வட மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வேண்டும். இதுவே எமது கோரிக்கையும் கொள்கையுமாகும். முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என்பது தமிழ் தலைமைகளுக்கு நன்கு தெரியும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
காத்தான்குடியில் நேற்று நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி கடற்கரையிலுள்ள பிஸ்மி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், முஸ்லிம் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்பதாக காட்டிக்கொள்ளத் தேவையுமில்லை. நாங்கள் சிங்களவர்களுக்கு கூஜா தூக்கிகளாக பார்க்கப்படவேண்டிய அவசியமுமில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கிழக்கு மாகாணத்தை வட மாகாணத்துடன் இணைப்பதற்கு தூக்கிக் கொடுத்துவிட்டார் என சிலர் கோஷம்போட்டு மக்களை பீதியடையச் செய்கின்றனர். இவர்கள் அரசியலை படிக்கவேண்டும். அரசியல் என்பது சாத்தியமானதை வைத்து சாதிக்கும் கலை என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
ஒரு மாகாணம் இன்னுமொரு மாகாணத்துடன் இணைய வேண்டுமாக இருந்தால் அம்மாகாண மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படல் வேண்டும். அத்துடன் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இல்லாமல் இணைக்க முடியாது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பாரம்பரிய கடமைப்பாடு உள்ளது. மறைந்த தலைவர் காலத்திலிருந்து இது இருக்கின்றது. வட மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வேண்டும். இது எமது கோரிக்கையும் கொள்கையுமாகும். வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் சாத்தியமில்லை என்பது தமிழ் தலைமைகளுக்கு தெரியும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பாரம்பரிய கடமைப்பாடு உள்ளது. மறைந்த தலைவர் காலத்திலிருந்து இது இருக்கின்றது. வட மாகாணத்துடன் கிழக்கு மாகாணம் இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் வேண்டும். இது எமது கோரிக்கையும் கொள்கையுமாகும். வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் சாத்தியமில்லை என்பது தமிழ் தலைமைகளுக்கு தெரியும்.
பனம் பழத்தில் காகம் உட்காரப்போய் பனம் பழம் விழுந்த மாதிரி இன்று சிலர் தாங்கள்தான் வடக்கையும் கிழக்கையும் பிரித்தோம் என கூறுகின்றனர். இவர்களுக்கு பாராளுமன்றம் போவதற்கு வாக்குகள் போதாது. சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்காக இவ்வாறு பேசுகின்றனர். நான் கண்டி மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றவன். இதில் இருபதாயிரம் சிங்கள மக்களின் வாக்குகள் உள்ளன.
நான் வடக்குடன் கிழக்கை இணைக்க வேண்டும் என்றோ வடக்குடன் கிழக்கை பிரிக்கவேண்டும் என்றோ பேசவில்லை. நான் சிங்கள மக்கள் மத்தியில் இதனை தூக்கிப்பிடித்து பேசினால் இன்னும் பத்தாயிரம் வாக்குகள் எனக்கு அதிகரிக்கும். நான் ஒரு கட்சியின் தலைவன். நான் இந்த தேவையில்லாத விடயத்தை பெரிதாகமாற்ற விரும்பவில்லை.
தமிழ் கட்சிகளின் தலைமைகள் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை ஏதோ ஒருவகையில் ஒரு நியாயமான இணக்கப்பாட்டின் அடிப்படையில் பேச முடியும் என்ற நம்பிக்கை எஞ்சி இருக்கின்றது. இதுபற்றி இரு சமூக தலைமைகளும் பேசி தீர்க்கமுடியும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. அதற்காக நாம் போலித்தனமான அரசியல் செய்ய விரும்பவில்லை. பொறுப்புணர்ச்சியோடு மிகத் தெளிவாக சாத்தியமான தூரநோக்குள்ள ஒரு அரசியல் கட்சியாக நாம் இருக்கின்றோம். அதற்காகத்தான் நாம் அளந்து பேசுகின்றோம். இது மாபெரிய இயக்கம். இதன் பாரம்பரியத்தை குழி தோண்டிப் புதைக்கமுடியாது. இது தனி மனிதனுக்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல.
இன்று எமது கட்சியின் பலம், பலவீனம் பற்றி பேசப்படுகின்றது. 37 பேர் கொண்ட கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களை வைத்து அதன் உபாயத்தின் மூலம் சகல அதிகாரங்களும் கொண்ட முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சுப் பதவிகளை பெற்று நாம் கிழக்கு மாகாணத்தை ஆட்டிப்படைத்தோம்.
தேசிய அரசாங்கம் அமைவதற்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஒரே ஒரு ஆசனமான மட்டக்களப்பு ஆசனம் பெறும் பங்காற்றியது. இந்த தேசிய அரசாங்கம் அமைவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பங்களிப்பை மறந்துவிட முடியாது. அவர்கள் எம்மோடு இணைந்து செயற்பட்டனர். இந்த தேசிய அரசாங்கத்தை அமைத்தபோது முஸ்லிம் காங்கிரஸின் ஒரு ஆசனத்தின் பெறுமதியை அன்று ரணில் அறிந்திருப்பார்.
எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் கட்சியின் தன்மானத் தேர்தலாகும். தொகுதியை வெல்வதற்கும் கட்சியை வெல்ல வைப்பதற்கும் தகுதியான செல்வாக்குள்ள வேட்பாளர் யார் என்ற தீர்மானத்தை கட்சி நடுநிலையாக நின்று தெரிவு செய்ய எல்லோரும் உறுதுணையாக இருக்கவேண்டும்.
கோரளைப்பற்று மேற்கு மற்றும் ஏறாவூர் நகர சபைகளை நாம் கைப்பற்றுவோம். மட்டக்களப்பில் நான்கில் ஒரு பகுதியினராக உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு, சுபீட்சம் என்பன எமது கட்சியின் வெற்றியிலேயே தங்கியுள்ளது. எமது கட்சி பல இடங்களில் ஆட்சியை கைப்பற்றும். சில இடங்களில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருகக்கும். அதற்கான வியூகங்களை அமைத்து வருகின்றோம்.
காத்தான்குடியில் கடந்த இரண்டரை வருடங்களில் எமது கட்சி உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் நாற்பது கோடிக்கு மேல் அபிவிருத்தி செய்துள்ளோம். இதன்மூலம் அபிவிருத்தி மாயையை உடைத்துள்ளோம். எதிர்வரும் தேர்தலில் எமது வரட்டு கௌரவங்களை தூக்கி எறிந்துவிட்டு கட்சியின் தன்மானத்தைகாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்ளான அலிசாஹீர் மௌலானா மற்றும் எம்.எச்.எம். சல்மான், முன்னாள் முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் சிப்லி பாறூக், யு.எல்.எம்.என்.முபீன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பிரமுர்கள் கலந்து கொண்டனர்.