிக்கும் பொருப்பை ஏற்றுக்கொண்டுள்ள ஐ.நா. வின் அகதிகளுக்கான இலங்கை ஆணையாளர் சிரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக எழுத்து பூர்வமான கோரிக்கை கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்யா அகதிகளின் அத்தியவசிய தேவைகளை நிறைவேற்றும் முழு செலவீனத்தையும் சிரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றுக் கொள்வதற்கு எப்போதும் தயாராக இருக்கிறது. முறைப்படியாக சட்ட ரீதியில் ரோஹிங்ய அகதிகளை கவனிக்கும் பணியை தவ்ஹீத் ஜமாஅத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசும் தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இச்செயற்குழு அரசாங்கத்தை வேண்டிக் கொள்கிறது.