1990 ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாசிச புலிகளினால் பலவந்தமாக வடபுலத்திலிருந்து வெளியேற்றப்பட்ட இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்களிற் பெரும்பாலானோரின் கரங்களில் எஞ்சியிருந்தது அந்த ஷொப்பிங் பேக் மட்டும்தான். அதற்குள்ளேதான் எங்கள் எஞ்சிய வாழ்வின் மானத்தைக் காக்கின்ற சில ஆடைகள் இருந்தன. எங்களது பிறப்பை உறுதி செய்கின்ற சில பத்திரங்கள் இருந்தன. அந்த ஷொப்பிங் பைகளுக்குள்ளேதான் வட புலத்தில் நாம் வாழ்ந்ததற்கான ஆதாரங்களிற் சில இருந்தன. அந்த ஷொப்பிங் பைகள்தான் நாங்கள் அகதிகளாகி விட்டோம் என்பதற்கான அடையாளச் சின்னங்களாக அப்போது சாட்சியம் கூறி நின்றன.
ஷொப்பிங் பேக் என்பது தமிழ்த் தீவிரவாதத்தினால் நசுக்கப்பட்ட, கொடுமைக்குள்ளாக்கப்பட்ட ,துரோகமிழைக்கப்பட்ட எங்கள் வரலாற்றின் மிகப் பெரிய ஆவணம். ஷொப்பிங் பேக் என்பது எங்கள் மண்ணிலிருந்து நாங்கள் துடைத்தெறியப்பட்டதை மறந்துவிட முடியாதபடி எங்களுக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருக்கிற நெருப்பின் நிழல். ஷொப்பிங் பேக் என்பது கடந்த 27 வருடங்களாக நாங்கள் வாழ்கின்ற முகாம்களில் படபடத்துப் பறந்து கொண்டிருக்கும் துயரக் கொடி. ஷொப்பிங் பேக் என்பது இன்னமும் துடைக்கப்படாமல் வழிந்து கொண்டிருக்கும் எங்கள் கண்ணீரின் துளி.
எங்கள் மீட்சியை இந்த ஷொப்பிங் பைதான் அடிக்கடி எங்களுக்கு நினைவுறுத்துகிறது. எங்கள் விடுதலையை இந்த ஷொப்பிங் பைதான் அடிக்கடி வலியுறுத்துகிறது. எங்கள் கனவுகளுக்கு இந்த ஷொப்பிங் பைதான் உரமூட்டுகிறது. எங்கள் எதிர்காலத்துக்கு இந்த ஷொப்பிங் பைதான் உயிரூட்டிக் கொண்டிருக்கிறது.
ஆனால், அல்லாஹ்வையும் ரஸூலையும் நம்புகின்ற உங்களிற் சிலர் அதே அல்லாஹ்வையும் ரஸூலையும் நம்புகின்ற எங்களின் ஆவணமாகிய ஷொப்பிங் பையை அவமானப்படுத்துகிறீர்கள்.எங்கள் நெஞ்சங்களில் எரிகின்ற நெருப்பைப் பரிகாசம் செய்கிறீர்கள். எங்களின் கொடியைக் கொடும்பாவி கட்டி இருக்கிறீர்கள். எங்களின் கண்ணீர்த் துளிகளைக் காயப்படுத்துகிறீர்கள்.
இது தகுமா? இது முறையா? இது ஞாயமா? இது நீதியா?
என்னருமைச் சோதரர்களே...!
ஓர் அட்டைப் பெட்டியில் மிக அத்தியாவசியமான பொருட்களை மட்டுமே எடுத்துக் கொண்டு , தம் தாயகத்தை விட்டும் வெளியேறிய பாலஸ்தீனத்தின், சிரியாவின், ஈராக்கின் மக்கள் மீது நீங்கள் பரிதாபமும் பச்சாதாபமும் காட்டினீர்களே, எப்போதாவது அந்த அட்டைப் பெட்டிகளை அவமானச் சின்னங்களாக அறிவித்தீர்களா? இல்லையே.
விரட்டப்பட்ட மியன்மார் அகதிகளின் மீது உங்கள் அன்பையும் ஆதரவையும் பாசத்தையும் பரிவையும் தற்போது காட்டுகின்ற நீங்கள் அந்த மூட்டை முடிச்சுகளை ஏளனச் சின்னங்களாக எப்போதாவது அறிவிப்பீர்களா...? மாட்டீர்களே.
பின், எங்களின் ஷொப்பிங் பேக்கை மட்டும் ஏன் எள்ளி நகையாடுகிறீர்கள்...?
சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கொடும்பாவியை எரிக்கையில் அவர் கையில் ஷொப்பிங் பேக் இருப்பது போல் செய்து, அதனையும் சேர்த்து எரித்த நீங்கள் இலட்சக் கணக்கான வடபுல முஸ்லிம் அகதிகளின் இதயங்களையுமல்லவா எரித்துச் சாம்பலாக்கி விட்டீர்கள்....!
தயவுசெய்து எங்களின் மானத்தின் நெருப்பில், வேதனையின் தீயில் இனிமேலும் கண் மூடிக் கதகதப்பைக் காணாதீர்கள் என்று உங்களைக் கண்ணீருடன் கேட்டு, உங்கள் ஞாபகத்துக்காக இந்த ஆதங்கக் கட்டுரையில் மேலே இருக்கும் இரண்டு பந்திகளை மீண்டும் இங்கே இணைத்துக் கொள்கிறேன்:
''ஷொப்பிங் பேக் என்பது தமிழ்த் தீவிரவாதத்தினால் நசுக்கப்பட்ட, கொடுமைக்குள்ளாக்கப்பட்ட ,துரோகமிழைக்கப்பட்ட எங்கள் வரலாற்றின் மிகப் பெரிய ஆவணம். ஷொப்பிங் பேக் என்பது எங்கள் மண்ணிலிருந்து நாங்கள் துடைத்தெறியப்பட்டதை மறந்துவிட முடியாதபடி எங்களுக்கு ஞாபகமூட்டிக் கொண்டிருக்கிற நெருப்பின் நிழல். ஷொப்பிங் பேக் என்பது கடந்த 27 வருடங்களாக நாங்கள் வாழ்கின்ற முகாம்களில் படபடத்துப் பறந்து கொண்டிருக்கும் துயரக் கொடி. ஷொப்பிங் பேக் என்பது இன்னமும் துடைக்கப்படாமல் வழிந்து கொண்டிருக்கும் எங்கள் கண்ணீரின் துளி.
எங்கள் மீட்சியை இந்த ஷொப்பிங் பைதான் அடிக்கடி எங்களுக்கு நினைவுறுத்துகிறது. எங்கள் விடுதலையை இந்த ஷொப்பிங் பைதான் அடிக்கடி வலியுறுத்துகிறது. எங்கள் கனவுகளுக்கு இந்த ஷொப்பிங் பைதான் உரமூட்டுகிறது. எங்கள் எதிர்காலத்துக்கு இந்த ஷொப்பிங் பைதான் உயிரூட்டிக் கொண்டிருக்கிறது!''