ஏ.எஸ்.எம்.தாணீஸ்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் ,ஸ்தாபித்தல் தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள குழு பொது மக்களின் கருத்துக்களை எதிர்வரும் ஒக்டோபர் 23 க்கு முன்னர் மாவட்ட செயலாளருக்கு அனுப்பி வைக்க முடியும் என மாவட்ட செயலகம் கோரியுள்ள நிலையில் தோப்பூர் பிரதேசத்திக்கு தனியான பிரதேச சபை அமைக்கப்படுமா?என்ற கேள்வியினை தோப்பூர் மஜ்லிஸ் அஸ்-சூறா அமைப்பினர் எழுப்பியுள்ளனர்.
இன்று 10 மஜ்லிஸ் அஸ்-சூறா அமைப்பினரின் விசேட கூட்டம் தோப்பூர் றோயல் கணிஷ்ட்ட பாடசாலையில் நடைபெற்ற போதே இக்கேள்வி சபையினரால் ஏற்படுத்தபட்டது.
அதேவேலை தோப்பூர் பிரதேசமானது நீண்டகால வரலாற்றினை கொண்டதாகும்,மன்னர் ஆட்சிக்காலம் தொடக்கம் இற்றைவரை தனித்துவத்துடன் வாழ்ந்து வருகின்ற சூழலில் இவ்வாறான உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல், ஸ்தாபித்தல் தொடர்பாக அமைச்சு மட்ட அறிவிப்பு வந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமொன்றாகும்.
மேலும் புதிய உள்ளுராட்சி மன்றங்கள் உருவாக்கம் அது தொடர்பான மாற்றங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை நகர சபையை மாநகர சபையாக தரமுயர்த்தல்,மூதூர் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுதல்,கந்தளாய் பிரதேச சபையை நகர சபையாக மாற்றுதல்,கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குட்பட்ட உப்பாறு கிராம சேவை பிரிவின் ஒரு பகுதியை கிண்ணியா நகர சபையோடு இணைத்தல்,கொட்டியாரப்பற்று என்னும் பிரதேச சபையினை ஸ்தாபித்தல் போன்ற திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தோப்பூருக்கான பிரதேச சபை கோரிக்கை அப்பிரதேச மக்களால் முன்வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்,முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் இப்பகுதியில் புதிய இரு சபைகளை உருவாக்க வேண்டுமென முன்மொழிவுகள் மாவட்ட அரசியல் தலைமைகளாலும்,சிவில் அமைப்புகளாலும் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறானதொரு வரைபு வந்துள்ளமையானது வேதனை அளிக்கின்றது.
அதேவேலை புதிய உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்கும் கோரிக்கை இருக்குமாயின் ஒக்டோபர்.30 க்கு முன்னர் திருகோணமலை மாவட்ட செயலாளருக்கு தமது கோரிக்கைகளை முன்வைக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்
எனவே பாதிக்கப்பட்ட தோப்பூர் பிரதேச மக்களுக்கான பிரதேச சபை கோரிக்கை தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைமைகள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் பிரதேச சபை கோரிக்கையை முன்வைக்க வேண்டுமெனவும் தோப்பூர் புதிய பிரதேச சபை உருவாக்கத்திக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் தோப்பூர் மஜ்லிஸ் அஸ்-சூறா அமைப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர்.