மதவாத, இனவாத, அடிப்படைவாத அமைப்புக்களான பொதுபல சேனா உள்ளிட்ட குரோதத்தைத் தூண்டும் அமைப்புக்கள் அனைத்தையும் தடை செய்ய இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாய் நாட்டுக்கான இராணுவ வீரர்கள் எனும் அமைப்பு பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவ்வமைப்பின் ஏற்பாட்டாளரும் ஓய்வுபெற்ற மேஜருமான அஜித் பிரசன்ன கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"இந்நாட்டிலுள்ள சிங்கள – முஸ்லிம் மக்களிடையே குரோதத்தை ஏற்படுத்தி வருகின்ற பொதுபல சேனா ஓர் அடிப்படைவாத அமைப்பு. இது நோர்வேயினால் போஷிக்கப்படும் ஓர் அமைப்பு
இவ்வாறு இரு இனங்களிடையேயும் விரிசலை ஏற்படுத்திய அவ்வமைப்பின் தேரர்களை இதுவரை கைது செய்ய அரசாங்கத்தினால் முடியாமல் போனது. இதற்கு பிரதான காரணம் ஜாதிக ஹெல உறுமய செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க.
இவர்களைக் கைது செய்தால், தான் உட்பட இன்னும் பலரைச் சேர்த்துக் கொண்டு வீதியில் இறங்குவோம் என இவர் அரசாங்கத்தை மிரட்டியுள்ளார்.
மதவாத, இனவாத, அடிப்படைவாத அமைப்புக்களான பொதுபல சேனா, சிங்களே போன்ற அமைப்புக்களின் பின்னால் அமைச்சர் சம்பிக்க உள்ளார் என்பதை நான் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கின்றேன். அரசாங்கத்துக்கு முடியுமானால், இந்த அமைப்புக்களைத் தடைசெய்து காட்டட்டும்." என அவர் கூறினார்.