“எனது கைக்குழந்தை என் கைகளில் இருந்து வழுக்கி, தவறி கடலினுள் விழுந்தது....” கடந்த வியாழக்கிழமை மியன்மாரிலிருந்து பங்களாதேஷ் கடல் வழியாக தப்பிச் செல்லும்போது படகு கவிழ்ந்து 60 ரோஹிங்ய அகதிகள் பலியாகியிருக்கலாம் என கூறப்பட்ட சம்பவத்தில் உயிர் தப்பியுள்ள 23 வயது நிரம்பிய ராஷிதா எனும் ரோஹிங்ய அகதிப் பெண் தனது 7 மாதக் ஆண்குழந்தை தனது கைகளில் இருந்து வழுக்கிச் சென்று கடலினுள் விழுந்து கண்முன்னே இறந்தமையை விவரிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
கடல் கொந்தளிப்பு காரணமாகவும் அதிகரித்த பயணிகளின் எடை காரணமாகவும் இவர்கள் பயணம் செய்துள்ள படகு இரண்டு துண்டங்களாக உடைந்து போனதும் ஒரு துண்டம் கடலினுள் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தன் கைகளில் ஏந்தியிருந்த தனது கைக்குழந்தை கடல் நீரினுள் விழுந்து சுழியினால் கடலடிக்கு இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் கண்முன்னே நிகழ்ந்த அவலத்தை ராஷிதா அனுபவித்துள்ளார். தற்போது பங்களாதேஷ் கொக்ஸ் பஸார் பகுதியில் அமைந்துள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் ராஷிதா படகு கவிழ்ந்து அகதிகள் பலியான கோரச் சம்பவத்தில் தனது குழந்தை கடலினுள் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தை தனது சகோதரியின் கைகளை இறுகப் பற்றியவாறு விவரித்தார்.
இந்தச் சம்பவத்தில் ராஷிதாவின் தாயாரும் 8 வயது நிரம்பிய சகோதரியும் பலியாகியுள்ளனர். ராஷிதாவின் தந்தையும் ஏனைய சகோதரிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இப்படகில் 50 சிறுவர்கள் உட்பட 80 அகதிகள் பயணித்ததாகவும், கரை சேர்வதற்கு சில மீற்றர்களே இருக்கும் நிலையில் கடல் கொந்தளிப்பு காரணமாக அனர்த்தம் நிகழ்ந்ததாகவும் விபத்தில் மீட்கப்பட்ட ரோஹிங்ய அகதிகள் தெரிவிக்கின்றனர். மியன்மார் ராக்கைன் பிரதேசத்தின் இராணுவத்தின் கொடுமைகள் தாளாது பங்களாதேஷில் அடைக்கலம் புகுவதற்காக நாட்கணக்கில் அடர்ந்த காடுகள் ஊடாக கால்நடையாக நடந்து, பின்னர் கடல்வழியாக பங்களாதேஷ் நோக்கி தப்பிச் சென்ற வேளையிலேயே இவ்விபத்து நிகழ்ந்ததாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இவ்விபத்தில் 23 ரோஹிங்ய அகதிகள் பலியாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 40 பேர் காணாமல் போயுள்ளதாகவும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இவர்கள் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இவ்விபத்தில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இன்னொரு ரோஹிங்ய அகதி மொஹமத் ஹாசிம் விபத்தில் தனது மனைவியையும் இரு பெண் குழந்தைகளையும் பலிகொடுத்துள்ளார். மீட்கப்பட்ட அவரது மகன் தந்தையின் கால்களை இறுகப் பற்றிப் பிடித்தவாறும், மகள் அதிர்ச்சியில் உறைந்தவாறும் இருக்கின்றனர். விபத்து தொடர்பில் ஹாசிம் விவரிக்கையில், “நாம் படகில் பயணித்த வேளை கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்பட்டது. பாரிய அலைகள் தொடர்ச்சியாக ஆர்ப்பரித்த வண்ணம் இருந்தன... இதனால் படகு உடைந்து கவிழ்ந்தது” என்கிறார்.
புதன்கிழமை இரவு எட்டு மணிக்கு படகில் ரோஹிங்ய அகதி குழு, இரண்டு மணித்தியாலங்களில் பங்களாதேஷ் கரையோரத்தை அடைந்துவிடக் கூடிய பயணத்தை ஆரம்பித்துள்ளனர். எனினும் படகோட்டுநர்களின் அசமந்தம் காரணமாக 24 மணிநேரம் படகு கடலில் தத்தளித்துள்ளது. எதிர்பாராத விதமாக கரைசேர சில மீற்றர்களே இருக்கும் நிலையில் படகு உடைந்ததில் அகதிகள் கடலில் மூழ்கினர்.
வெள்ளிக்கிழமை அன்று பங்களாதேஷ் கடற்கரையில் சிறுவர்கள், கைக்குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. “எங்கள் கண்முன்னே படகு கவிழ்ந்து அவர்கள் மூழ்கினர்... பின்னர் அலைகளால் அடித்து வரப்பட்டு சடலங்கள் கரையொதுங்கின.....” என கரையோர கடை வியாபாரி சுஹைல் இது தொடர்பில் விவரிக்கின்றார்.