பாராளுமன்றத்தில் நடைபெற்ற மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூல வாக்கெடுப்பு தொடர்பில், அன்றைய தினம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் ஆலோசகர் ருஸ்தி ஹபீபின் கருத்துகளை அடிப்படையாக வைத்து அமைச்சரின் ஊடகப்பிரிவில் பணியாற்றும் சுகைப் எம்.காசிம், 25ஆம் திகதி நவமணியில் கட்டுரையொன்றை எழுதியிருந்தார்.
அதில் முஸ்லிம்களுக்கு ஓரளவேணும் சாதகமாக அமையக்கூடிய நான்கு அம்சக் கோரிக்கைகளை எழுதியது, திருத்தியது, அது சட்டமூலமாக அங்கீகரிக்கப்படுவதற்கு பாடுபட்டது எல்லாமே சட்டத்தரணி ருஸ்தி ஹபீபின் ஆலோசனையும், அமைச்சர் றிஷாதின் விடாப்பிடியான அழுத்தமுமே காரணமாக இருந்தது என்றும், ஏனைய முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறும் பார்வையாளர்களாக இருந்தார்கள் என்றும் ஒரு தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சித்துள்ளமை அதன்மூலம் தெளிவாகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமை 22ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற அஷ்ரப் சிஹாப்தீனின் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய பிரதியமைச்சர் அமீர் அலி, அமைச்சர் றிஷாத் பதியுதீனை ரவூப் ஹக்கீம் பிரதமரிடம் காட்டிக்கொடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார். இதனால் றிஷாத் பதியுதீனுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுகின்ற நிலை உருவாகியதாகவும் கூறியிருந்தார்.
மேற்படி விடயங்களை நடுநிலையான, பக்கச்சார்பற்ற பார்வையுடன் அணுகும் ஒருவருக்கு சில முடிவுகளை உறுதியாகவே எடுக்கமுடியும்.
பிரதியமைச்சர் அமீர் அலி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தவிசாளர். அறிக்கையை வழங்கியதாக கூறும் சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அமைச்சரின் சட்ட ஆலோசகர். அதனை எழுதியவர் அமைச்சரின் ஊடகப்பிரிவில் பணியாற்றுபவர். எப்படியாவது அமைச்சரை திருப்திப்படுத்துகின்ற வேலையைச் செய்வதே அவர்களின் வாடிக்கை. அதை அவர்கள் செவ்வனே செய்துமுடித்துள்ளார்கள்.
முஸ்லிம் கட்சிகளுடன் மலையக கட்சிகளும் இணைந்து அவர்களின் ஒட்டுமொத்த வாக்குப்பலத்தை வைத்து பேரம்பேசி பெற்றெடுத்துள்ள தீர்வை மலினப்படுத்தி, தனி நபர்களாக நின்று நாங்களே பெற்றுத்தந்தோம் என்கிற நாகரீகமற்ற தோற்றப்பாட்டைக் கொண்ட அரசியல் அறிக்கையாகவே இதனை காணமுடிகிறது.
இவ்வாறான சுயநல விளம்பர உத்திகள் காரணமாக எதிர்காலத்தில் அனைத்து சிறுபான்மை கட்சிகளும் ஒன்றிணைந்து போராடுகின்ற வியூகம் பிழைத்துப்போவதற்கான வாய்ப்புகள் அதிகமுண்டு. பலரும் சேர்ந்து செய்த ஒரு விடயத்தை தனது சுயநல அரசியலுக்காக மாற்றியமைக்கின்ற ஒருசிலரின் செயற்பாடுகளுக்கு அப்பால் நின்றுகொண்டு இதைப்பற்றி ஆராயவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.
மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது பேஸ்புக் பக்கத்தில் நடுநிலையான கருத்தொன்றை பதிவுசெய்திருந்தார். அதாவது அமைச்சர் ரவூப் ஹக்கீமும் இந்த விடயத்தில் இறுதிவரைக்கும் ஒத்துழைப்பு வழங்கினார். நாங்கள் இணைந்து செயற்பட்டமையினால்தான் இந்த விடயத்தில் பிரதமர் தனது நிலைப்பாட்டை மாற்றி சட்டத்திருத்தத்துக்கு சம்மதித்தார் என்கிறார்.
இவ்வாறே கடந்த ஞாயிறன்று (24) இரவு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் பேஸ்புக் நேரலையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பங்களிப்பு பற்றி சிலாகித்து பேசியிருந்தார்.
இதுதவிர, மலையக தோட்டத்தொழிலார்களை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைக் கட்சியொன்றை வழிநடத்தும் அமைச்சர் திகாம்பரம், அமைச்சர் ரவூப் ஹக்கீம் எடுக்கின்ற முடிவுகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அதற்காக தனது அமைச்சுப் பதவியை திறப்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறினார்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடன் தான் முதலில் வாக்குவாதப்பட்டார். கடுமையான தொனியில் இடம்பெற்ற இந்த வாக்குவாதமானது, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் முன்னிலையில்தான் நடைபெற்றது.
அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், றிஷாத் பதியுதீன், பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர்களான இராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர்களான பைசால் காசிம், எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், அரந்விந்த்குமார், எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மௌலானா, எம்.எஸ். தௌபீக், அப்துல்லாஹ் மஃரூப்,வேலுகுமார் ஆகியோர் மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு எதிராக வாக்களிப்பது தொடர்பில் கலந்துரையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது, அமைச்சர் பழனி திகாம்பரத்துக்கு அரசாங்கத்திலுள்ள முக்கிய அமைச்சர் ஒருவர் தொலைபேசியூடாக தொடர்புகொண்டு எங்கிருக்கின்றீர்கள்? அமைச்சர் ரவூப் ஹக்கீமுடன் சேர்ந்துகொண்டு அரசாங்கத்தை இல்லாமலாக்க நினைக்கின்றீர்களா என்று மிரட்டும் தொனியில் கேட்டுள்ளார். இதற்கு அமைச்சர் பழனி திகாம்பரமே சாட்சியாக உள்ளார்.
இதுதொடர்பான வாதப்பிரதிவாதங்கள் பாரளுமன்றத்திலுள்ள அமைச்சர் ரவூப் ஹக்கீமின் பிரத்தியேக அறையிலேயே நடைபெற்றது. இதற்கிடையில் ஆளும் தரப்பைச் சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் பலர் அவ்வப்போது அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வந்து வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களிக்குமாறும், பிரதமர் வாக்களித்தபடி சிறுபான்மை சமூகத்துக்கு எவ்வித பாதிப்பும் இல்லாதவாறு திருத்தங்களை மேற்கொள்வதாகவும் கூறினார்கள்.
பிரதமர் சார்பில் பலரிடமிருந்து தூதுகள் வந்தபோதும், எவ்விதமான அழுத்தங்களுக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீமோ அல்லது மனோ கணேசன், திகாம்பரம், ஹிஸ்புல்லாஹ், றிஷாத் பதியுதீன் உள்ளிட்ட யாரும் தலைசாய்க்கவில்லை.
அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் அவரது பிரத்தியேக அறையிலேயே இந்த ஆலோசனைகள் அனைத்தும் இடம்பெற்றன. இதில் எல்லோரும் தமது கருத்துகளை முன்வைத்தனர். மலையக மக்கள் தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் ஆகியோர் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். முஸ்லிம் சமூகம் தொடர்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அலிஸாஹிர் மௌலானா ஆகியோர் தமது கருத்துகளை முன்வைத்தனர்.
ஒருகட்டத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு பாதமான முறையில் இந்த வாக்கெடுப்பு நிகழுமாயின் தனது அமைச்சு பதவியை திறப்பதற்கு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தயாராக இருந்தார். அதனை ரவூப் ஹக்கீம் அங்குள்ளவர்களிடமே கூறியிருந்தார். இதனைக்கேட்ட, அமைச்சர் பழனி திகாம்பரம், நீங்கள் நீண்டகாலமாக அமைச்சராக இருக்கின்றீர்கள். ஆனால், நான் வெறும் இரண்டரை வருடங்கள் மாத்திரமே அமைச்சராக இருக்கிறேன். அப்படியிருந்தும் எனது சமூகத்துக்காக அமைச்சுப் பதவியை இழப்பதற்கு தயாராகவே இருக்கிறேன் என்றார்.
விவாதங்கள் இப்படி சூடுபிடித்துக்கொண்டிருந்த நிலையில், ரவூப் ஹக்கீமின் பாராளுமன்ற அறைக்குள் வந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயம்பதி விக்கிரமரத்ன மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை பிரதமர் உடனடியாக சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறினார்கள். அவரது அழைப்பையேற்று ரவூப் ஹக்கீமும் பிரதமரை சந்திப்பதற்கு சென்றார்.
பிரதமரை சந்தித்த ரவூப் ஹக்கீம், சிறுபான்மை மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் வகையில் அமைந்துள்ள இந்த வாக்கெடுப்பில் தானும் தான்சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிராக வாக்களிக்கவிருப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து தன்னுடைய அறைக்குள் வந்தார்.
இன்னும் சிறிதுநேரம் கழித்து அமைச்சர்களான கயந்த கருணாதிலக, வசந்த அலுவிஹார ஆகியோர் ரவூப் ஹக்கீமின் அறைக்குவந்து, அமைச்சர் ஹக்கீமை பிரதமர் மீண்டும் சந்திப்பதற்கு வரச்சொன்னதாக சொல்லிவிட்டு கூட்டிச் சென்றனர். அதன்பின்னரும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது முன்னைய நிலைப்பாட்டையே சொல்லிவிட்டு மீண்டும் அவருடைய அறைக்குள் வந்தார்.
இப்போது ஆலோசனை தீவிரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. இறுதியில் நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, தமது நிலைப்பாட்டை பிரதமருக்கு கூறி அவற்றுக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை பெறுவது தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து முடிவெடுத்தனர். இதில் மலையக மக்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் மனோ கணேசன் ஆகியோரின் பங்களிப்பும் புறக்கணிக்க முடியாதவை.
ஆனால், சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் தான் மாத்திரமே இவற்றையெல்லாம் செய்ததாகவும், அவர் இல்லாவிட்டால் அங்கு எதுவும் நடந்திருக்காது என்பதுபோல, பிரதமருக்கு ஒருபடி மேலே சென்று அறிக்கை விட்டிருப்பதானது அங்கிருந்த தமிழ்,முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை மலினப்படுத்தும் ஒரு செயலாகவே பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்களால் சாதிக்கமுடியாதவற்றை தான் சாதித்துள்ளதாக காட்டுவது எந்தளவுக்கு நியாயம் என்று புரியவில்லை.
ஒரு சாதாரண சட்டத்தரணியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எனும் அரசியல் ஜாம்பவான் அங்கீகாரம் வழங்கினார் என்றால் அது எத்தனை அபத்தமான விடயம். இன்னும் சொல்லப்போனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேரம்பேசும் சக்தியும், சமூகநலன்கருதி இணைந்து செயற்பட்ட சிறுபான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒற்றுமையுமே இந்த நான்கு அம்ச கோரிக்கை அங்கீகாரத்துக்கான காரணமாகும்.
இதனை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மிகத்தெளிவாக கூறியுள்ளார். நாங்கள் அனைவரும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிஷாத் பதியுதீன் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இணைந்தே எமது கோரிக்கைகளை முன்வைத்தோம் என்கிறார். அப்படியிருக்க, அரசியலுக்கு அப்பால் வெளியொருவர் வந்து இதற்கு உரிமை கோருவதில் என்ன நியாயம் இருக்கிறது.
குறித்த கட்டுரையில், திரும்பத் திரும்ப சொல்லி வாசகனின் மனதில் பதியவைக்க நினைக்கின்ற விடயம், றிஷாத் இந்த சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்து தோற்கடித்துவிட இறுதிவரை உறுதியுடன் நின்றார் என்பதாகும். இது உண்மையாக இருக்குமானால் அதற்கு எதிராக அவரது கட்சி வாக்களித்திருக்க முடியும். ஆனால், 2/3 பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகள் வந்தபின்னரே தனக்கு தெரியவந்தது றிஷாத் பதியுதீன் நழுவிக்கொள்கிறார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்து 2/3 பெரும்பான்மை வந்த காரணத்தினாலேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாக வாக்களித்தாக கூறுவதில் எவ்வித நியாயம் இருக்கிறது. கடைசிவரை விடாப்பிடியாக நின்றதாக கூறுபவர்கள், ஏன் நான்கு அம்சக் கோரிக்கையில் கையொப்பமிடவேண்டும். ஏன் ஆதரவாக வாக்களிக்கவேண்டும். தான் விரும்பாத ஒன்றை தனது எதிரியாக கருதுபவர் செய்கிறார் என்பதற்காக தானும் அதைச் செய்தேன் என்று கூறுவது எந்தளவு நழுவல்போக்குடையது என்பது மக்களுக்கு தெரியும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பல்டியடித்தாக கூறுகின்ற இவர், தனது கொள்கையை விட்டுக்கொடுக்காமல் சட்டமூலத்துக்கு எதிராக வாக்களித்திருந்தால், அடுத்த நிமிடமே அமைச்சர் றிஷாத் பதியுதீனும் அவரின் கட்சியும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக முத்திரை குத்தப்பட்டிருக்குமே. அவற்றை ஏன் செய்யவில்லை என்பதுதான் கேள்வி. அப்படி செய்திருந்தால் இப்படி மலினமான அரசியல் அறிக்கைகள் விடவேண்டிய எந்த தேவையும் வந்திருக்காது.
நடந்த உண்மைகள் இப்படியிருக்கி, றிஷாத் பதியுதீனை ரணிலிடம் கட்டிக்கொடுத்ததாக மேடைகளில் புலம்புகின்றார். நான்தான் எல்லாவற்றையும் செய்தேன், பாராளுமன்றத்தில் இருந்தவர்கள் பேசா மடந்தைகளாக இருந்தார்கள் என்று இன்னொருவர் புலம்புகிறார். அரசியல் செய்யத்தான் வேண்டும், அதற்காக பொய்களையும் புரட்டுகளையும் சமூகம் தொடர்பிலான முன்னெடுப்புகளில் விதைக்க முற்படுவதை ஆரோக்கியமான அரசியல் நகர்வாக கொள்ளமுடியாது.
இதுதவிர, மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலத்துக்கு சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவளித்தமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. ஏன் அதை எதிர்க்கிறோம், அதிலுள்ள பாதிப்பு என்னவென்று தெரியாமலேயே சிலர் எதிர்த்துக்கொண்டிக்கின்றனர். இத்திருத்தம் பற்றி சமூக ஆர்வலர்கள் திறந்தவெளி கலந்துரையாடலை மேற்கொண்டு சமூகத்தின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது காலத்தின் தேவையாக இருந்துகொண்டிருக்கிறது.
இயாஸ்தீன் எம். இத்ரீஸ்
சட்டபீடம், கொழும்பு பல்கலைக்கழகம்