Top News

ஏற்றுமதி தரத்திலான பின்லாந்தின் கழிவு மீள்சுழற்சி்; கொஞ்சம் இதையும் வாசியுங்கள்


ஆதில் அலி சப்ரி - பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனான பின்லாந்து விஜயத்தைத் தொடர்ந்து எழுதப்பட்டது

கைத்தொழில் புரட்சி, உலகமயமாக்களின் விளைவுகளைத் தொடர்ந்து  உலகம் முகங்கொடுத்த முதன்மைப் பிரச்சினைகளில் ஒன்றாக கழிவகற்றல் மற்றும் கழிவு முகாமைத்துவம் காணப்பட்டது. உலக நாடுகள் பலதும் இன்று கழிவகற்றல், கழிவு முகாமைத்துவத்தில் வெற்றிகொண்டு கழிவுகளை பலவகையிலும் மீள்சுழற்சி செய்து, வலு உற்பத்திகளை மேற்கொள்வதில் வெற்றிகொண்டுள்ளன.

இலங்கையை நோக்கும் போது நிலைமைகள் தலைகீழாக உள்ளன. கழிவகற்றல் மற்றும் கழிவு முகாமைத்துவத்தில் பின்தங்கிய நாடுகள் பட்டியலில் பிரதான இடம் வகிக்கின்றது. கழிவு முகாமைத்துவத்தில் எந்தவோர் அரசாங்கமும் கவனம் செலுத்தவில்லை. கழிவகற்றலில் அளவுக்கு மிஞ்சிய இலாபத்தை அனுபவிக்க கேள்வி மனுக்காரர்களுக்கும், அரசியல்வாதிகளின் அல்லக்கைகளுக்கும் சந்தர்ப்பமேற்படுத்திக்கொடுத்ததே காலா காலமாக அரசாங்கங்கள் செய்துவந்த பணி.

இவ்வருடம் சிங்கள- தமிழ் புத்தாண்டு தினத்தன்று மீத்தொட்டமுல்லையில் ஏற்பட்ட மனிதப் பேரவலம் கழிவகற்றல் மற்றும் கழிவு முகாமைத்துவத்தில் இலங்கை எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதையும் இலங்கையின் குப்பை அரசியலையும் உலகுக்குக் காட்டியது. 

மீதொட்டமுல்லை குப்பை மேட்டு சரிவு அல்லது வெடிப்பில் 147 வீடுகள் முற்றாக மண்ணில் புதைந்துபோனது. 180 குடும்பங்களைச் சேர்ந்த 625 பேர் பாதிக்கப்பட்டனர். 33 சடலங்கள் மீட்கப்பட்டன. 3 சடலங்கள் இனங்காண முடியாதளவு சிதைவடைந்திருந்தன. 20-40 வரையிலானோர் புதையுண்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் இற்றைக்கு ஆறு மாதங்கள் தாண்டும் போது குறித்த சம்பவமும் புதையுண்டுபோயுள்ளது.
மீதொட்டமுல்லை சம்பவத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஊடக அறிக்கைகள் பறக்க ஆரம்பித்தன. குப்பை மேட்டிலிருந்து மின் உற்பத்தி, பசளை உற்பத்தி, இலங்கையில் நவீன வசதிகளுடன் குப்பை மீள்சுழற்சி என்றவாரிருந்தது.

உடனடி மாற்றுத் திட்டங்களாக கொழும்பின் குப்பைகளை புத்தளத்திற்கும் முத்துராஜவலைக்கும் அனுப்ப இருப்பதாக அறிவித்ததும், கொழும்பின் குப்பைகள் எமக்கு வேண்டாமென பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன. கொழும்பின் குப்பைகளை இடமாற்றுவது பிரச்சினைக்கு தீர்வாக அமையாதென்பதை அரசாங்கம் புரிந்துவைத்திருந்தாலும் குப்பையுடன் தொடர்புபட்ட அதி உச்ச இலாபத்தை இழக்க தயாராகுவதில் இழுத்தடிப்புகள் தொடர்ந்தன. 

மீதொட்டமுல்லை சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க கழிவகற்றல் பிரச்சினைக்கு 6 வாரங்களில் தீர்வுகாண்பதாக வாக்களித்து, குழுவொன்றையும் நியமித்தார். அக்காலப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட தேசிய,
சர்வதேச நிறுவனங்கள் அவைகளின் திட்டங்களை முன்வைத்திருந்தனர். நகர அபிவிருத்தி அதிகார சபை, கொழும்பு மாநகர சபை போன்றன இதனால் பெறும் இலாபம், இலஞ்சம் போன்றவற்றை இழக்கும் நிலையேற்படும் என்பதால் திட்டங்களை மேற்கொள்ள இடமளிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை.

சுவீடனின் நிறுவனமொன்று இலங்கையின் குப்பைகளை இலவசமாக பெற்று, கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சிக்கு ஈடுபடுத்தி இலாப பங்கீடு மேற்கொள்வதற்கும் முன்வந்தது. எம் கழிவுகளை இலவசமாக தரமுடியாதென்று கூறிய அரசாங்கம் அதற்கு விலையொன்றையும் நிர்ணயித்தது. இலவசமாக கழிவுகளை மீள்சுழற்சி செய்ய வந்தவர்களுக்கு சுமக்க முடியாத விலையை நிர்ணயித்தமையே இலங்கையின் கழிவு முகாமைத்துவம் தொடர்ந்தும் சீரற்றிருப்பதற்குக் காரணம்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தூதுக்குழுவின் பின்லாந்தில் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர். நானும் பிரதமர் ஊடகக்குழுவில் இடம்பெற்றிருந்தேன். பின்லாந்தில் கழிவகற்றல் மற்றும் கழிவு முகாமைத்துவத்தில் முதலிடம் வகிக்கும் நிறுவனமொன்றுக்கு கள விஜயம் செய்து விடயங்களை நேரில் காணக்கிடைத்தது. பிரதமர் தலைமையிலான குழுவினர் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுக்குழுவுடன் பேச்சுவார்த்தையொன்றிலும் ஈடுபட்டனர்.
பின்லாந்தின் போர்டும் மீள்சுழற்சி மற்றும் கழிவு முகாமைத்துவ நிறுவனம் அயல் நாடுகளான டென்மார்க், சுவீடன் மற்றும் நோர்வேயிலும் இயங்கி வருகின்றது. பின்லாந்தின் ரிஹிமாகியில் அமைந்துள்ள போர்டுன் கழிவு முகாமைத்துவ வளாகத்தையே நாம் பார்வையிட்டோம்.

கழிவு, குப்பையென்கின்றபோது எமக்கு மீதொட்டமுல்லையும் புலூமென்டலும் தான் நினைவுக்கு வருகின்றது. அது எவ்வாறிருக்குமென்று நான் தெளிவுபடுத்தவேண்டியதில்லை. மீதொட்டமுல்லை அனுபவமுள்ள ஒருவருக்கு இப்போதே குமட்டியிருக்கும். நாம் பார்வையிட்ட போர்டுன் நிறுவனம் இவற்றுக்கு நேர்மாறாக இருந்தது. மக்கள் குடியிருப்புக்களுக்கு அண்மித்த, இயற்கை வனப் பகுதியில், அழகு பொருந்திய சூழலில் 47 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1969ஆம் ஆண்டிலிருந்து குப்பைகளை வகைபிரித்து, சேகரித்து, எடுத்துவந்து, களஞ்சியப்படுத்தி, மீள்சுழற்சிக்கு உற்படுத்தி, உற்பத்திகள் பல மேற்கொண்டு சந்தைப்படுத்தும் துறையில் செயற்பட்டு வந்துள்ளது. 2017ஆம் ஆண்டே போர்டுன் என்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது.  

நாட்டின் நகர் புறங்களின் அனைத்துவிதமான கழிவுகளும் அங்கே கொட்டப்படுகின்றன. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வாகனத்தை தொடர்ந்து சொகுசு பஸ் வண்டியொன்றிலும், சில இடங்களில் இறங்கியும் பார்வையிட்டோம். அப்போதும் கழிவுகள் கொண்டுவந்து கொட்டப்பட்டுக்கொண்டிருந்தன. எனினும், நாம் அங்கு எவ்வித துர்நாற்றத்தையோ, வாடையையோ உணரவில்லை.

நகர் புறங்களில் இருந்து கொண்டுவந்து கொட்டப்படும் கழிவுகளை குறித்த தினத்திலே இயந்திரங்கள் மூலம் தரம், வகை பிரிக்கப்பட்டு அடுத்த கட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு அதற்கே உரிய இயந்திரங்கள் மூலம் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்பட்டு பல்வேறு உற்பத்திப் பொருட்களாக வெளிவந்து, சந்தைப்படுத்தப்படுகின்றன. இதற்கிடையே மாதங்கள், கிழமைகள், நாட்கள் உருண்டோடிவிடுகின்றன.

போர்டுன் கழிவு முகாமைத்துவ கிராமத்தை பொருளாதார கிராமமென்றே அழைக்கின்றன. அங்கு ஓர் நுழைவாயிலால் கழிவாகவும் குப்பையாகவும் வருபவை இன்னோர் நுழைவாயிலால் ஏற்றுமதி தரத்தில் தயாரிக்கப்பட்ட உற்பத்திப் பொருட்களாக வெளியாகின்றன.

கழிவுகள் கொண்டு 20 மெகா
வோட்ஸ் வரையான மின் உற்பத்திசெய்யப்படுகின்றன. ஏற்றுமதி தரத்திலான பசளை வகைகள், சிலின்டர்களில் அடைக்கப்பட்ட உயிர் வாயு, நீராவி, இறப்பர் கையுறைகள், பிலாஸ்டிக் பொருட்கள், பொலிதீன் பைகள், தார், சிலவகை எண்ணைகள், இரும்பாணிகள் என உற்பத்திப் பொருட்களின் பட்டியல் நீண்டு செல்கின்றன.       

பிரதமர் தலைமையிலான இலங்கையின் தூதுக்குழுவினர் போர்டுன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபையுடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டேன். அங்கு போர்டுனின் செயன்முறை குறித்து தெளிவுபடுத்தும் உரையைத் தொடர்ந்து இலங்கையின் விடயத்துக்கு வந்தார்கள்.

பின்லாந்தின் நகர்களில் நாளாந்தம் 150 டொன் கழிவுகள் சேகரிக்கப்படும்போது, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளின் அது 1500 டொன்களாக காணப்படுகின்றது. இலங்கையில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 100 ஏக்கர்கள் அளவில் தேவைப்படும் என பிரதமர் கூற, அதுவும் போதாமல் போகுமென்று அவர்கள் கூறினர். தலைநகருக்கு கிட்டிய பகுதியில் பொருத்தமான இடமொன்றை பெறுவதில் உள்ள சிக்கல் குறித்தும் ஆராயப்பட்டது.  இலங்கையில் கழிவுப் பொருட்களில் இருந்து உற்பத்தி குறித்து சிந்திக்காவிட்டாலும், முதற் கட்டமான கழிவு முகாமைத்துவம் குறித்த மாத்திரமாவது கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்று பிரதமரின் செயலாளர் தெரிவித்தார். பின்லாந்தில் ஆராயப்பட்ட விடயங்கள் இலங்கைக்கு ஏற்ற விதத்தில் உபயோகிப்பதில் காலம் தாழ்த்தக்கூடாது. அது மீண்டுமோர் மீதொட்டமுல்லை அவலம் ஏற்படுவதிலிருந்து நாட்டையும் மக்களையும் காப்பதாக அமைய வேண்டும்.  பிரதமரின் பின்லாந்து விஜயம் கல்வி மறுமலர்ச்சியில் போன்றே கழிவு முகாமைத்துவத்திலும் மாற்றங்கள் சாத்தியமாகுமென்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெறுமனே சுற்றுலாப் பயணங்கள், வெளிநாட்டு விஜயங்கள், வட்ட மேசை மாநாடுகள் என்பதை கடந்து, நாட்டின் உடனடித் தேவைகள் குறித்து பிரதமரின் பின்லாந்து விஜயத்தில் ஆராயப்பட்டதை பாராட்டியேயாக வேண்டும்.
Previous Post Next Post