பிரதமர் நரேந்திர மோடியை தேநீர் விற்க செல்லுங்கள் என்று காங்கிரஸ் கட்சியினர் பதிவிட்டுள்ள டுவிட்டர் செய்தியால் சர்ச்சை எழுந்துள்ளது.
இளைஞர் காங்கிரஸ் கட்சியானது யுவதேஷ் என்ற பெயரில் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஆகியோர் ஒன்றாக புகைப்படத்தில் நிற்கின்றனர். அதில், மோடி மற்ற இரு தலைவர்களிடம், எதிர்க்கட்சிகள் தன்னை இலக்காக கொண்டு மீம்கள் அனுப்புகின்றனர் என கூற முயல்கிறார்.
அப்போது அவர் மெயின்மெயின் என கூறுகிறார். ட்ரம்ப் மீம் என கூற வேண்டும் என அதனை திருத்துகிறார். அதற்கு தெரசா மே, மோடியிடம், நீங்கள் சென்று தேநீர் விற்பனை செய்யுங்கள் என கூறுகிறார் என்று பதிவாகியுள்ளது. ஆயினும் உடனடியாக இந்த பதிவு நீக்கப்பட்டு விட்டது.
காங்கிரஸ் கட்சியின் இந்த டுவிட்டர் செய்தியால் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மத்திய அமைச்சர்கள் டுவிட்டர் வழியே கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
எனினும், இதுபோன்ற மீம்களை நாங்கள் வன்மையாக மறுக்கிறோம். காங்கிரஸ் கட்சியானது பிரதமர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியினருக்கும் மரியாதை அளிக்கும் கலாசாரத்தினை கொண்டுள்ளது என காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.
குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் இந்த டுவிட் பதிவு அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என கூறப்படுகிறது.