Top News

முஸ்லிம் பாட­சா­லை­களை இஸ்லாமிய மயமாக்க அதிபர்கள் முயற்சிக்கலாம்


ரவூப் செய்ன்
இன்று வளர்­முக நாடு­களில் மட்­டு­மன்றி, விருத்­தி­ய­டைந்த நாடு­க­ளிலும் இளம் தலை­மு­றை­யி­னரால் ஏற்­படும் சமூகப் பிரச்­சி­னை­க­ளுக்­கான அடிப்­படைக் கார­ணங்­களில் ஒன்று, விழு­மியக் கல்வி வழங்­கப்­ப­டாமை என்று சுட்டிக் காட்­டப்­ப­டு­கின்­றது. சமூக நேர்­வ­ழி­யி­லி­ருந்து வில­குதல், முரண்­ப­டுதல், சமூக நீதியைப் புறக்­க­ணித்தல், சமூக அச்­சுறுத்தல்­களை ஏற்­ப­டுத்தல், மக்­களின் சகிக்கும் எல்­லையை மீறுதல் போன்ற சமூக எதி­ரி­லி­க­ளாக இளை­ஞர்கள் மாறு­வ­தற்கு சான்­றிதழ் மையக் கல்வி மறை­மு­க­மாகப் பங்­க­ளிப்­ப­தாகக் கல்­வியி­யலாளர்கள் சுட்டிக்காட்­டு­கின்­றனர். 
இன்­றைய எமது கல்விச் செயற்­பா­டு­களில் கல்­வி- - அ­றிவு என்­ப­வற்றைத் தீர்­மா­னிக்கும் அல்­லது வழி­ந­டாத்தும் சக்­தி­க­ளி­னதும் எஜ­மானர்களி­னதும் நோக்கம் தெளி­வாக அறி­யப்­பட்ட ஒன்று. பல­வகை உலக நிறு­வ­னங்கள், அமைப்­புகள் என்­ப­வற்றின் நோக்­கங்­க­ளுக்கு ஏற்ப எமது கல்வி, அர­சியல் சித்­தாந்­தங்­களால் பிணைக்­கப்­பட்­டுள்­ளன. இத்­த­கைய அமைப்­பொன்றில் மாண­வர்கள் தத்­த­மது கலா­சார அடை­யா­ளங்­க­ளையும் பண்­பாட்டுக் கோலங்­க­ளையும் தொலைத்­து­விட்­டனர். ஆதிக்க கலா­சார அமைப்பு முறைக்­கேற்ப மாண­வர்கள் தயார் ­செய்­யப்­படும் நிலை­யையே காண்­கிறோம். இத்­த­கைய பின்­ன­ணியில் பாட­சா­லை­களை ஒழுக்க நெறி­ம­ய­மாக்க வேண்­டிய அவ­சியம் இன்று உணர்த்­தப்­ப­டு­கி­றது. 
1800களில் முஸ்லிம் சமூகம் தனது கலா­சார, சமயத் தனித்­து­வத்தைப் பாது­காக்க வேண்டுமென்ற நோக்கில் தனித்­து­வ­மான பாட­சா­லை­களை ஸ்தாபித்­தனர். தனித்­துவ முஸ்லிம் பாட­சா­லை­களின் தோற்றம் வர­லாற்றின் விபத்தோ, தன்­னி­யல்­பாக எழுந்­ததோ அல்ல. அதற்குப் பின்­ன­ணியில் கடின உழைப்பும் போராட்­டமும் இருந்­தன. அதன் விளை­வுதான் ஆங்­கில மொழி மூல ஸாஹி­ராக்­களின் உரு­வாக்­க­மாகும். மத்­ர­ஸது ஸாஹிரா என்ற அடை­யா­ளத்­துடன் அவை தொடங்­கப்­பட்­டன. மிஷ­னரிப் பாட­சாலைகளின் மத­மாற்ற முயற்­சி­க­ளி­லி­ருந்து விலகிச் செல்­வ­தற்கும் இஸ்­லா­மிய கலா­சார சுதந்­தி­ரத்தைப் பாது­காக்­கவும் இத்­த­கைய தனித்­துவப் பாட­சா­லைகள் எழுந்­தன. எனினும், ஒரு நூற்­றாண்டு கடந்தும் இப்­பா­ட­சா­லை­களின் பண்­பா­டு­களைப் பார்க்­கும்­போது கவ­லை­ய­ளிப்­ப­தாக உள்­ளது. சட­வாதமும் மதச்­சார்­பின்­மையும் பொரு­ளா­தார மோகமும் நிறைந்­துள்ள இன்­றைய சமூக சூழலில் ஒரு பண்­பாட்­டி­னதும் கலா­சா­ரத்­தி­னதும் பாது­காப்பு மைய­மாகச் செயற்­பட வேண்­டி­யவை பாட­சாலை எனும் சமூக நிறு­வ­னமே. 
இப்­பின்­ன­ணி­யில்தான் அறிவை இஸ்­லா­மிய மய­மாக்கல், கல்­வியை இஸ்­லா­மிய மய­மாக்கல் போன்ற கருத்­தோட்­டங்கள் முன்­வைக்­கப்­பட்டு 30 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. சிறு­பான்­மை­யாக முஸ்­லிம்கள் வாழும் நாடு­களில் இக்­க­ருத்தை காரிய சாத்­தி­ய­மாக்­கு­வது எவ்­வாறு என்ற விவா­தங்கள் நடந்து வரு­கின்­றன. இலங்­கையின் கல்விக் கொள்­கையின் அடிப்­ப­டை­யி­லான பாட­சாலை முறை­மையில் முழு­மை­யான மாற்­றத்தை கொண்டுவரு­வது சாத்­தி­ய­மற்­ற­தா­யினும் முஸ்லிம் பாட­சா­லை­களில் தனித்­து­வ­மா­ன­தொரு கலா­சா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வது சாத்­தி­ய­மா­னது. இதை இலங்­கையின் கல்விக் கொள்­கையும் அங்­கீ­க­ரிக்­கின்­றது. குறிப்­பிட்ட மதத்தின் அடிப்­ப­டையில் பாட­சா­லையின் உள்­ளகக் கலா­சா­ரத்தை வடிவமைத்துக் கொள்ளும் உரிமை பாட­சாலை முகா­மைத்­து­வத்­திற்கு உள்­ளது. ஆயினும், துர­திஷ்­ட­வ­ச­மாக தனித்­து­வ­மான முஸ்லிம் பாட­சா­லைகள் இத்­த­கைய தனித்­துவக் கலா­சா­ர­மொன்றை உரு­வாக்கிக் கொள்­ள­வில்லை. 
அறிவின் மூலா­தாரம் இறைவன். இறை­வனின் பெய­ரால்தான் அறிவு பெறப்­பட வேண்டும். இஸ்­லாத்தில் அறிவு உல­கியல் ரீதி­யா­னது, ஆன்­மீக ரீதி­யா­னது என்று வேறு­பாடு இல்லை. மனி­தனின் அறிவு இறை­வனை நோக்கி இட்டுச் செல்ல வேண்டும். அறிவு அமா­னி­த­மா­னது. மனிதன் பெறும் அறிவு ஆதா­ர­பூர்­வ­மா­ன­தா­கவும் முழு­மை­யா­ன­தா­கவும் இருத்தல் வேண்டும். ஊகங்கள், அனு­மா­னங்கள் என்­ப­வற்றை இஸ்­லா­மிய அறிவுக் கோட்­பாடு ஏற்­றுக்­கொள்­வ­தில்லை. அறிவின் இறுதி இலக்கு இறை பக்தி. இஸ்­லா­மிய அறிவுக் கோட்­பாட்டின் கருத்துச் சாரமே இவை. இவற்றை பாட­சாலை மாண­வர்­களின் உள்­ளங்­களில் பதிக்க முடி­யு­மான ஒரு சூழலை உரு­வாக்கிக் கொள்­வது எங்­ஙனம் என்­பதே முக்­கி­ய­மா­னது.
முஸ்லிம் பாட­சா­லை­களை இக்­க­ருத்துப் பின்­ன­ணியில் இஸ்­லா­மிய மய­மாக்­கு­வ­தற்கு நான்கு பகு­தி­களில் கவனம் செலுத்த வேண்டும். 
1. பாட­சா­லையின் முகாமை
2. வகுப்­பறைச் சூழல்
3. பாடத்­திட்டம் அல்­லது கலைத்­திட்டம்
4. இணைப்­பாட விதானம்
பாட­சாலை முகாமை
முகாமை என்­பது இன்­றைய அறி­வு­ல­கத்தின் அச்­சா­ணி­யாகும். அதி­பர்தான் பாட­சாலை முகா­மையின் தலைவர். பாட­சா­லையின் பல்­வேறு கன­வு­க­ளையும் எதிர்­பார்க்­கை­க­ளையும் அடை­வது அதி­பரின் கையி­லேயே தங்­கி­யுள்­ளது. இவ்­வ­கையில் முஸ்லிம் சமூ­கத்தின் மிகப் பாரி­ய­தொரு பொறுப்பை அதி­பர்கள் ஏற்­றி­ருக்­கி­றார்கள். அதி­ப­ருக்கு அடுத்­த­தாக ஆசி­ரி­யர்­களும் பெற்றோர் சங்­கமும் பழைய மாணவர் அமைப்பும் இந்த மகத்­தான பொறுப்பை சுமந்­தி­ருக்­கி­றார்கள். 
சமூகம் இன்றி இஸ்லாம் இல்லை. தலை­மைத்­துவம் இன்றி சமூகம் இல்லை. கட்­டுப்­பா­டின்றி தலை­மைத்­து­வ­மில்லை என்­பது இரண்டாம் கலீபா உமர் (ரழி) அவர்­களின் கருத்து. பொது­வாக முஸ்லிம் பாட­சா­லை­களில் முகா­மைத்­துவ திறன் கொண்ட அதி­பர்கள் இல்­லா­தி­ருப்­பது ஒரு பெரும் குறை. இன்­னொரு புறம் முகா­மைத்­துவ திறன் கொண்ட அதி­பர்கள் இஸ்­லா­மியப் பண்­பாட்­டிற்கு வெளியே இயங்­கு­வது அதை­விடப் பெரும் குறை. தலை­மைத்­துவப் பொறுப்பு எவ்­வாறு ஓர் அமா­னி­தமோ அவ்­வாறே அதற்குக் கட்­டுப்­ப­டு­வதும் ஓர் அமா­னி­த­மாகும். அதே­வேளை தலை­மைத்­துவம் ஜன­நா­ய­க­பூர்­வ­மா­ன­தா­கவும் சினே­க­பூர்­வ­மா­ன­தா­கவும் இருக்க வேண்டும். இது இஸ்­லாத்தின் எதிர்­பார்ப்­பாகும். 
எமது பாட­சா­லை­களில் மறை­மு­க­மான எதேச்­ச­ாதி­கா­ரத்தை அதி­பர்கள் கையில் எடுக்­கி­றார்கள். கட்­டி­றுக்­க­மான நிர்­வாக ஒழுங்­கினை (Strict Admin) முழு­மை­யாகப் பின்­பற்ற முனை­வதால் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் அதி­ப­ருக்கும் இடையில் முரண்­பா­டுகள் தோன்­று­கின்­றன. சில அதி­பர்கள் தமது சொந்த நலன்­களை எட்­டு­வ­தற்­கான கள­மாக பாட­சா­லையை கரு­து­கின்­றனர். எப்­போதும் இரண்டு வகை­யான தலை­வர்கள் உள்­ளனர் என கூறப்­ப­டு­வ­துண்டு. ஒன்று, ஆட்டு மந்­தை­களை கவ­ன­மாக வழி­ந­டத்­து­பவர். இரண்­டா­வது, ஆட்டு ரோமத்தில் கண்­ணாக இருப்­பவர். முஸ்லிம் பாட­சா­லை­களில் இம்­முதல் வகை முகா­மை­யா­ள­ராக அதி­பர்கள் பணி­யாற்ற வேண்­டி­யுள்­ளது. 
திட்­ட­மிடல் (Planning), அமைப்­பாக்கம் செய்தல் (Organizing), தலைமை வகித்தல் (Leading), இணைப்­பாக்கம் செய்­தலும் கட்­டுப்­ப­டுத்­தலும் (Co-ordinating and Controlling) என்­பவை அடிப்­ப­டை­யான முகா­மைத்­துவ திறன்­க­ளாகும். இவை மேலைத்­தேய மனித வள ஆய்­வா­ளர்­களால் புதி­தாகக் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட கோட்­பாடு அல்ல. சீறாவின் ஒளியில் இதற்­கு­ரிய போதிய வழி­காட்­டலை நாம் பெறலாம். 
மதீ­னாவை நோக்கி ஹிஜ்ரத் சென்ற நபி (ஸல்) அவர்கள் மதீ­னாவைச் சென்­ற­டைந்து சிறிது காலத்தில் தனது தோழர்­க­ளிடம் விடுத்த வேண்­டுகோள் “மதீ­னாவில் தற்­போது இஸ்­லாத்தை ஏற்­றி­ருப்­போரின் எண்­ணிக்­கையை கணிப்­பீடு செய்­யுங்கள்" என்று கட்­ட­ளை­யிட்­ட­துதான். முஸ்­லிம்­களின் தொகை மதிப்­பீடு எதிர்­கால தஃவாவை திட்­ட­மி­டு­வ­தற்கு அவ­சி­ய­மா­னது என்று அவர்கள் கரு­தி­னார்கள். ஹிஜ்­ரத்தின் ஒவ்­வொரு நிகழ்வும் முகா­மைத்­து­வத்தின் இந்த நான்கு அடிப்­படைத் திறன்­க­ளையும் வெளிப்­ப­டுத்­து­வதைப் பார்க்­கலாம். 
வகுப்­பறைச் சூழல்
முஸ்­லிம்­க­ளுக்கு என்று ஒரு தனித்­து­வ­மான பண்­பாடும் நாக­ரி­கமும் உள்­ளது. அது இஸ்­லாத்தின் தூத­ரான நபி (ஸல்) அவர்­களின் வாழ்­வியல் விழு­மி­யங்­க­ளி­லி­ருந்து கடைந்­தெ­டுக்­கப்­பட்ட முது­சங்கள். அவற்றை உள்­ளிட்ட ஒரு கலா­சா­ரத்­தைத்தான் நமது பாட­சா­லைகள் வளர்க்க வேண்டும். சுத்தம் சுகம் தரும் என்ற பாரம்­ப­ரியக் கருத்தில் அர்த்தம் உள்­ளது. ஆனால், சுத்தம் ஈமானில் பாதி என்ற ஆழ்ந்த அர்த்­தத்­திற்கு அது ஈடா­காது. நமது வாழ்­வு­ ம­ரணம், வணக்­க­வ­ழி­பாடு, மூச்சுப் பேச்சு அனைத்­தையும் ஆழ ஊரு­டுவிப்படர்ந்­துள்ள ஈமா­னிய விழு­மி­யங்கள் பாட­சாலைப் பண்­பாட்­டிலும் பிர­தி­ப­லிக்க வேண்டும். அப்­போது மாத்திரமே முஸ்லிம் தனித்­துவப் பாட­சா­லைகள் என்­ப­தற்கு அர்த்தம் கிடைக்கும். ஏனெனில், அடை­யாளப் பிரக்ஞை என்­பது ஒரு சமூ­க­வியல் யதார்த்தம். பாட­சாலை எனும் சமூக நிறு­வ­னமே சமூ­க­ம­ய­மாக்­கலில் பெரும் பங்கை வகிக்­கின்­றது. ஆனால், வகுப்­ப­றைகள் மதச் சார்­பற்ற விழு­மி­யங்­க­ளாலும் சட­வாதக் கருத்­துக்­க­ளாலும் ஆளப்­ப­டும்­போது அடை­யாளப் பிரக்ஞை உரு­வாக வாய்ப்­பில்லை. எதிர்­காலத் தலை­மு­றை­யி­ன­ரிடம் இஸ்­லா­மியப் பண்­பாட்டை கைய­ளிப்­ப­தற்­கான சாத்­தி­யமும் இல்லை.
முஸ்லிம் பாட­சா­லை­களில் இன்று அந்­நிய கலா­சார மய­மாதல் தமது உணர்வு நிலை­யி­லேயே நிகழ்ந்து வரு­கி­றது. Good Morning என்­ப­தற்கும் அஸ்­ஸ­லாமு அலைக்கும் என்­ப­தற்கும் இடையில் கருத்து ரீதி­யிலும் கலா­சார ரீதி­யிலும் பெருத்த வேறு­பாடு உள்­ளது. முழு உலகும் இன்று வேண்டி நிற்கும் அமை­தியும் சமா­தா­னமும் நமது கல்வி முறை­யி­லி­ருந்தும் வகுப்பறை­யி­லி­ருந்தும் தொடங்க வேண்டும். அதற்கு முஸ்லிம் ஆசி­ரி­யர்­களும் மாண­வர்­களும் தமக்குள் கூறு­கின்ற ஸலாம் ஒரு நல்ல தொடக்கம். இத்தகைய இஸ்­லா­மிய பண்­பாடு முஸ்லிம் வகுப்­ப­றை­களை ஆள வேண்டும். 
மாண­வர்­க­ளுக்கு நன்றி சொல்­லும்­போது 'ஜஸா­கல்லாஹ்' என்று ஆசி­ரியர் கூறும்­போது அதி­லுள்ள உள­வியல் தாக்கம் பாரி­யது. எந்தப் பாட ஆசி­ரி­ய­ராக இருந்­தாலும் பாட போத­னையைத் தொடங்­கும்­போது அவர் 'பிஸ்­மில்லாஹ்' சொல்ல வேண்டும். அநேக முஸ்லிம் ஆசி­ரி­யர்கள் இவற்றை வெறும் வார்த்­தை­க­ளாக மட்டும் கரு­து­கின்­றார்கள். ஆனால் இஸ்­லா­மிய சமூ­கத்தின் பண்­பாட்டுச் சாரமே இதற்குள் பொதிந்­தி­ருப்­பதை அவர்கள் உணரத் தவ­று­கின்­றனர்.
வகுப்­ப­றை­களில் சுய­கட்­டுப்­பாட்­டையும் ஒழுங்­கையும் பேணு­வ­தற்கு அசி­ரி­யர்கள் வழி­வ­குக்க வேண்டும். ஆசி­ரி­யர்கள் தக­வல்­களைத் திணிக்கும் இயந்­தி­ரங்கள் என்ற நிலைக்கு அப்பால், மாண­வர்­களின் உயி­ரோட்டமுள்ள முன்­மா­தி­ரி­களாய் திகழ வேண்டும். நல்ல வார்த்­தைகள், நல்ல நடத்­தைகள் இவற்றில் ஆசி­ரி­யர்­களே மாண­வர்­க­ளுக்கு முன்­மா­திரி. இன்று முஸ்லிம் மாண­வர்கள் கிரிக்கெட் வீரர்­க­ளையும், சினிமா நட்­சத்­தி­ரங்­க­ளை­யுமே தமது மான­சீகக் குருக்­க­ளாக ஏற்­றுள்­ளனர். அவர்­க­ளுக்கு மிகப் பெரும் இஸ்­லா­மிய நாக­ரி­கத்தின், இஸ்­லா­மிய எழுச்­சியின் கதா­நா­யகர்களை ஆசி­ரி­யர்­கள்தான் அறி­முகம் செய்ய வேண்டும். நல்ல தர­மான புத்­த­கங்­க­ளி­லி­ருந்து ஆசி­ரி­யர்கள் அடிக்­கடி மேற்­கோள்­களை முன்­வைக்க வேண்டும். இது மாண­வர்­களின் வாசிப்­பாற்­றலை தூண்­டு­வ­தற்கு காலாக அமையும். முஸ்லிம் பாட­சா­லை­களில் உள்ள தொழுகை அறைகள் உயிர்ப் பிக்­கப்­பட வேண்டும். எல்­லா­வற்­றுக்கும் அப்பால் வகுப்­பறைக் கற்­பித்­தலில் இஸ்­லா­மியக் கல்வி, உள­வியல் அடிப்­ப­டை­களை கவ­னத்தில் கொள்­ள­வேண்டும். இவை வகுப்­பறைச் சூழலை இஸ்­லா­மி­ய­ம­ய­மாக்குவதற்­கான சில எளிய நல்ல ஆளு­மை­க­ளையும் நாளைய தலை­மு­றை­க­ளையும் உரு­வாக்­கலாம். 
கலைத் திட்­டத்தை இஸ்­லா­மிய மய­மாக்கல்
இலங்­கையின் பொதுக் கலைத் திட்டம் அனைத்து மதங்­களின் தனித்து வத்­தையும் ஏற்று வடி­வ­மைக்­கப்­ப­ட­வில்லை என்­பது மட்­டு­மல்ல, இனங்­க­ளுக்­கி­டை­யிவே கருத்து பேதங்­க­ளையும் உரு­வாக்கும் தன்மை கொண்­டுள்­ளது. இது அவ்­வப்­போது சுட்­டிக்­காட்­டப்­பட்­ட­போதும் கல்வித் திட்­டங்­களில் கவ­னத்தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. தற்­போது தேசியக்கல்வி ஆணைக்­கு­ழு­விலோ பாட­வி­தானக் குழு­விலோ போதி­ய­ளவு முஸ்­லிம்கள் உள்­வாங்­கப்­ப­ட­வு­மில்லை. இதனால், தமிழ் இலக்­கிய நூல் உட்­பட வர­லாறு, சமூகக் கல்வி பாட­நூல்­க­ளிலும் முஸ்லிம் பரி­மாணம் போதிய கவ­ன­யீர்ப்பைப் பெற­வில்லை. 
இப்­பாடப் புத்­த­கங்­களில் வழங்­கப்­பட்­டுள்ள வியாக்­கி­யா­னங்­களும் வர­லாற்றுத் திரி­பு­களும் முஸ்லிம் பிர­தி­மையை சிதைக்கக்கூடி­யன. வர­லாற்றுப் பாட­நூல்கள் முஸ்­லிம்­களை வந்­தேறு குடி­க­ளா­கவும் அடுத்தவர்­களின் பொரு­ளா­தா­ரத்தைக் கொள்­ளை­ய­டிக்க வந்த ஆக்­கி­ர­மிப்­பாளர்களா­க­வுமே காட்ட முயல்­கின்­றன. சமூகக் கல்வி மற்றும் விஞ்­ஞானப் பாடப் புத்­த­கங்கள் முன்­வைக்கும் கருத்­துகள் சில இஸ்­லாத்தின் சமூகவியல் கோட்­பா­டு­க­ளுக்கும் படைப்­பு­லகக் கோட்­பாட்­டிற்கும் எதி­ரா­ன­தாக உள்­ளது. அவற்றைத் திருத்தி கற்­பிக்க வேண்­டிய பொறுப்பு முஸ்லிம் ஆசி­ரி­யர்­க­ளுக்கு உள்­ளன. உதா­ர­ண­மாக 2007 புதிய பாடத்திட்­டத்தில் வர­லாறு தரம் 7 பாடப் புத்­த­கத்தில் இஸ்­லாத்தின் ஆரம்­பமும் பர­வலும் எனும் அத்­தி­யா­யத்தில் முஹம்­மது நபி என்­பவர் 570 இல் மக்­காவில் அவ­த­ரித்தார் என்று எழு­தப்­பட்­டுள்­ளது. 
இதிலுள்ள கருத்துப் பிழைகள் சுட்டிக் காட்­டப்­பட்­டுள்­ள­போதும் அவை திருத்திக் கொள்­ளப்­ப­ட­வில்லை. இது­போன்ற கருத்துத் தவ­று­களை திருத்திக் கற்­பிக்கும் அதே­வேளை, புவி­யியல், பொரு­ளா­தாரம், விஞ்ஞானம் ஆகிய துறை­களைக் கற்­பிக்கும் ஆசி­ரி­யர்கள் பாடப் புத்­த­கத்தில் இடம்­பெற்­றுள்ள கருத்­துக்கள் இஸ்­லாத்தின் கண்­ணோட்­டத்­திற்கு புறம்பான­தாக இருக்­கும்­பட்­சத்தில் அவற்றைப் புரிந்­து­கொண்டு கற்­பிக்கக் கூடிய வகையில் இஸ்­லா­மிய அறிவை வளர்த்துக்கொள்­ள­ வேண்டும். 
இணைப்­பா­ட­வி­தானம்
மாண­வரின் பல­த­ரப்­பட்ட ஆளு­மை­யையும் தலை­மைத்­துவப் பண்புகளையும் விருத்தி செய்­வதில் பெரு­ம­ளவு பங்கை பாட­சாலை இணைப் பாட­வி­தான செயற்­பா­டுகள் வழங்­கு­கின்­றன.  இவை மாண­வர்­க­ளது கூட்­டு­ணர்­வுக்கு செம்மை சேர்ப்­ப­வை­யா­கவும் உள்­ளன. விளை­யாட்டு வெற்றி, தோல்­வி­களை ஏற்று தலை­மைத்­துவ ஆளுமைப் பண்­பு­களை பல பரி­மா­ணங்­களில் விருத்தி செய்­கின்­றது. அத்­துடன் உடல் ஆரோக்­கி­யத்தையும் வழங்­கு­கின்­றது. சார­ணீயம், சமூகத் தொண்­டுகள், விஞ்­ஞான மொழி யியல் மன்­றங்கள், கண்­காட்­சிகள், நூல் வெளி­யீ­டுகள், கல்விச் சுற்­று­லாக்கள் என்­பன திறன்­களை விருத்தி செய்­கின்­றன. இவை எல்­லோ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட உண்­மைகள். 
முஸ்லிம் பாட­சா­லைகள் குறிப்­பாக நகர்ப்­புற பாட­சா­லைகள் பாட விதான செயற்­பா­டு­களை விட இணைப்­பா­ட­வி­தான செயற்­பா­டு­க­ளுக்கு மிகை­யான முக்­கி­யத்­து­வத்­தினை அளிக்­கின்­றன. பாட­வி­தான அடை­வுகள் மிக மோச­மாகப் பாதிக்­கப்­படும் அள­வுக்கு இப்­பா­ட­சா­லைகள் விளையாட்டுப்போட்­டி­க­ளையும் கலை இலக்­கிய நிகழ்ச்­சி­க­ளையும் ஊக்­கு­விக்கின்றன. நிரு­வா­கத்­தி­லுள்ள மேட்­டுக்­கு­டி­யினர் திட்­ட­மிட்டே இவற்றைச் செய்­கின்­றார்­களா என எண்­ணு­ம­ள­வுக்கு இணைப்­பா­ட­வி­தா­னமே பாட­சாலை இயக்­க­மாக மாறி­யுள்­ளது. இது மாற்­றப்­பட வேண்டும். இணைப் பாட­வி­தான செயற்­பா­டு­களை முடிந்­த­ளவு இஸ்­லா­மிய மய­மாக்க வேண்டும் என்­பதே இப்­பத்­தியில் வலி­யு­றுத்­தப்­படும் கருத்து. 
இன்று இணைப்­பா­ட­வி­தான செயற்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்தும் போது ஆண், பெண் கலப்பு, ஆண், பெண் தனிமை, ஷரீ­ஆவின் வரையறைக்கு அப்பால் செல்லுதல், அடிப்படையான ஹலால், ஹராத்தை மீறுதல் போன்ற சிக்கல்கள் எழுகின்றன. ஆனால், இவை நிச்சயம் தவிர்க்கப்பட முடியுமானவை. பாடசாலையின் முகாமை மதச் சார்பற்ற பின்னணியில் இயங்கும்போது முஸ்லிம் பாடசாலைகளின் சீர்குலைவிற்கு இணைப்பாடவிதான செயற்பாடுகளே காலாய் அமைந்துவிடும். கல்விச் சுற்றுலாவின்போது முஸ்லிம் மாணவர்கள் மதுபானம் அருந்தியதும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு இடையில் தகாத உறவுகள் ஏற்பட்டதும் கடந்த காலங்களில் சுட்டிக்காட்டப்பட்ட நிகழ்வுகள். 
சில பிரபல்ய பாடசாலைகளின் மாணவர்கள் உள்ளகச் சுற்றுக்காக போதைவஸ்தை விற்பனை செய்வதை வழக்காகக் கொண்டுள்ளனர். முஸ்லிம் பாடசாலை மாணவிகளிடையேயும் போதைவஸ்துப் பாவனை இருப்பது ஆய்வு மூலம் கண்டறியப்பட்டள்ளது. தமிழ்த்தின போட்டிகளின்போது இந்துக்கள் போன்று வேடம் அணிவதும், விழாக்கோலம் பூணுவதும் முஸ்லிம் பாடசாலைகளில் சர்வ சாதாரணமாகி விட்டது. எனவே, இணைப்பாடவிதான செயற்பாடுகளின்போது கண்டிப்பாக இஸ்லாமிய நெறிமுறைகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். 
இவற்றை இஸ்லாமிய நோக்கில் செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை இஸ்லாம் காட்டித் தந்துள்ளது. எடுத்துக் காட்டாக ஒரு கல்விச் சுற்றுலாவின்போது சுற்றுலா பற்றிய இஸ்லாத்தின் கருத்துக்களை மாணவர்களுக்கு முன்வைக்கலாம். பிரயாணத்தின்போது ஓத வேண்டிய துஆக்களை நினைவுபடுத்தலாம். இதுபோன்ற விழுமியங்களை பாடசாலை முகாமையும் ஆசிரியர்களும் கருத்தில் எடுக்க வேண்டும். இணைப்பாட விதான செயற்பாடுகளின்போது இஸ்லாமிய கலாசாரத்திற்குப் பதிலாக ஏனைய சமூகங்களின் சமய கலாசார வடிவங்களை பிரதிசெய்வதும் உயிர்ப்பிப்பதும் கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இது இஸ்லாத்தின் உயர்ந்த எதிர்பார்ப்பாகும்.
Previous Post Next Post