முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து இனவாத சக்திகளால் முன்னெடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளின்போது அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்வதில் முன்னின்று பாடுபட்ட முஸ்லிம் சட்டத்தரணிகளைக் கொண்ட ஆர்.ஆர்.ரி. அமைப்பை கலைத்துவிடத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
ஆர்.ஆர்.ரி. அமைப்புக்கும் அதன் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீனுக்கு எதிராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் அனாமதேய பிரசாரங்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாகவே இத் தீர்மானத்தை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற ஆர்.ஆர்.ரி. அமைப்பின் கலந்துரையாடலின்போதே இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவ்வமைப்பின் உறுப்பினரான சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார். எனினும் குறித்த தீர்மானத்தை உடனடியாக மீள்பரிசீலனை செய்யுமாறும் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தை இனவாத அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் வகையில் சட்ட ரீதியான பாதுகாப்பை வழங்க முன்னின்று செயற்படுமாறும் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் சிவில் சமூக தலைமைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆர்.ஆர்.ரி அமைப்பானது, முஸ்லிம்களை இலக்கு வைத்து இனவாத பிரசாரங்களையும் வன்முறைகளையும் மேற்கொண்ட பௌத்த கடும்போக்கு அமைப்புகளுக்கு எதிராக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது.
பௌத்த இனவாத சக்திகளைக் கட்டுப்படுத்துவதில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்காத சந்தர்ப்பங்களில், ஆர்.ஆர்.ரி. அமைப்பின் சட்டத்தரணிகள் துணிச்சலுடன் முன்வந்து பொலிஸ் நிலையங்களில் இனவாதிகளுக்கு எதிராக முறைப்பாடுகளைப் பதிவு செய்ததுடன் நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
இதன் காரணமாக குறித்த இனவாத அமைப்புகளின் முக்கியஸ்தர்களான பௌத்த தேரர்கள் பல வழக்குகளுக்கு முகங்கொடுத்துள்ளதுடன் பலரும் பல தடவைகள் சிறையிலடைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இறுதியாகவும் மியன்மார் அகதிகளுக்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்த பலர் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் ஆர்.ஆர்.ரி. அமைப்பினர் தாக்கல் செய்த வழக்குகளினாலேயாகும்.
இந் நிலையிலேயே முஸ்லிம் சமூகத்திற்கு சட்ட ரீதியாக பாதுகாப்பையும் தைரியத்தையும் வழங்கும் வகையில் தொடர்ந்தும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முஸ்லிம் பிரதிநிதிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக், பொதுச் செயலாளர், உலமா சபை
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் விடிவெள்ளிக்கு கருத்து வெளியிடுகையில்,
இது தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் விடிவெள்ளிக்கு கருத்து வெளியிடுகையில்,
முஸ்லிம் சமூகம் சந்தித்த இக்கட்டான சந்தர்ப்பங்களில் யாரும் செய்ய முன்வராத பணியை மிகவும் துணிச்சலுடன் செய்து வந்த ஆர்.ஆர்.ரி. அமைப்பினரின் பணிகள் பாராட்டத்தக்கவையாகும்.
கடந்த காலங்களில் இவ்வாறான ஒரு சட்டத்தரணிகள் குழு முன்வந்து முஸ்லிம் சமூகத்திற்காக சேவையாற்றியிராத நிலையில் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் தலைமையிலான இளம் துடிப்புமிக்க குழுவினர் இதற்காக தம்மை அர்ப்பணித்து செயற்பட்டனர்.
இனவாதிகளுக்கு எதிரான வழக்குகளை அவர்களது சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளையே பயன்படுத்தி எதிர்கொண்டவிதம் சாணக்கியமிக்கதாகும். இவ்வாறான சிறந்த பணியை முன்னெடுத்து வரும் ஒரு சட்டத்தரணிகள் அமைப்பின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதையோ அழுத்தங்கள் வழங்கப்படுவதையோ ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதனைக் கலைத்துவிட்டால் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளை எதிர்கொள்வது யார்? எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை சட்டத்தின் மூலம் முறியடிப்பது எப்படி? எனவேதான் ஆர்.ஆர்.ரி. அமைப்பினர் தமது தீர்மானத்தை வாபஸ் பெற்று வழமைபோன்று துணிச்சலுடன் செயற்பட முன்வர வேண்டும். அதற்குத் தேவையான சகல உதவி ஒத்தாசைகளை வழங்க நாம் தயாராகவிருக்கிறோம்.
என்.எம்.அமீன், தலைவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடியான காலகட்டங்களில் அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கு எவரும் முன்வராத நிலையில் மிகவும் துணிச்சலுடன் சில சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆர்.ஆர்.ரி. அமைப்பை உருவாக்கி வழக்குகளைத் தொடுத்தனர். இதன் மூலம் இப் பிரச்சினைகளை ஓரளவு தணிக்கவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முடியுமாகவிருந்தது.
முஸ்லிம் சமூகம் எதிர்கொண்ட நெருக்கடியான காலகட்டங்களில் அவற்றை சட்ட ரீதியாக எதிர்கொள்வதற்கு எவரும் முன்வராத நிலையில் மிகவும் துணிச்சலுடன் சில சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஆர்.ஆர்.ரி. அமைப்பை உருவாக்கி வழக்குகளைத் தொடுத்தனர். இதன் மூலம் இப் பிரச்சினைகளை ஓரளவு தணிக்கவும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் முடியுமாகவிருந்தது.
இந்த அமைப்பைக் கலைப்பதாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் கவலைக்குரியதாகும். அத்துடன் காலத்திற்குப் பொருத்தமற்றதுமாகும். எனவேதான் ஆர்.ஆர்.ரி.யின் தலைவர் சிராஸ் நூர்தீன் உட்பட இப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தமது தீர்மானத்தை உடன் மீள்பரிசீலனை செய்வதுடன் அமைப்பின் செயற்பாடுகளை முஸ்லிம் சமூகத்திற்கு நம்பிக்கையளிக்கும் வகையில் முன்கொண்டு செல்ல வேண்டும் என வேண்டுகோள்விடுக்க விரும்புகிறேன்.
ஏ.ஆர்.எம்.பதியுதீன், பேருவளை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்
தர்காநகர் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயற்பட்ட ஆர்.ஆர்.ரி. அமைப்பு கலைக்கப்படப் போவதாக அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எந்தவித நலனையும் எதிர்பார்க்காது சமூகத்தின் பாதுகாப்பை மாத்திரமே இலக்காகக் கொண்டு இவ்வமைப்பினர் எமக்குதவி செய்தனர்.
தர்காநகர் மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் செயற்பட்ட ஆர்.ஆர்.ரி. அமைப்பு கலைக்கப்படப் போவதாக அறிந்து அதிர்ச்சியடைந்தேன். எந்தவித நலனையும் எதிர்பார்க்காது சமூகத்தின் பாதுகாப்பை மாத்திரமே இலக்காகக் கொண்டு இவ்வமைப்பினர் எமக்குதவி செய்தனர்.
2014 ஆம் ஆண்டு அளுத்கம, தர்கா நகர் பகுதிகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்களின் பின்னர் அவை தொடர்பில் வழக்குகளைத் தாக்கல் செய்து இன்று வரை அவற்றில் ஆஜராகி எமது பிரதேச மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக எமக்கேற்பட்ட அநீதியை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல ஆர்.ஆர்.ரி. அமைப்பு மேற்கொண்ட பணிகள் அளப்பரியவை.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் வெளிநாட்டுத் தூதரக பிரதிநிதிகளை நாம் பல தடவைகள் நேரில் சந்தித்து எமக்கிழைக்கப்பட்ட அநீதியை எடுத்துக்கூற ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஏற்பாடுகளைச் செய்து தந்தார். குறிப்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்யித் ராயித் ஹுசைன், சிறுபான்மை விவகாரங்கள் தொடர்பான ஐ.நா. விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதாயா, பிரித்தானிய தூதர அதிகாரிகள், இறுதியாக கடந்த மாதம் இலங்கைக்கு வந்த ஐ.நா. வின் அறிக்கையாளர் பப்லோ டி கிரீப் ஆகியோரை பாதிக்கப்பட்ட அளுத்கம, தர்கா நகர் மக்கள் நேரில் சந்தித்து தமது பிரச்சினைகளை எடுத்துக் கூற இவ்வமைப்பே வாய்ப்பையும் தொடர்பையும் ஏற்படுத்தித் தந்தது.
இந்த அமைப்பின் பணிகள் தர்கா நகருக்கு மாத்திரமன்றி முழு இலங்கை முஸ்லிம்களுக்கும் அவசியமாகும். இதனைக் கலைத்தால் பாதிக்கப்படப் போவது தர்கா நகர் மாத்திரமின்றி முழு முஸ்லிம் சமூகமும்தான்.
இவ்வாறானதொரு இயக்கத்தை கலைத்துவிட எவரேனும் காரணமாக இருப்பார்களாயின் அவர்கள் சமூகத் துரோகிகளாவர். எனவேதான் இயக்க ரீதியான, தனி நபர் ரீதியான வேறுபாடுகளை மறந்து எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் மஷூரா அடிப்படையில் அவற்றைப் பேசித் தீர்க்குமாறு நான் தர்கா நகர் மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தவிசாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான்
இது இவ்வாறிருக்க, கடந்த வாரம் இடம்பெற்ற தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் பணிகள் தொடர்பில் சிலாகித்து கருத்து வெளியிட்டார். அவர் அதில் கருத்து வெளியிடுகையில்,
முஸ்லிம் சமூகத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளை சிங்கள வழக்கறிஞர்கள்தான் முன்னின்று வாதாடினார்கள் என அசாத் சாலி இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் அறிந்த வகையில் முஸ்லிம் வழக்கறிஞர்கள் மிகவும் தியாகத்தோடும் அர்ப்பணத்தோடும் செய்கிறார்கள். அவர்கள் இதற்காக படுகின்ற கஷ்டத்தை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.
ஒரு சட்டத்தரணி சில சமயங்களில் முஸ்லிம் சமூகம் சார்பான வழக்குகளில் தான் பிரசன்னமாக முடியாத சந்தர்ப்பத்தில் தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து வேறு சட்டத்தரணிகளை அனுப்புவதை நான் கண்டிருக்கிறேன். எனவே நாங்கள் அந்தப் பங்களிப்பை மறந்தோ மறுத்தோ பேச முடியாது.
ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் போன்றவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மிகுந்த அர்ப்பணத்துடன் செயற்படுகிறார்கள். அவருக்காக நான் என்றும் பிரார்த்திப்பேன். அவர் எந்தக் கட்சியையோ அமைப்புகளையோ சார்ந்தவர் அல்ல. எனவே இவ்வாறான பணிகளை நாம் வரவேற்க வேண்டும். பாராட்ட வேண்டும். அவர்களது பணியை தொடர்ந்தும் முன்னெடுக்க நாம் ஆதரவளிக்க வேண்டும் என்றார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை தொடர்பு கொள்ள பல தடவைகள் முயன்ற போதிலும் அம் முயற்சி வெற்றியளிக்கவில்லை.