Top News

அட்டாளைச்சேனைக்கு எம்.பி?



அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் (நியமன எம்.பி, தேசியபட்டியல்) ஆசனம் வழங்கும் விடயமானது கடந்த 17ஆண்டுகளாக கட்சி தலைவர் ஹக்கீம் இன்று, நாளை, நாளை மறுதினம் என்று அம்புலிமாமா கதையாகவும், அலிபாபா கதையாகவும் இருந்து வரும் நிலையில் இனிமேலும் இந்தகதை எடுபடாது, கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலைக்கு ஹக்கீம் தள்ளப்பட்டுவிட்டார்.

அந்த வகையில் தற்போது இருக்கும் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர்க்கு தேசியபட்டியல் எம்.பியை வழங்கும் முடிவுக்கு ஹக்கீம் பேச்சளவில் விருப்பம் தெரிவித்துள்ளாதாக அறியவருகின்றது.

தேசியபட்டியல் ஆசனம் -2
முஸ்லிம் காங்கிரசிக்கு ஐ.தே.கட்சி வழங்கிய 2 தேசியபட்டியல் ஆசனம் உள்ளது. ஒன்று கிண்ணியா தௌபீக் மற்றையது காலி சல்மான் சட்டத்தரணி.இந்த இரண்டு எம்.பிக்களில் ஒன்று அடுத்தவருக்கு அடிக்கடி மாற்றம் செய்யப்படும் எம்.பியாகும் என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று உள்ளது.

அதிலும் குறிப்பாக கிண்ணியா எம்.பி என்பது அட்டாளைச்சேனை, வாளைச்சேனை மற்றும் வன்னி என்று சுழற்சி முறையில் சுற்ற வேண்டிய எம்.பி என்றுதான் ஹக்கீம் கணக்கு ஒன்று வைத்திருந்தார்.
ஆனால் கிழக்கு மாகாண தேர்தல் நடத்தாமல் பிந்திப் போனதால் கிண்ணியா தௌபீக் எம்.பியின் ஆசனம் இப்போதய நிலையில் பங்கு போட முடியாத இக்கட்டான நிலை.

காரணம் கிழக்கு மாகாண தேர்தல் நடைபெறுமானால்தான் தௌபீக் எம்.பியை இராஜினாமா செய்யுமாறு ஹக்கீம் உத்தரவிடுவார்.
தௌபீக் எம்.பியை கிழக்கு மாகாண தேர்தலில் ஐ .தே கட்சியின் கூட்டில் திருகோணமலை தலைமை வேட்பாளராக களமிறக்கும் முழு நோக்கம் ஹக்கீமுக்கு உள்ளது. ஆனால் தேர்தல் இல்லை என்பதால் தௌபீக் எம்.பி ஆசனத்திக்கு ஆபத்தில்லை எனலாம்.

ஹக்கீமுக்கு ஒருபாரிய பொறுப்புள்ளது. சல்மான் சட்டத்தரணி மற்றும் மன்னார் பாயிஸ் (ஜனாதிபதி சட்டத்தரணி) ஆகிய இருவரையும் எம்.பியாக்கி அழகு பார்க்க வேண்டிய கடமையில் உள்ளார்.
காரணம் ஹக்கீமின் தலைமை பதவிக்கு ஆபத்து வந்த நேரங்களில் மற்றும் ஹக்கீம் தனது இஷ்டப்படி உயர்பீட உறுப்பினர்களை மாற்றுவது மற்றும் ஹசன் அலியின் செயலர் பதவி பறிப்பது சம்மந்தமான சட்ட நுணுக்கங்கள் சட்ட சிக்கல்களை தீர்த்து வைப்பது போன்ற பணிகளில் இந்த இருவரின் பொறுப்பு இருந்து வருகின்றது.

அதனால் நியமன எம்.பி என்ற செஞ்சோத்துக் கடனை ஹக்கீம் செய்ய வேண்டிய பாரிய பொறுப்பில் உள்ளார். அடுத்து வருடம் பொது தேர்தலில் கிடைக்கும் போனஸ் ஆசனத்தில் பாயிஸ்சுக்கான செஞ்சோத்துக் கடனை கொடுக்கும் வாய்ப்பு ஒன்று அமையலாம்.

அட்டாளைச்சேனைக்கு எம்.பிக்கா அழுத்தம்

அட்டாளைச்சேனைக்கு எம்.பி கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஹக்கீம் வந்தாலும் எனக்கு வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு ஒருபுறம் ஒருவர் மறுபுறம் மற்றவர் இப்படியாகத்தான் கடந்த காலங்கள் நகர்ந்தது.

அட்டாளைச்சேனைக்கு எப்போது எம்.பி வேண்டும் என்ற அழுத்தம் அதிகரிக்கின்றதோ அப்போதெல்லாம் வைக்கோல் பட்டறைகள் இப்படி காவடி எடுப்பது என்பது கடந்த 17ஆண்டுகளாக நன்றாக நடைபெற்று வருகின்றது.
இந்த காவடி ஆர்ப்பாடத்தை பயன்படுத்தி ஹக்கீம் விடும் காமடி உங்களுக்குள் ஒன்றுமை இல்லையே என்ற வாதத்தை பயன்படுத்தி எம்.பி கொடுக்காமல் தப்பித்து வருவது வாடிக்கை.

அட்டாளைச்சேனைக்கு எம்.பி கொடுக்க வேண்டும் என்ற நெருக்கடி ஒன்று அதிகரித்து உச்சகட்டத்தை அடைந்த போது அப்போது நசீருக்கு மாகாணஅமைச்சை கொடுத்து ஹக்கீம் தப்பித்துக் கொண்டார்.
இப்போது அட்டாளைச்சேனைக்கு எம்.பி வழங்க வேண்டிய பாரிய பொறுபுக்குள் ஹக்கீம் தள்ளப்பட்டு விட்டார். காரணம். யாரின்யைஎம்.பி நசீருக்கு வழங்குவது?

தௌபீக்கை பொறுத்த மட்டில் ஒரு காரணம் இல்லாது ஒரு அதிகாரம் இல்லாது தற்போதய எம்.பியை கொடுப்பது என்பது தௌபீக்கின் எதிர்கால அரசியல் இருப்புக்கு பிழையான முடிவாக அமையலாம்.
அதனால் தௌபீக்கை கிழக்கு மாகாண தேர்தலில் களமிறக்கும் நோக்கில் கிழக்கு தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் தௌபீக் தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வன்னிக்கு எம்.பி

முஸ்லிம் இன அரசியல் என்றாலே குத்து வெட்டு குழிபறிப்பு படையடுப்பு சூதுவாது யாரை வெட்டியாவது பதவியை அடைய வேண்டும் என்ற முடிவில்தான் நிற்கும்.
வன்னியில் அமைச்சர் ரிசாத் அணியின் முன்னாள் எம்.பி ஹுனைஸ் பாரூக் ஹக்கீம் அணியில் இணைந்து விட்டார். இக்கரைக்கு அக்கரை பச்சை.
எதிர்வரும் பொது தேர்தலில் அமைச்சர் ரிசாத்தின் வெற்றிக்கு குறுக்கே இந்த ஹுனைஸ் பாரூக்கை முற்று முழுதாகப யன்படுத்தும் திட்டம் ஹக்கீமுக்கு உள்ளது.

அதாவது எதிர்வரும் பொது தேர்தலில் ரிசாத்தின் வாக்கு வங்கியை உடைக்க முடிந்தவரை இந்த ஹுனைஸ் எம்.பியை ஒரு பகடைக் காயாக பாவிக்கும் திட்டம் ஹக்கீமுக்கு உள்ளது.

கிடைத்தால் ஹுனைசை எம்.பியாக்கி ஒருபாதி அமைச்சு கொடுத்து ரிசாத்தின் அரசியல் முன்னடுப்புக்கு ஒரு முட்டுக்கட்டை போடுவது என்பதுதான் ஹக்கீமின் மெகாபிளான்.

அதற்காக ஹுனைஸ் பாரூக்கை எம்.பியாக நியமனம் செய்ய வேண்டும் பொது தேர்தலுக்கு முன்னர் ஒரு வருடமாவது ஹுனைஸ் பாரூக் ஹக்கீமிடமிருந்து எம்.பி பெறும் நிலை உள்ளது.
அப்போது சில வேளை சல்மான் எம்.பி பதவி போகலாம். ஆனால் அதுவல்ல நோக்கம் சல்மான் எம்.பி ஓய்வூதியம் பெறும் காலமான 5 வருடங்கள் கடக்க வேண்டும்.

ஆக 5 வருடங்கள் கடந்துதான் சல்மான் எம்.பி பதவி கைமாறும். அதனால் தௌபீக் எம்.பியின் பதவிதான் நசீருக்கு மாறுவதற்கான அதிக வாய்ப்புள்ளது.
ஆனால் பொத்துவில் தொகுதி தேர்தல் வலயத்தில் நசீரின் தேவை ஹக்கீமுக்கு மிக அவசியமாக தேவைப்படும். பொத்துவில் தொகுதி தேர்தல் வலயத்தில் ஒரு பலமான எதையும் எதிர்கொள்ளும் ஆட்பலம் கொண்ட நசீரின் தேவை என்பது மிக முக்கியமானது.

இந்தசக்தி இல்லை என்றால் இப்பகுதியில் ஹக்கீம் நுழைவது சிரமம் என்ற நிலை உருவாகும். அத்துடன் ஜனவரியில் நடை பெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் பொத்துவில் இறக்காமம் மற்றும் அட்டாளைச்சேனை பகுதிகளில் முன்னாள் அமைச்சர் நசீரின் தேவை என்பது ஹக்கீமுக்கு அவசிய தேவை என்பதையும் ஹக்கீம் எடை போட்டிருப்பார்.

கிண்ணியாவில் மகிந்தவின் கிரீஸ் பூதம் கூத்துக்கள் காட்டிய போது கிண்ணியாவுக்கு வருகை தந்த ஹக்கீமை மாற்றுக் குழுவினர் ஒன்று ஹக்கீமுக்கு தொல்லை கொடுத்து புஹாரி பள்ளிக்குள் கைதி போன்று வைத்த கதையாக பொத்துவில் தொகுதி தேர்தல் வலயத்தில் நடக்கலாம்.
அப்படிப்பட்ட நிலைமைகளில் ஒரு துணைப்படை போன்று ஹக்கீமை பாதுக்காக்கும் கேடயமாக நசீரை ஹக்கீம் பயன்படுத்தக்கூடிய திட்டமும் ஹக்கீமுக்கு இருக்கலாம். இவைகளை எல்லாம் கருத்தில் கொண்டு ஹக்கீம் நசீருக்கு எம்.பி பதவி வழங்கலாம்.

அட்டாளைச்சேனையின் வரலாற்றில் முன்னாள் அமைச்சர் நசீர் மாவட்ட வாரியான தேர்தலில் முதன் முதலாக போட்டிட்டு கடந்த மாகாண தேர்தலில் வெற்றி பெற்றவர்.

கடந்த காலங்களில் அட்டாளைச்சேனையில் பலர் பல தேர்தல்களில் போட்டியிட்டாலும் முன்னாள் அமைச்சர் நசீர் மற்றும் முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை ஆகிய இருவரும்தான் வெற்றி பெற்றுள்ளார்கள்.
அட்டாளைச்சேனைக்கு இம்முறை எம்.பி கிடைக்கவில்லை என்றால் ஜனவரி நடைபெறவுள்ள தேர்தலில் பாரிய மாற்றம் காணும் நிலை உள்ளது.

ஹக்கீம் கட்சியின் அட்டாளைச்சேனை தொண்டர்கள் பாரிய விரக்தியில் உள்ள நிலையில் ரிசாத் அணி புகுந்து பணத்தை அள்ளி இறைத்தால் பாரிய வாக்கு வேட்டையில் ஈடுபட்டால் அட்டாளைச்சேனை சபையை ரிசாத் அணி கைப்பற்றலாம். நல்ல வாய்ப்பு பார்ப்போம்

எம்.எம். நிலாமுடீன்,
மூத்த பத்திரிகையாளர்
Previous Post Next Post