மல்வத்தையை மையமாக கொண்டு தனியான பிரதேச சபை ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், பஷ்பா பொருளாதார கல்வி சமூக அபிவிருத்தி அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளருமான செல்லையா இராசையா அம்பாறை மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை தரம் உயர்த்துதல் மற்றும் ஸ்தாபித்தல் தொடர்பான குழுவுக்கு எழுத்துமூலம் கோரி உள்ளார்.
இக்கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டியதன் நியாயத்தையும், அவசியத்தையும் ஆதாரங்கள் சகிதம் இவர் மேற்படி குழுவுக்கு விளங்கப்படுத்தியும் உள்ளார். இவர் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதத்தின் பிரதிகள் எதிர்க் கட்சி தலைவர் இரா. சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோருக்கு உரிய நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ள விடயங்கள் வருமாறு:-
அம்பாறையில் கல்லோயா குடியேற்றம் வருவதற்கு முன்னர் மல்வத்தை ஒரு சிறிய நகர பிரதேசமாக இருந்து வந்தது. பிரதேச சபை சட்டமூலம் ஆக்கப்படுவதற்கு முன்னர் ஒரு கிராமாட்சி மன்றமாக செயற்பட்டு வந்தது. பின்னரே சம்மாந்துறை பிரதேச சபையுடன் ஒன்றிணைக்கப்பட்டது.
அம்பாறையில் கல்லோயா குடியேற்றம் வருவதற்கு முன்னர் மல்வத்தை ஒரு சிறிய நகர பிரதேசமாக இருந்து வந்தது. பிரதேச சபை சட்டமூலம் ஆக்கப்படுவதற்கு முன்னர் ஒரு கிராமாட்சி மன்றமாக செயற்பட்டு வந்தது. பின்னரே சம்மாந்துறை பிரதேச சபையுடன் ஒன்றிணைக்கப்பட்டது.
ஆனால் இது ஒரு பின் தங்கிய பிரதேசமாக அபிவிருத்தி அடையாமல் அரசியல்வாதிகளாலும், அதிகாரிகளாலும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. அபிவிருத்தியில் மாத்திரம் அன்றி கல்வியிலும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்றது. இங்கு வாழ்கின்ற மக்கள் யுத்தத்தால் முற்றாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்டவர்கள் ஆவர்.
இம்மக்களும், இவர்கள் சார்ந்த பொது அமைப்புகளும் தனியான பிரதேச சபையை அமைத்து தர வேண்டும் என்று அரசியல் தலைமைகளுக்கும், எல்லை நிர்ணய ஆணைக்குழுவுக்கும் கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றபோதிலும் அது நிறைவேற்றி கொடுக்கப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டு உள்ளது. மல்வத்தை பிரதேசம் 31 சதுர மைல் பரப்பையும், 21000 மக்களையும் கொண்டு உள்ளது. ஒப்பீட்டளவில் இப்பிரதேசத்தை விட குறைந்த நில பரப்பையும், சன தொகையையும் கொண்ட பல பிரதேசங்களுக்கு பிரதேச சபைகள் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளன.
சம்மாந்துறை பிரதேச சபை ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்களை கொண்டு உள்ளது. எனவே அதில் இருந்து 21000 தமிழ் மக்கள் அவர்களுடைய கல்வி, கலாசார விழுமியங்களையும், வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்பவும், அரசாங்கத்தின் சேவைகளை பெற்று அவர்களுடைய அன்றாட, அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் கூடிய வகையில் அவர்களுக்கு தனியான பிரதேச சபை அமைத்து கொடுக்கப்பட வேண்டியது அவசியமானதாக உள்ளது.
எனவே இந்நியாயமான கோரிக்கையை ஏற்று மல்வத்தையில் தனி பிரதேச சபை அமைக்கப்பட வேண்டும் என்று தாங்கள் சிபாரிசு செய்ய வேண்டும் என்று பணிவன்புடன் வேண்டி கொள்கின்றோம். மேலும் எல்லை நிர்ணய ஆணைக் குழுவை சந்தித்து சாட்சியம் வழங்க சந்தர்ப்பம் ஏற்படுத்தி தருமாறும் கேட்டு கொள்கின்றோம்.