ஈரான் – ஈராக் எல்லையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் இருநாடுகளிலும் 450 பேர் பலியாகியுள்ளதுடன் 7400 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இடிபாடுகளுக்கிடையில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்பதால் இத்தொகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. மீட்புப் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இப்பாரிய நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அயல்நாடுகளான குவைத், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஆர்மேனியா, இஸ்ரேல் மற்றும் அசர்பைஜான் ஆகியவற்றிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈரான் பிரதான எல்லைக் கடவையை அண்மித்த வகையில் குர்திஸ்தான் பிராந்தியத்தின் சுலைமானியா மாகாணத்தில் மையம் கொண்ட இந்நிலநடுக்கம் 7.3 ரிச்டர் என பதிவாகியுள்ளது.
ஈரான் தேசிய அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் ஊடகப் பேச்சாளர் பெஹ்னம் சயீதி இது தொடர்பில் குறிப்பிடுகையில், இந்த நிலநடுக்கத்தினால் ஈரானில் மாத்திரம் குறைந்தபட்சம் 441 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5,340 இற்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈராக் எல்லையிலிருந்து 15km தொலைவில் அமைந்துள்ள ஈரானின் கெர்மான்ஷா மாகாணத்தில் மாத்திரம் 236 பேர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தினால் பாரியளவு சேதங்களை எதிர்கொண்டுள்ள ஈரானின் கெர்மான்ஷா மாகாணம் 3 நாள் துக்க தினமாக அறிவித்துள்ளது. இம்மாகாணத்தின் பிரதான மருத்துவமனை நிலநடுக்கத்தில் பாரியளவு சேதங்களை எதிர்கொண்டுள்ளதால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானோருக்கு துரித சிகிச்சை வழங்குவதில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கத்தினால் ஈராக்கில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் 130 பேர் காயமடைந்துள்ளதாகவும் குர்திஸ்தான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை அடுத்து ஈரான், ஈராக்கின் பல பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அச்சம் காரணமாக மக்கள் மைதானங்களிலும் பூங்காக்களிலும் திறந்தவெளிகளும் குளிர்பனியில் இரவைக் கழித்தனர் என தெரிவிக்கப்படுகிறது.
“இரவு நேரம் என்பதால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு மீட்புக் குழுவினர் வானூர்திகள் விரைந்து செல்ல முடியாதிருந்தது. மேலும் பாதைகள் பல போக்குவரத்துக்கு துண்டிக்கப்பட்டிருந்தன. பாதிக்கப்பட்ட கிராமப் பகுதிகள் தொடர்பில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளது. ஈரான் இராணுவப் படையினர் மீட்புக் குழுவினருடன் இணைந்து பணியாற்றுகின்றனர்” என ஈரான் உள்துறை அமைச்சர் அப்துல் ரஸா தெரிவித்துள்ளார்.
70,000 இற்கும் அதிகமானோர் தற்காலிக புகலிடம் கோரி நிற்பதாக ஈரானிய செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. 3,000 தற்காலிக முகாம் அமைக்கும் போர்வைகள் மற்றும் 10,000 படுக்கைகள் என்பவற்றை துருக்கி செஞ்சிலுவைச்சங்கம் முதற்கட்டமாக அனுப்பி வைத்துள்ளது.
ஈரானின் நிலநடுக்கம் ஏற்பட்ட மாகாணத்தில் பல பகுதிகளில் கற்களும் களிமண்ணும் கொண்டு ஆக்கப்பட்ட பாரம்பரிய இருப்பிடங்கள் என்பதால் இந்த அனர்த்தத்தின் போது குறித்த பிரதேசத்தின் வீடுகள் அனைத்தும் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
2003 ஆம் ஆண்டு ஈரானின் கெர்மன் மாகாணத்தில் 6.6 ரிச்டர் அளவில் ஏற்பட்ட வரலாற்றிலேயே மிக கோரமான நிலநடுக்கத்தில் 31,000 உயிரிழந்தனர்; அனர்த்தத்தில் பாரம்பரிய பாம் நகரம் முற்றிலும் நிர்மூலமானமை குறிப்பிடத்தக்கது.
2003 ஆம் ஆண்டு ஈரானின் கெர்மன் மாகாணத்தில் 6.6 ரிச்டர் அளவில் ஏற்பட்ட வரலாற்றிலேயே மிக கோரமான நிலநடுக்கத்தில் 31,000 உயிரிழந்தனர்; அனர்த்தத்தில் பாரம்பரிய பாம் நகரம் முற்றிலும் நிர்மூலமானமை குறிப்பிடத்தக்கது.
Hassan Iqbal