பாறுக் ஷிஹான்
1990 ஒக்ரோபரில் புலிகள் அமைப்பு வட மாகாணத்தை சேர்ந்த தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது இன அழிப்புக்குச் சமமான ஒரு அட்டூழியமான நடவடிக்கை. பலப்பல நூற்றாண்டுகளாக வாழ்ந்திருந்த தாங்கள் ஒரு சில நாட்களுக்குள் தாயகத்தை விட்டு முஸ்லிம்கள் விரட்டியடிக்கப் பட்டார்கள் இவ் முஸ்லீம்களின் வெளியேற்றதை நினைவு கூர்வது எமது கடமை என சமூக சேவகர் எம்.நஸீர் தெரிவித்துள்ளார்.
1990 ஒக்ரோபரில் புலிகள் அமைப்பு முஸ்லீம்களை வெளியேற்றியமை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வக்காலத்து வாங்கும் சிலர் எதிர்வரும் காலங்களில் வரவுள்ள அந்த நாளை நினைவு கூர தேவையில்லை என மக்கள் மத்தியில் தமது கருத்துக்களை திணித்து வருகின்றனர்.
இந்நிலையில் குறித்த நாளை நினைவு படுத்துவது முஸ்லீம் ஒவ்வொருவரதும் கடமையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யினால் முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்ட இருபத்து எழாவது ஆண்டு நிறைவடைகின்றது.வரலாற்றில் இடம்பெற்ற கொடிய மனிதாபிமானமற்ற அத்தியாயத்தை எவராலும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது.
1990ல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டது மனிதாபிமானத்தின் ஒரு பேரழிவு. மக்களை தங்கள் வாழ்விடங்களில் இருந்து துப்பாக்கி முனையில் அவர்களிடமிருந்த பணம் மற்றும் நகைகளை அவர்களுக்கு பறிக்கப்பட்டு விரட்டியடித்தது வெறுக்கத்தக்கதும் மற்றும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இந்த திரளான வெளியேற்ற நினைவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் என கூறித்திரியும் மாகாண சபை கூத்தாடிகள் குழு நினைவு கூற தேவையில்லை என தெரிவித்து வருகின்றது.இதனை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாவகச்சேரியிலிருந்த முஸ்லிம்களை ஒக்ரோபர் 15ல் வெளியேற்றுவதில் ஆரம்பமாகி ஒக்ரோபர் 30ல் யாழ்ப்பாண நகரத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை வெளியேற்றியதுடன் முடிவடைந்தது. வடக்கு பெருநிலப் பரப்பிலிருந்த முஸ்லிம்களின் திரளான வெளியேற்றம், யாழ்ப்பாண நகரத்தில் ஆரம்பமாவதற்கு சில நாட்கள் முன்னதாகவே ஆரம்பித்து குடாநாட்டு முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்து முடித்த ஒரு சில நாட்களின் பின் முடிவடைந்தது. பின்னர் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த ஒட்டுமொத்த வடக்கு முஸ்லிம்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் தவிர முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வாழ்ந்த முஸ்லிம்களும் வெளியேற்றப் பட்டார்கள்.
இந்நிலையில் தற்போது மீள்குடியேற்றம் என்ற பெயரில் பரவலாக பழிவாங்கல்களும் ஏமாற்றங்களும் தொடர்கதையாகின்றது.அரச இயந்திரங்களில் உள்ள புலிகளின் விசுவாசிகள் வடக்கு முஸ்லீம்களை மீள குடியேற விடாது பல்வேறு இடையூறுகளை செய்கின்றனர்.இது இவ்வாறு இருக்க பலவந்தமாக வெளியேற்றப்பட்ட நாளை நினைவு கூர்ந்து நமது அவல வாழ்வை உரிய தரப்பு செவிசாய்க்கும் வரை தொடர்ந்து மேற்கொள்வோம் என சகல முஸ்லீம் மக்களையும் கேட்டுக்கொள்கின்றேன்.