தகவல்களும் செய்திகளும் உடனுக்குடன் பரிமாறிக் கொள்ளப்படும் கணினி – இணைய யுகம் இது. மாறிவரும் சூழலுக்கேற்பத் தற்காலத்துடன் தங்களுக்கு உள்ள தொடர்பையும் தங்கள் மதிப்பையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக வழக்கமான இதழியலும் செய்தித் தொழில்துறையும் உலகம் முழுவதிலுமே தடுமாறிவருகின்றன. இந்தச் சவாலை முறியடிக்க இத்துறை தன்னுடைய திறமைகளைக் கூர்தீட்டிக்கொள்வது, வலுப்படுத்திக்கொள்வது, சில முக்கியச் செயல்களைத் தொடர்ந்து மேற்கொள்ள தன்னையே மேம்படுத்திக்கொள்வது அவசியம் என்று இதழியல் துறையில் உள்ளவர்களால் கருதப்படுகிறது.
லண்டனில் உள்ள சிட்டி பல்கலைக்கழக இதழியல் துறைப் பேராசிரியரும் முதுபெரும் பத்திரிகையாளருமான ஜார்ஜ் பிராக் தன்னுடைய, ‘அவுட் ஆஃப் பிரிண்ட்: நியூஸ் பேப்பர்ஸ், ஜர்னலிசம் அண்ட் தி பிசினஸ் ஆஃப் நியூஸ்’ என்ற நூலில் என்ன செய்ய வேண்டும் என்று விவரித்திருக்கிறார். தரவுகள் சரியானவைதானா என்று உறுதிசெய்துகொள்வது, தரவுகள், நிகழ்வுகள் போன்றவற்றை அர்த்தப்படுத்திக்கொள்ளுதல் , தன்னைச் சுற்றி நடப்பவற்றுக்குச் சாட்சியமாக இருத்தல், புலனாய்வு செய்தல் ஆகியவையே இதழியலின் முக்கிய அடித்தளம். இதழியல் சார்ந்திருக்கும் நம்பகத்தன்மைக்கு அதுதான் அடித்தளம். 21-ம் நூற்றாண்டில் இந்த நான்கு அம்சங்கள் மீதுதான் இதழியலே மறுகட்டமைப்பு செய்யப்படும் என்கிறார்.
கடந்த 50 ஆண்டுகளில் உலகம் முழுவதுமே – இந்தியா உட்பட, புலனாய்வு இதழியல் என்பதில் ஏற்ற, இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கூடவே அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம், சமூகம், சர்வதேச உறவுகள் தொடர்பாகப் புலனாய்வு இதழியல் வெளியிட்ட மக்கள் ஆற்றும் எதிர்வினைகளிலும் ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.
புலனாய்வு இதழியல்
புலனாய்வு இதழியல் என்றால் என்ன என்று விளக்கம் அளிப்பதில் புலனாய்வுப் பத்திரிகையாளர்களுக்கும் இத்துறை அறிஞர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. குற்றச்செயல்கள் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயம் போன்றவை தொடர்பான தகவல்களைத் தேடித் துழாவித் திரட்டுவது, இதுகுறித்து ஏற்கெனவே நிலவிய தகவல்களில் வெளிச்சம் பாய்ச்சுவது, மூடி மறைக்கப்படும் விவகாரங்களை அம்பலப்படுத்துவது அல்லது மக்களால் அறிய முடியாத தகவல்களைத் தேடிக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவது என்பதே புலனாய்வு இதழியல் என்பதை நாம் ஒப்புக்கொள்ளலாம். உண்மையான தகவல்களைத் தேடிக் கண்டுபிடிப்பதுதான் இந்தப் பணியின் முக்கிய அடித்தளம். ஆனால், சம்பவங்களை இதழாளர் சரிவர உள்வாங்கிக் கொள்ளவில்லையென்றால், புலனாய்வு செய்வதில் பலன் ஏதும் இருக்காது.
பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, இதழியல் கல்விக்கே தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவரான எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் புலனாய்வு என்பதன் முக்கியப் பணி எது என்பதைத் தெளிவாக விவரித்திருக்கிறார், அந்தக் காலப் பத்திரிகையாளர்கள் பலரும் ஒப்புக்கொள்வதுதான் இந்தக் கருத்து. 1996-ல் லாஸ்ஏஞ்சலீஸ் நகரில் ‘இதழியல்: உலகின் மிகச் சிறந்த பணி’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையில், அவர் இதுகுறித்து சொன்ன கருத்து இடம்பெற்றிருக்கிறது. “இளம் பத்திரிகையாளர்களுக்கு அளிக்கும் கல்வியும் பயிற்சியும் மூன்று தூண்கள் மீது கட்டமைக்கப்பட வேண்டும். 1. பத்திரிகையாளருக்கு இயல்பாக உள்ள திறமைக்கும், அதற்குப் பொருத்தமான பணிக்கும் தரப்படும் முன்னுரிமை. 2. குறிப்பிட்ட ஒரு செய்திக்காக மட்டும் புலனாய்வு செய்து எழுதுவதல்ல, எல்லாச் செய்திகளையுமே, செய்திக் கட்டுரை களையுமே அக்கறையோடு புலனாய்வு செய்து எழுதுவது குறித்து இதழாளருக்கு உள்ள இலக்கணம். 3. இந்தத் துறைக்கான அறநெறிகளை எப்போதாவது மட்டுமல்ல, எப்போதுமே கடைப்பிடிக்க வேண்டும் என்ற உணர்வு.”
இதழியலின் முக்கிய கணம்
புலனாய்வு இதழியல் என்று தனியாக ஏதும் இல்லை என்று மார்க்கேஸும் அவர் காலத்திய இதழாளர்களும் வற்புறுத்துவதற்குக் காரணம் இதுதான்: இதழியலின் ஒவ்வொரு துறையும் ஒவ்வொருவிதச் செயல்பாடும் உயர்ந்த தரத்தில் இருக்க வேண்டும். ஒரு செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும், தகவல்களைத் தோண்டி எடுக்க வேண்டும், வரலாற்றுப் பின்னணியில் உண்மைகளையும் சம்பவங்களையும் பொருத்திப் பார்க்க வேண்டும், இதழியல் ரீதியிலான கற்பனைத் திறனைப் பயன்படுத்துவதோடு, தேவைப்படும் இடத்தில் ஒரு இலக்கியப் படைப்பாளிக்குரிய கற்பனைத் திறனையும் பயன்படுத்த வேண்டும். சுதந்திரமாகவும், எந்தச் சார்பும் இல்லாமலும் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும். நியாயமாகவும் மனிதநேயத்துடனும் தார்மிக நெறிகளுடனும் நடந்துகொள்வதென்பது இதழியலில் பிரிக்க முடியாத அங்கமாக ஆக வேண்டும்.
புலனாய்வு இதழியல் என்பதை இதழியலின் தனிச்சிறப் பான துறையாகக் கருதாமல், அதனுடன் பின்னிப் பிணைந்துள்ள அடிப்படைச் செயல்பாடுகளுள் ஒன்று என்ற விசாலமான பார்வையை நாம் ஏற்றுக்கொள்வோமானால், நமக்கு முன்னே அற்புதமான காட்சி ஒன்று விரியும். உண்மை குறித்த தேடல், பல்வேறு அருமையான கருப்பொருள்கள், தேடித் துழாவும் செயல், கற்பனைத் திறன், படைப்பூக்கம், இலக்கியத் தன்மை, எல்லாவற்றுக்கும் மேலாக சுதந்திரம், மனித குலம், நீதி போன்றவை குறித்து கொள்ளும் உத்வேகம் போன்றவை நிறைந்த காட்சிதான் அது.
நல்ல தரமான பத்திரிகையாளர்கள் தங்களுடைய முயற்சியால் கிடைக்கும் வண்டி வண்டியான தரவுகளை அல்லது தங்கள் மடியில் வந்து விழும் தகவல்களை வெளியிடுவதில் மகிழ்ந்துவிடுவதே கிடையாது. இதுவரை மறைக்கப்பட்ட அல்லது மக்களின் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்த தகவல்களை அவற்றின் சமூக, நெறிசார்ந்த, வரலாற்றுப் பின்னணியில் பொருத்திப் பார்த்து, கோவையாகவும் சுவாரஸ்யமாகவும் கட்டுரை எழுதுவதில்தான் அவர்களது உண்மையான தேடல் இருக்கிறது. அப்போதுதான் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து சமூகத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இதழியலால் முடியும். அப்படிப்பட்ட இதழியல்தான் காலத்தை வெல்லும்.
உயர்தரப் புலனாய்வு இதழியலுக்கு இரண்டு உதாரணங்களைக் காண்போம். லூயி அலெஹாண்ட்ரோ விலாஸ் கோ என்ற மாலுமியின் கப்பல் விபத்து அனுபவம் குறித்து கொலம்பியா நாட்டின் ‘எல் எஸ்பெக்டடோர்’ செய்தித்தாளில் 1955-ல் மார்க்கேஸ் எழுதிய ‘மூழ்கிய கப்பலிலிருந்து தப்பிய மனிதன்’ தொடர் கட்டுரை, முதலாவது. ‘ஹிரோஷிமா குறிப்புகள்’ என்ற பெயரில் கென்சாபுரோ ஓயீ என்ற ஜப்பானிய எழுத்தாளர்-பத்திரிகையாளர் ஒரு மாதாந்திரப் பத்திரிகையில் 1963-ல் எழுதத் தொடங்கி 1965-ல் முடித்தது. இரண்டாவது, ஆய்வு அலசல்களாக இவை பாடப் புத்தகங்களில் இடம்பெறாது. ஆனால், புலனாய்வு செய்திக் கட்டுரைகள் என்ற வகையில் கடின உழைப்பைச் செலுத்தி, மிகவும் கவனமாக ஆராய்ந்து, தகவல்களைச் சேகரித்து, கற்பனை வளத்துடன் அற்புதமாக எழுதப்பட்ட அவ்விரண்டும் காலத்தைக் கடந்து நிற்கும்.
புலனாய்வு என்பதைப் பற்றிய விரிவான பார்வை வேண்டும் என்று சொல்வது செய்தி நிறுவனங்கள் தங்களுடைய புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கூடாது என்றோ, குறிப்பிட்ட விஷயங்களைப் புலனாய்வு செய்வதற்காகச் சிறப்புப் புலனாய்வு அணியை ஏற்படுத்தக் கூடாது என்றோ அர்த்தமாகாது. நிச்சயமாகத் தங்கள் புலனாய்வுப் பிரிவின் பலத்தை அதிகப்படுத்திக்கொள்ளவும் சிறப்புப் புலனாய்வு அணியை அமைக்கவும் வேண்டும். அதே நேரத்தில், தரமான இதழியலிலும் அதன் நெறிகளிலும் பயிற்சி பெற்ற, நன்கு படித்த இதழாளர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். நடைமுறையில் அனுமதிக்கப்படுவதைக் காட்டிலும் அதிக அளவில் அவர்களும் புலனாய்வுப் பணிகளுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். சமூக, நெறிசார்ந்த பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து செய்தி தரும் பொறுப்புக்கு ஏராளமான இளம் பெண்களையும் இளைஞர்களையும் தேர்வுசெய்து அனுபவம் பெற்றவர் களின் சீரிய மேற்பார்வையில் ஈடுபடுத்தினால் அவர்களுடைய திறன் அதிகரிக்கும், பணிக் கலாச்சாரம் மேம்படும், இதழியல் துறையின் தரமும் உயரும்.
புலனாய்வும் தார்மிக நெறிகளும்
புலனாய்வு இதழாளர்கள் எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சினைகளை எடுத்துக்கொள்வோம். தங்களின் பெயர், அடையாளத்தை மறைத்துக்கொண்டு புலனாய்வு செய்வது ஒன்று. இன்னொன்று, அநாமதேயமாகத் தகவல் தருபவர்களையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டிய தகவல் மூலங்களையும் எதிர்கொள்வது. தங்கள் உண்மை அடையாளத்தை மறைத்துத் தகவல் திரட்டும் வழிமுறையைப் பொறுத்தவரை பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட சில விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிமுறைகளைப் பின்பற்றுவதில்தான், குறிப்பாகச் செய்தியறையில் சிக்கல் நிலவுகிறது. ஒரு இதழாளர் தகவல் திரட்டும்போது விஷயத்தின் முக்கியத்துவம் கருதி, நேரடியாகப் பெற முடியாமல் போகும்போதுதான் அவர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு தகவல் திரட்டலாம் என்பது முதல் விதி. அப்படிச் செய்ய நேரும்போது, தாங்கள் அப்படி நடிப்பது அல்லது செயல்படுவது பொதுநலனுக்காகத்தானா என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும் என்பது இரண்டாவது விதி. தான் யார் என்பதை வெளிப்படுத்தாமல் தகவல் திரட்டும் இதழாளரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் செய்தியையும் மூத்த பத்திரிகையாளர் ஒருவர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். தொழில் தர்மத்துக்கு மாறாகச் செயல்பட்டால் அதைத் தடுக்க வேண்டும் என்பது மூன்றாவது விதி.
அநாமதேய, ரகசியத் தகவல் ஆதாரங்களைப் பயன்படுத்துவதும் துஷ்பிரயோகம் செய்வதும் உலகளாவிய ஓர் நிகழ்வு. இதில் பலியானவர்கள் ஏராளம். அதனால், பத்திரிகைகள் மீதான நம்பகத்தன்மைக்கும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியப் பத்திரிகையாளர்கள் இப்போது எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சினை அநாமதேய, ரகசியத் தகவல்களைத் தரும் வட்டாரங்களைப் பாதுகாப்பது பற்றியதல்ல; அதிகாரபூர்வமான வட்டாரங்கள், பெருநிறு வன வட்டாரங்கள் மற்றும் இதர செல்வாக்கு பெற்ற வட்டாரங்களெல்லாம் தங்களுக்குப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் கிடைக்கும் இடத்தை, வேறு ஒரு முகமூடிக்குள் மறைந்துகொண்டு, செய்யும் துஷ்பிர யோகம்தான் இந்திய இதழியல் எதிர்கொண்டிருக்கும் பெரிய பிரச்சினை. இதைக் கட்டுப்படுத்தவில்லை யென்றால், எந்தவிதப் பொறுப்பும் இல்லாமல் அவர்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் செலுத்துவார்கள். தங்களை எதிர்ப்பவர்களையும் தங்களுக்கு எதிரான கருத்து கொண்டிருப்பவர்களையும் அச்சுறுத்தவும், குற்றஞ்சாட்ட வும், சுயநலம் சார்ந்த செய்திகளைப் பரப்பவும், அரசுக ளுக்கு ஒத்தூதும் செயல்களைச் செய்யவும், தவறான தகவல்களைப் பரப்பவும் பத்திரிகைகளையும் தொலைக் காட்சியையும் அவர்கள் பயன்படுத்திக்கொள்வார்கள்.
சில தகவல்களைப் பெறுவதற்காக, தாங்கள் யாரென்று தெரிவிக்க வேண்டாம் என்று கோருவதை இதழாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர். அதை அவர்களால் கேள்வி கேட்க முடிவதில்லை. அந்த ரகசிய உடன்பாடுகளையும் அதற்குப் பிறகு கிடைக்கும் தகவல்களையும் பத்திரிகை அலுவலகத்தில் யாரும் மேற்பார்வை செய்ய முடிவதில்லை. எனவே, அத்தகவல்களைப் பெறுவோர் தவறாகப் பயன்படுத்துவதும் நடக்கிறது. அப்படித் தகவல் பெறுவோரை, தகவல் தந்தோர் தவறாகப் பயன்படுத்துவதும் நடக்கிறது. இது பெரிய கொள்ளை நோய்போல இப்போது பரவிவிட்டது. எனவேதான் தெளிவான, துல்லியமான வரையறுக்கப்பட்ட ஆசிரியர் குழு வழிகாட்டும் நெறிமுறைகள் அவசியமாகின்றன.
நல்ல தரமுள்ள புலனாய்வு இதழியல் அவசியமானது, பயனுள்ளது. சாதாரண மக்களுக்கும் சமூகத்துக்கும் நன்மை களைச் செய்யவல்லது. அதிகாரத்தில் உள்ளோருக்கு முன்பு உண்மையை ஆணித்தரமாக எடுத்துவைக்கக் கூடியது. களைப்படைந்து, உற்சாகமிழந்து காணப்படும் இதழியல் துறைக்குப் புத்துயிர் ஊட்ட அவசியமானது. இந்தியாவிலும் தெற்காசியாவிலும் இதழியல் துறை என்பது இன்னமும் வளர்ச்சிப் போக்கில்தான் இருக்கிறது. நாம் நினைப்பதைவிட வெகு விரைவிலேயே உலகத் தரத்துக்கு இங்கும் இதழியலின் தரம் உயர்ந்துவிடும் என்ற நம்ப இடம் இருக்கிறது. நம்முடைய மனித ஆற்றலையும் பொதுநலன் கருதி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளையும் பார்க்கும்போது, செய்திச் சேகரிப்பில் சமூக மதிப்பு கூடவும் வலுவுறவுமே வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. தொழில்முறை இதழியலுக்கும் செய்தித் தொழில்துறைக்கும் இது நல்லவிதமான பங்களிப்பையே செய்யவிருக்கிறது.
– என்.ராம், ‘தி இந்து’ குழுமத் தலைவர்,
ஆசிய ஊடகவியலாளர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் நிகழ்த்திய உரையின் எழுத்தாக்கம்
© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: சாரி