மிஹாத்
ஜனநாயக விரோத தமிழ் ஆயுததாரிகள் வடக்கு கிழக்கில் ஆதிக்கம் செலுத்திய காலத்தின் அனுபவமூடாகவே நாம் இன்றும் சிந்தித்து வருகிறோம். இன்று சற்று தளர்ச்சியான அரசியல் சூழல் உள்ள நிலையில் ம
ாற்றி சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. முறையாக அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் மாகாண இணைப்புக்கான கண்ணோட்டத்தில் புதிய உரையாடல்களை ஆரம்பிப்பது தவறில்லை என்றே தோன்றுகிறது. ஆனால் இந்த வழிமுறைகளின் மேல் ஒரு தந்திரோபாய வேகத்தடை போல உருவெடுக்கும் தனியலகு கோரிக்கையும் கவனமாகப் பரீட்சிக்க வேண்டியதே.
தமிழ் அரசியல் சக்திகள் மீதுள்ள முஸ்லிம்களின் அவநம்பிக்கையும் நியாயமானதே. ஏனெனில் இன்றுவரை அவர்களின் பல்வேறு அதிகார அத்துமீறல்கள் குறைந்தபாடில்லை. அதற்கு சரியான தீர்வுகள் கண்டுபிடிக்காமல் இணைப்பை ஆதரிக்கவும் முடியாது. இவையெல்லாம் அரசியல் திசைதிருப்புகளாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஒருவேளை இணைப்பு நடந்து விட்டால் ஆளும் / எதிர் தரப்புகளில் கூட பல்வேறு தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இணைந்து தேர்தல் கூட்டணிகளை உருவாக்கவும் புதிய அரசியல் அதிகாரச் சமநிலைகள் உருவாகவும் வழியேற்படும்.
இன்று எழுந்துள்ள விமர்சனம் என்பது ஆக்கபூர்வமான தீர்வுகள் எதனையும் வலியுறுத்தாத புலம்பல்களாக அமைந்திருப்பதையே அவதானிக்க முடிகிறது. அது ஏதாவதொரு அரசியல் முகாம் சார்ந்த அக்கறையாகவோ அல்லது வேறொரு அரசியல் முகாம் சார்ந்த வெறுப்பாகவோ இருப்பது போலவே தென்படுகிறது. இது சமூக அரசியலுக்கு எதிரான அறுவடையாகவே வந்து சேரக் கூடியது.
மத தூய்மைவாதம் போல நடைமுறை அரசியல் சாத்தியமற்றது என்பதை யாவரும் உணரத்தான் வேண்டும். பிரிந்துள்ள கிழக்கு மாகாண நிருவாகத்தில் கூட முஸ்லிம்கள் தனி அதிகாரம் செலுத்தி விட முடியாத சூழலே உள்ளது. அரசியல் அரங்கு என்பது பல்வேறு விதமான சாத்தியங்களோடு தொடர்பானது. பிரிந்திருக்கும் கிழக்கில் கூட தமிழர்களும், சிங்களவர்களும் ஒரு புரிந்துணர்வுக்கு வந்து அதிகாரத்தைக் கையேற்றால் முஸ்லிம் அதிகாரத் தூய்மைவாதம் பேசுவோரின் அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும்.
இங்கு பிரிவதா / சேர்வதா என்பதல்ல பிரச்சினை. சிவில் சமூகத்திடம் எதிர்கால சமூக இருப்பையும் அரசியல் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கான தெளிவான பார்வையும் நடைமுறை வேலைத் திட்டங்களும் கட்டியெழுப்பப்படவில்லை என்பதனாலேயே இத்தனை அங்கலாய்ப்புகள். முஸ்லிம்களிடம் அரசியல் பற்றிய உறுதியான நிலைப்பாடில்லை. உரிமை அரசியல் பற்றி யாராவது முன்னெடுத்தால் அதைப் புறந்தள்ளி அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு என்று கோஷமிடுவார்கள். அந்தச் சலுகை அரசியலை யாராவது முன்னெடுத்தால் மீண்டும் உரிமை என சத்தமிடுவார்கள். இந்த இரட்டைப்பாதை அரசியலே இன்று முஸ்லிம்களுக்கு வாய்த்திருக்கிறது. இதுவும் ஒரு வழிமுறைதான் என அவர்கள் பழகி விட்டார்கள். இதற்கு சில சமயங்களில் சில சமரசங்கள் தேவையாயிருக்கிறது. இதுதான் கிழக்கு மக்களுக்கு அஸ்ரப் கற்றுக் கொடுத்துள்ள பாடம். அதை பல்வேறு கட்சிகளிலும் பிரிந்த நிலையிலுள்ள அஸ்ரபின் சீடர்கள் தவறாமல் பின்பற்றுகிறார்கள்.+
நமது சமூகச் செயல்பாட்டுக் களத்திலுள்ள மேதாவிகளிடம் ஒரு பழக்கமிருக்கிறது. அது என்னவென்றால் : சிங்களப் பேரினவாதம் அடக்குமுறையும் அட்டூழியமும் செய்யும்போது தமிழ் பேரினவாதத்தில் மென்போக்கைக் காண்பிப்பார்கள்.
தமிழ் பேரினவாதம் அச்சுறுத்தலாகும் சூழலில் சிங்களப் பேரினவாதத்தின் ஆபத்தை மறந்து விடுவார்கள்.ஆனால் இந்த இரண்டு வகை அச்சுறுத்தல்களையும் அரசியலமைப்பு ரீதியாக எவ்வாறு களையலாம் எனும் புள்ளிக்கு வந்து சேராமல் வெறுப்பு அரசியல் மட்டும் பேசி காலத்தை விரயமாக்குவார்கள்.
வடக்கு, கிழக்கு இணைப்பு : கற்பனாவாத அச்சமூட்டல்.
முன்பெல்லாம் செப்டெம்பர் மாதம் நெருங்கினாலே ஊடகங்களின் வாயில் ஒலிப்பதாக இருந்த மனித உரிமை விடயம் இப்போது சோபையிழந்த செய்தியாக மாறி விட்டது. எப்போது மகிந்தவின் அரசாங்கம் ஆட்டம் கண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியதோ அன்றிலிருந்து இலங்கை மீதான மனித உரிமை விடயத்தை உலகம் மறந்து விட்டது.
இலங்கையில் போர் இடம்பெற்ற கடந்த மூன்று தசாப்தங்களிலும் மனித உரிமை மீறல்கள் கணக்கிலடங்காத வகையில் இடம்பெற்றது உண்மை. இதற்கு இந்தக் காலப்பகுதியில் இந்நாட்டை ஆண்ட இரண்டு பிரதான கட்சிகளும் காரணமாகும்.
தமிழர் ஆயுதப் போராட்ட காலப்பகுதியில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் அழிவுகளை மூன்று வகையாக நோக்க முடியும். அவை
* போர் ஆரம்பித்த காலப்பகுதியிலிருந்து தொண்ணூறின் நடுப்பகுதி வரையிலானவை.
* 1994 ல் இருந்து 2005 வரையானவை.
* மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவை.
ஜூலைக் கலவரத்தில் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட மிக மோசமான அழிவு நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் ஆயுத போராட்டங்கள் தீவிரமாகியது. வடக்கில் தொடங்கிய தமிழர் ஆயுதப் போராட்டங்கள் சில வருடங்களுக்குள் கிழக்கு மாகாணத்தையும் முழுவதுமாகப் பீடித்துக் கொண்டது. இயக்கங்கள் கெரில்லா முறையில் தமது அரச எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இந்த ஆரம்பக் கட்டத்தில் இலங்கை இராணுவமானது போதிய ஆயுத வளங்களுடனோ, மிகையான இராணுவ தந்திரோபாயங்களுடனோ கட்டமைந்திருக்கவில்லை. ஆனால் இன வெறுப்பு ஓங்கிய இராணுவமாக அது திகழ்ந்தது. இந்தக் காலப்பகுதியில் தமிழ் போராட்டக் குழுக்கள் உதிரிகளாகத் தமது தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இந்நேரத்தில் சிங்கள இராணுவமானது வடக்கு கிழக்கின் புவியியல் அமைப்பை பூரணமாக புரிந்து கொண்டிருக்கவில்லை. அதனால் ஆரம்பத்தில் அவர்கள் சிரமங்களை எதிர்நோக்கினர். பின்னர் படிப்படியாக நிலைமைகளையும் சவால்களையும் கையாள அவர்கள் பழகிக் கொண்டனர். புதிய ஆயுத தளபாடங்களையும் பயிற்சிகளையும் பெற்ற அதேவேளை இராணுவத்தினரின் தொகையையும் படிப்படியாக அதிகரித்துக் கொண்டனர்.
இந்த ஆரம்ப காலங்களில் இலங்கையில் உள்நாட்டுப் போர்க்கள மனித உரிமை விதிகள் தெளிவாகப் பின்பற்றப்பட்டதா என்பது சந்தேகமே. இந்நேரத்தில் சர்வதேச மனித உரிமைக் கண்காணிப்பகங்கள் எதுவும் இலங்கையில் செயல்பட்டதை அறிய முடியவில்லை. காடுகள் தவிர அனைத்து மக்கள் வாழும் பிரதேசங்களும் இராணுவச் செல்வாக்கு மிக்க பிரதேசங்களாகவே இருந்தன. எங்காவது கெரில்லா தாக்குதல்கள் இடம்பெற்றால் முழு குடியிருப்புப் பிரதேசங்களும் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுவது வழக்கமாயிருந்தது. இதன்போது பெருமளவு மக்கள் காணாமல் போயினர். அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள் அல்லது என்ன ஆனார்கள் என்பதற்கான முறையான கண்காணிப்புகளோ, பதிவுகளோ அப்போது இருக்கவில்லை. இதே காலத்தில்தான் கடலில் இறந்த உடல்கள் மிதந்து வருவதும் ஆள் நடமாட்டமற்ற பகுதிகளில் எரிந்த உடல்கள் கிடப்பதுமான பயங்கரங்கள் நிகழ்ந்தன.
1994 ல் சந்திரிகா ஆட்சிக்கு வந்த பிறகு மனித உரிமை விடயங்களைக் கண்காணிக்கும் வெளிநாட்டு அமைப்புகள் செயல்படத் தொடங்கியிருந்தாலும் முறையற்ற கைதுகளும் இரகசியமான மனித உரிமை மீறல்களும் இடம்பெற்றுக் கொண்டேயிருந்தது. கிருஷாந்தி குமாரசாமி போன்ற மாணவிகள் இராணுவ வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதும் இந்தக் காலப்பகுதிதான். பெருமளவான மனித உரிமை மீறல்களும் சட்ட விரோதக் கைதுகளும் திரைமறைவில் இடம்பெற்ற காலம் இதுவாகும்.
2002 ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இடம்பெற்ற காலத்தில் ஏராளமான மனித உரிமை செயல்பாட்டாளர்களும் அமைப்புகளும் இலங்கைக்குள் விஜயம் செய்து நிலைமைகளைக் கண்காணித்தன. அதேபோல புலிகளின் பிரதேசங்களுக்கும் சென்று அவதானித்தன. அதன்போது இலங்கை அரசாங்கத்தைப் போலவே புலிகளும் மனித உரிமை விடயத்தில் மோசமாக இருப்பதனையும் அவதானித்தனர்.
மகிந்தவின் ஆட்சிக் காலமே இலங்கையில் மனித உரிமை விடயத்தில் மிக இழிவான அனுபவங்களைக் கொண்டதாக விளங்குகிறது. வெள்ளை வேன் கலாசாரம், சட்ட விரோதக் கைதுகள், கருத்துச் சுதந்திர மறுப்பு, ஊடக அடக்குமுறை என ஒரு புறமும், போர்க் களத்தில் யுத்தக் குற்றங்கள், இன அழிப்பு நடவடிக்கை என பல விதமான மனித உரிமைகள் இடம்பெற்ற காலமாக இது கருதப்படுகிறது.
இறுதி யுத்தம் முடிவடைந்த சில நாட்களில் ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகளின் சர்வதேச மனித உரிமை மாநாட்டில் இலங்கை மீது மென்போக்கு காண்பிக்கப்பட்டமையானது மனித உரிமை விவகாரத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியது. பிறகு மகிந்த தீவிரமான சீன சார்பு எடுத்ததன் பிற்பாடு மேற்கு நாடுகள் இலங்கைக்கு எதிரான மனித உரிமை விவகாரத்தை தீவிரமாக அணுகத் தொடங்கின. இரண்டு மூன்று ஆண்டுகள் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நிலைமையொன்று காணப்பட்டது. தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போகிறதென ஊடகங்கள் முழக்கமிட்டன. புலம்பெயர் அமைப்புகள் தமது வெற்றி அண்மிப்பதாக அறிக்கை விட்டன.
இந்தக் கதைகள் யாவும் ரணில் - மைத்திரி ஆட்சி அமைக்கும் வரை பேசு பொருளாக இருந்தன. ஆனால் ஆட்சி மாற்றம் இலங்கையில் ஏற்பட்ட பிற்பாடு மனித உரிமை விடயங்கள் பேசவே தகுதியற்ற அம்சமாக மாறிப்போனது. இப்போதெல்லாம் அதன் சூடான விவாதங்கள் இடம்பெறுவதில்லை. ஊடகங்களுக்கும் அதில் அக்கறையில்லை. சீனாவின் செல்வாக்கிலிருந்து இலங்கை மேற்குலகின் நட்பு வட்டத்தினுள் இணைந்த பிறகு மனித உரிமை விவகாரமானது திசைமாற்றம் பெற்று விட்டது.
இதனால் தமது குடியேற்ற நாடுகளில் அரசியல் பிழைப்புக்கான பேசுபொருளை இழந்து போய்விடுவோம் என அஞ்சிய தமிழ் டயஸ்போறாவானது இது தொடர்பில் ஜெனீவாவில் அழுத்தங்களை பிரயோகிக்க முனைந்தும் அது போதிய கவனிப்பைப் பெறவில்லை. இது போன்ற சூழ்நிலைகளை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் இலங்கையிடம் மென் போக்குடன் எடுத்துரைத்து வந்தது.
பல்லாயிரம் மக்களைப் பலிகொண்ட யுத்தத்தையும் அதனோடு தொடர்புடைய குற்றவாளிகளையும் மறைக்கும் பொறுப்பை புதிய அரசும் நடைமுறைப்படுத்திய போது மஹிந்த மீதிருந்த அழுத்தம் போல இலங்கை மீது எதுவும் நிகழவில்லை. இலங்கையின் புதிய அரசு ராஜதந்திர ரீதியிலும் உலக அரங்கில் தமிழர்களைப் பின்னுக்குத் தள்ளியது. இதன் இன்னொரு கட்டமாகவே கடந்த செப்டம்பர் மாதம் அரசியலமைப்பு திருத்த யோசனைகள் என்ற பெயரில் ஒரு நகர்வை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. அதில் வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமெனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விருப்பத்தினையும் பின்னிணைப்பாக வெளியிட்டு தமிழர்களினதும், உலகத்தினதும் கவனத்தை திசை திருப்பியிருக்கிறது.
புலிகள் பலம் பொருந்திய படையணியாக இருந்து போரிட்ட காலத்திலும் கூட சிங்கள அரசு வடக்கு, கிழக்கு இணைப்பை ஒருபோதும் ஏற்றிருக்கவில்லை. பல்லாயிரம் இராணுவத்தினரை இழந்து புலிகள் அமைப்பை முற்றாக அழித்து முழு நாட்டையும் தமது இறைமையினால் கட்டுப்பாட்டுக்குள் தற்போது வைத்திருக்கும் போது அவர்கள் இரண்டு சிறுபான்மை மாகாணங்களையும் இணைத்து ஒரு நிருவாக அலகாக மாற்றி சிறுபான்மையினரிடம் வழங்குவார்கள் என்பது சாத்தியமற்றது.
ஆனால் உலகத்தையும், டயஸ்போறாவையும் ஏமாற்ற இந்த அரசாங்கம் எடுத்துள்ள தந்திரோபாய நகர்வானது பல்வேறு விவாதங்களுக்கும் திருத்தங்களுக்கும் உட்பட்டு பிறகு சட்டமாகுமா என்பதே சந்தேகத்துக்குரியது.
2009ல் போர் முடிந்த கையோடு பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய மஹிந்த 13+ என்றொரு வார்த்தையை பயன்படுத்தினார். பதின்மூன்றாம் சீர்திருத்தத்திற்கு அப்பால் சென்று தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வை முன்வைக்கப் போவதாக அறிவித்தார். அது தனது பக்கம் இருந்த போர்க்குற்றங்களை மறைப்பதற்கான தந்திரோபாயம் என்பதைப் புரிந்து கொண்ட பேரினவாதம் அதற்கெதிராக அலட்டிக் கொள்ளவில்லை. அதன் தொடர்ச்சியாக 2009 செப்டம்பரில் ஐ.நா.மனித உரிமை அவை கூடிய போது மஹிந்தவினால் நியமிக்கப்பட்டிருந்த இலங்கைக் குழுவின் தலைவரான தயான் ஜயதிலக பல்வேறு பொய் வாக்குறுதிகளை வழங்கி உலகின் கவனத்தை திசை திருப்பியபடியால் அப்போது இலங்கைக்கு வெற்றி கிட்டியது. அது போன்ற நிகழ்வுகளே இந்த புதிய அரசாங்கத்திலும் நிகழ்கிறது.
அது சாத்தியமற்றுப் போகுமென்று தெரிந்தும் கூட அரசியல் அதிகாரத்தை இழந்த தரப்புகள் தமது இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள இதனை ஒரு கற்பனாவாத அச்சமூட்டல் பிரச்சார உத்தியாக்கி இலாபம் பெற முடியும் எனும் யோசனைக்கு வந்து சேர்ந்துள்ளன.