ரோஹிங்ய முஸ்லிம் அகதிகள் விவகாரத்தில், மனித நேயமின்றி நடந்துகொண்ட அத்தனை பேருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்தார். கல்கிசைப் பகுதியில் கடந்த செப்டெம்பர் 26 ஆம் திகதி பிக்குகளின் தலைமையில், ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அத்து மீறல்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இதனைத் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தை வன்மையாக கண்டித்த பொலிஸ் மா அதிபர், தனியார் நிகழ்ச்சி நிரல்களுக்காக செயற்பட்டு மனித நேயமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டோருக்கு மன்னிப்பு கிடையாது எனவும் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது சீனாவில் இடம்பெற்ற மாநாடொன்றில் கலந்துகொண்டிருந்த பொலிஸ் மா அதிபர் நாடு திரும்பியதும், அந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் தகவல்களை கேட்டறிந்துள்ள நிலையில், அடையாளம் காணப்படும் ஒவ்வொரு சந்தேக நபரையும் உடன் கைது செய்ய கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்நிலையில் சுமார் 8 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.