வடக்கும் கிழக்கும் பிரிந்திருந்தாலோ அல்லது இணைந்திருந்தாலோ – தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படுகின்ற போது, முஸ்லிம்களுக்கு தம்மைத் தாமே ஆளுகின்ற தனியான அலகு வழங்கப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள், தேசிய இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களுக்கான தீர்வாக ‘’தென்கிழக்கு அலகினை’’ முன்மொழிந்துள்ளார்.
அவருக்குப் பின்னரான காலப்பகுதியில் நடந்த சுயாதீன முஸ்லிம் தேசிய எழுச்சியில் (2003) ‘’ஒலுவில் பிரகடனத்தினூடாக’’ – தேசிய இனப்பிரச்சினைத் தீர்வாக சமஷ்டி முறைமை முன்வைக்கப்படுமாயின் – முஸ்லிம்களுக்கும் ‘’தனியான சமஷ்டி அடிப்படையிலான தீர்வு’’ முன்வைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனவே, முன்வைக்கப்படும் எந்தத் தீர்வாக இருந்தாலும் அது; தமிழர்களின் கீழ் முஸ்லிம்கள் ஒப்படைக்கப்படுவதானதாகவோ அல்லது சிங்களவர்களிடம் முஸ்லிம்கள் ஒப்படைக்கப்படுவதானதாகவோ இருக்கக் கூடாது. மாறாக, முஸ்லிம்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய அடிப்படையிலான தனித் தீர்வாக அமைய வேண்டும்.
வடக்கு – கிழக்கு இணைவு / பிரிவு என்ற விடயத்தை பெரிதாக்கி, முஸ்லிம்களுக்கான தனியான தீர்வு பற்றிய முயற்சிகளில் கவனக்கலைப்புச் செய்யப்படுகின்ற சூழல் இன்று காணப்படுகின்றது.அதுவும் திட்டமிட்ட முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சதியே. அதை விடுத்து, முஸ்லிம்களுக்கான தனியான தீர்வு பற்றியே நாம் பேச வேண்டும். முயற்சிக்க வேண்டும். எழுத வேண்டும்.
கிழக்குப் பிரிந்திருந்தால் மட்டுமே முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு என்கின்ற மாயையை முதலில் நாம் களைய வேண்டும். கடந்த காலத்தில் வடக்கும் கிழக்கும் தற்காலிகமாக இணைந்திருந்தால் எப்படி தமிழர்களின் ஆதிக்கத்தில் நாம் கஷ்டங்களை அனுபவித்தோமோ - அதேபோல தற்போது கிழக்குப் பிரிந்திருப்பதால் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பின் கீழ் நாம் துன்பப்படுகின்றோம்.
இரண்டும் நாம் பெற்றிருக்கும் அனுபவப் பாடங்கள். எனவே, தனியான தீர்வு மட்டுமே நமக்கான உண்மையான பாதுகாப்பு. மாறாக தமிழர்களிடமும் நமக்குப் பாதுகாப்பு இல்லை - சிங்களவர்களிடமும் நமக்குப் பாதுகாப்பு இல்லை என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆகவே, நமக்கான தனியான தீர்விலே கவனத்தைக் குவிப்போம். அது பற்றியே பேசுவோம். அதற்கான முயற்சிகளைச் செய்வோம். அதற்கான அழுத்தங்களைக் கொடுப்போம்.
இன்ஷா அல்லாஹ் நாளை நமக்கென விடியட்டும்.
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.
ஏ.எல்.தவம் - முன்னாள் மாகாண சபை உறுப்பினர்