Top News

இப்றாஹிம் சேர் என்கிற வாப்பா; காத்தான்குடியில் நிறம் மாறா ஒரு போராளி!


இவர் ஆசிரியர், சாரணியப்பயிற்றுவிப்பாளர், சமூகப்போராளி என்ற பல்வேறு பரிமாணங்களைக்கொண்டவர் என்றாலும் இன்று கூட “சேகுவரா இப்றாஹிம் மாஸ்டர்” அல்லது “JVP இப்றாஹிம்” என்றால்தான் ஊர் முழுக்க அவரை தெரியும்.
வாப்பாவைப்பற்றி மகன் புகழ்ந்து சிலாகிப்பதா என்றொரு கேள்வி எழுத முதல் எழுந்தது.
பிறகு வாப்பாவை மகன் எழுதாமல் பிறகு யார் எழுதுவது என்ற கேள்வி அதற்கு விடையானது.
1978 இல் கிழக்கில் வீசிய சூறாவளி, 1990 பள்ளிவாயல் படுகொலைகள், 2004 சுனாமி இந்த மூன்று பேரவலங்களிலும் வாப்பாவின் அர்ப்பணிப்பு அளப்பரியது.
1978 இல் காத்தான்குடி சூறாவளியால் துவம்சம் செய்யப்பட்ட போது தனது ஜே வீ பீ தோழர்களுடன் மீள்நிரமாணப்பணிகளைச்செய்து மக்களின் வழமையான செயற்பாடுகளுக்கு பெரும்பணியாற்றியதாக கேள்விப்பட்டதுண்டு.
1990 இல் பள்ளிவாயல் படுகொலைகளின் பின்னர் ஊரே மயானமாக அச்சங்கவிழ்ந்திருந்த பொழுதுகளில் தனி மனித ராணுவமாக நின்று ஒரு பாதுகாப்பு அரணை உருவாக்கி முடித்தவர்.
2004 சுனாமியின் பின்னர் உடனடியாக கடற்கரையோர வைத்தியசாலையிலிருந்த நோயாளர்களை காப்பாற்றி அப்போது அவர் கற்பித்துக்கொண்டிருந்த பாடசாலைக்கு அவர்களை மாற்றி அதில் தற்காலிக வைத்தியசாலையொன்றை இயங்க செய்வதற்கான பணியில் துரிதமாக பங்கு. கொண்டு செயற்பட்டவர்.
இவை தவிர அவரது வாழ்வு ஏராளமான சமூகப்பணிகளால் நிரம்பியது.
சாரணியம், மக்கள் விடுதலை முன்னணி (JVP), ஆசிரியத்தொழிலை சேவையாக நேசித்தமை என்பன அவரது சமூகப்பணிகளுக்கான அச்சாணிகள் ஆகின.
ரோஹன விஜேவீரவுடன் மிக நெருக்கமாக கட்சிப்பணி செய்தவர், ஒரு காலத்தில் JVP கட்சிக்கு ஏராளமான எம்பி பதவிகள் கிடைத்த வேளை இவரை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தேடி வந்த போதும் அதனை மறுத்து ஒரு கடை நிலை கட்சித்தொண்டனாய் பணி செய்தவர்.
பாராட்டு, பதவி, புகழ் என்பவற்றிற்கு வெகு தூரமானவர். எந்த விழாவிற்கு அழைக்கப்பட்டாலும் மேடைக்கு ஏறாமல் கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து பின்வரிசையில் நின்று நிகழ்வை ரசிப்பவர்!
1994 ம் ஆண்டு நடந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் காத்தான்குடி மக்கள் இவரை பிரதேச சபை உறுப்பினராக தேர்ந்தெடுத்து அழகு பார்த்தார்கள்.
வெளியூர் மனிதருக்கு அவரது சேவையை மதித்து உள்ளூர் மக்கள் வழங்கிய மாபெருங்கெளரவம் அது!
இவ்வாறான வரலாற்றுக்குறிப்புகளைக்கொண்ட வாப்பாவை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தனது இன்றைய கெளரவிக்கும் நிகழ்வுப்பட்டியலில் சேர்த்த போது,வழமை போலவே அதிலிருந்து நழுவிக்கொள்ள அவர் முயன்றதாக அறிந்தேன்.
இருந்தாலும் அவர்களது தொடர்ச்சியான வேண்டுகோளை தட்ட முடியாமல் அந்த விழாவில் அளிக்கப்பட்ட மகத்தான கெளரவத்தினை அவர் ஏற்றதை காண முடிந்தது.
இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து சான்றோர்களையும், சமூகப்பங்காளர்களையும் நினைவு படுத்தி கெளரவித்த நிகழ்வு பாராட்டத்தக்கது.
இதனால் இப்போதைய இளையோர் சமூகம் தமது சுவடுகளை அறிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டாகும்.
சேகுவரா என்ன சொல்லி இருக்கார் என்றால்..
If I lose, It will not mean that It was impossible to win.
அதாவது
“நான் தோற்றால், அது வெல்வதற்கு சாத்தியமில்லாதது என்று அர்த்தப்படாது”
வாப்பா தனது கொள்கைகளில் தோற்றுப்போனதாக தெரியவில்லை, ஆனாலும் தனது கட்சியை ஊரில் நிறுவும் முயற்சியில் அவரால் வெற்றி பெற முடியவில்லை!

முஜீப் இப்றாஹீம் - இப்றாஹீம் ஆசிரியரின் புதல்வர்
Previous Post Next Post