உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் எதிர்வரும் ஜனவரி மாதத்திலும் மாகாண சபைகளின் தேர்தல் மார்ச் மாதத்திலும் நடத்தப்படும். எதிர்வரும் தேர்தல்கள் அனைத்தும் புதிய தேர்தல் முறைமையின் கீழேயே நடைபெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு கூறினார். செயலமர்வில் வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.
அமைச்சர் பைசர் முஸ்தபா தொடர்ந்தும் உரையாற்றுகையில், புதிய தேர்தல் முறைமூலம் கிராமத்துக்குப் பொறுப்புக்கூறும் தலைமைத்துவம் மற்றும் அதிகமான பெண் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியலில் அரசியலில் குடும்ப ஆதிக்கம் இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. வட்டாரமுறை முறை மற்றும் விகிதாசார முறையுடன் கூடிய கலப்புத் தேர்தல் முறைமை மக்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கு 25% பெண் பிரதிநிதித்துவம் மற்றும் மாகாண சபைகளுக்கு 25% பெண் பிரதிநிதித்துவம் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களோ, அமைச்சர்களோ, பிரதேச அரசியல்வாதிகளோ தமது மனைவி அல்லது மகள்மார்களை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடச் செய்வதை நாம் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் ஏனைய பெண்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும். குடும்ப பெண் அங்கத்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்க வேண்டாம் என நான் அரசியல் வாதிகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இன்று எமது நாட்டு அரசியலில் பிரச்சினையொன்று உள்ளது. பெண்கள் பெண் அபேட்சகர் ஒருவருக்கு வாக்களிப்பதில்லை. இது எமது நாட்டிலுள்ள பிரச்சினையாகும். நாம் பெண்களை நம்பிக்கையூட்ட வேண்டும். பெண்கள் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்க வேண்டும்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரதமராக எம்மால் சிறிமாவோ பண்டார நாயக்கவை நியமிக்க முடியுமாயிருந்தது. இந்த இலக்கை நாம் நிறுத்திக்கொள்ளக் கூடாது. நாமே உலகில் முதல் பெண் பிரதமரை நியமித்தோம் என்றார்.
எப்படி பார்ப்பினும் முஸ்லிம் பிரதேசங்களில் தேசிய கட்சிகள் உட்பட உள்ளுர் கட்சிகள் அடங்கலாக 10ற்கும் மேற்பட்ட கட்சிகள் போட்டியிடும், அப்படியெனில் ஒரு குறிச்சிக்கு 10 வேட்பாளர்கள் களமிறங்குவர் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது