Top News

தாஜ்மகாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் சிவ மந்திரங்களை பாடிய இந்து அமைப்பினர் கைது:



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
தாஜ்மகாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த மிரட்டலால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் அமைந்துள்ளது. நாள்தோறும் இதை பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கடந்த சில நாட்களாக தாஜ்மகால் குறித்து பாஜ தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகின்றனர். இதனால் உத்தரபிரதேசத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையில் நேற்று இரவு 9. 40 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் தாஜ்கஞ்ச் காவல் நிலையத்திற்கு அவசர எண் 100ல் அழைத்து தாஜ் மகாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
பின்னர் உடனடியாக தொடர்பையும் துண்டித்துள்ளார்.
இதையடுத்து தாஜ்மகாலுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர் தாஜ்மகாலுக்கு விரைந்து வந்து அனைத்து இடங்களிலும் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.
இந்த சோதனையானது இரவு சுமார் 11 மணி வரை நீடித்தது. ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
அதன் பிறகுதான் இது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதற்கிடையில் ராஷ்டிரீய சுவபிமான் தள், இந்து யுவ வாகினி ஆகிய இந்து அமைப்புகளைச்  சேர்ந்தவர்கள் ஏராளமானோர் தாஜ்மகாலில் அமர்ந்து சிவ மந்திரங்களை கூறிக் கொண்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.   பின்னர் அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி கொடுத்த பிறகு அவர்களை போலீசார் விடுவித்தனர். ஏற்கனவே பாஜ எம்எல்ஏ  சங்கீத் சோம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தாஜ்மகால் துரோகிகளால் கட்டப்பட்டது என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில் வருகிற 26ம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத் தாஜ்மகால் வருகிறார். அப்போது சுற்றுலாத்துறை குறித்த பல்வேறு முக்கிய திட்டங்களை அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமித்ஷா மகன் ஜெய்ஷா மீதான சொத்து குவிப்பு பிரச்னையை திசை திருப்பவே பாஜ தற்போது தாஜ்மகால் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக நேரு பல்கலை மாணவர் சங்க தலைவர் கண்ணையா குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் உத்தரபிரதேசத்தில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது.
Previous Post Next Post