Top News

றக்காவில் வெற்றி பிரகடனம்


சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் தலைநகராக அறிவிக்கப்பட்டிருந்த றக்கா நகரை முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாக, ஐக்கிய அமெரிக்காவால் ஆதரிக்கப்படும் சிரிய ஜனநாயகப் படைகள், வெற்றிப் பிரகடனம் செய்துள்ளன. சுமார் 4 மாதங்கள் நீடித்த மோதல்களைத் தொடர்ந்து, றக்காவைக் கைப்பற்றிய அவர்கள், றக்காவில் தமது கொடிகளைப் பறக்கவிட்டு, இவ்வெற்றியைப் பிரகடனம் செய்தனர்.
றக்காவில் மோதல் முடிவடைந்துவிட்டது எனத் தெரிவித்த, சிரிய ஜனநாயகப் படைகளின் றக்கா மோதலுக்கான தளபதி றொட்ஜா ஃபெலட், குர்திஷ் ஆயுததாரிகளும் அரேபிய ஆயுததாரிகளும் இணைந்த குழு, நகரத்தில் கண்ணிவெடிகளை அகற்றுவதிலும், எஞ்சியிருக்கக்கூடிய ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளை அழிப்பதிலும் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த படைகளின் பேச்சாளர் டலால் செலோ, இக்கண்ணிவெடிகளும் எஞ்சியிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுததாரிகளும் அகற்றப்பட்ட பின்னர், உத்தியோகபூர்வமான வெற்றிப் பிரகடனம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார். ஐக்கிய அமெரிக்க இராணுவம், இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டு, றக்காவின் 90 சதவீதமான நிலப்பரப்பை, சிரிய ஜனநாயகப் படைகள் கைப்பற்றியுள்ளன என்று அறிவித்ததோடு, எஞ்சியுள்ள பகுதிகளை மீட்பதில், அவ்வப்போது எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தது.
ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு, சிரியாவிலும் ஈராக்கிலும், பெருமளவிலான நிலப்பரப்பை, இவ்வாண்டு இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post