எம்.வை.அமீர்
சாய்ந்தமருதில் பலகோடி ரூபாய்கள் செலவில் திட்டமிட்ட அடிப்படையில் தோணா அபிவிருத்தித் திட்ட வேலைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், முறையான கண்காணிப்பு இன்மையின் காரணமாக தோணாவின் அருகில் அடுக்கப்பட்டுள்ள வலைக்கூடுகளில் மேலும் அருகிலும் கழிவுகள் வீசப்படுவதாலும் குறித்த பிரதேசத்தில் குவியும் கழிவுகளை கல்முனை மாநகரசபை முறையாக அகற்றாமையின் காரணமாகவும் இனம்தெரியாதோரால் தீ மூட்டப்பட்டதன் காரணமாகவும் கல்கள் அடுக்கப்பட்ட வலைக்கூடுகள் எரிந்த நிலையில் காணப்படுகின்றன.
பலத்த வாதப்பிரதிவாதங்கள் போராட்டங்களுக்கு மத்தியில் அமைச்சரவை அங்கீகாரத்துடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களையோ அல்லது வேலைகள் முடிவுற்ற பிரதேசங்களையோ யார் கண்காணிப்பது அல்லது பாராமரிப்பது என்ற கேள்வி, கேள்வியாகவே இருக்கின்றது.
மக்களின் வரிப்பணத்தில் முன்னெடுக்கப்படும் குறித்த வேலைத்திட்டங்களை முறையான முறையில் கண்காணிக்கப்பட்டது விடப்படுமிடத்து தோணா அபிவிருத்தி என்ற இலக்கு வீம்புக்கு செய்வதாகவே அமையும். கழிவுகளை வீசுபவர்கள் இது எங்களது வரிப்பணத்தில் இடம்பெறும் வேலைத்திட்டம் என்பதையும், முறையற்ற முறையில் வீசப்படும் கழிவுகளால் ஏற்படும் தீங்குகளையும், அதனான் ஏற்படும் அசௌகரியங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்தமக்கள் கவனத்தில் எடுக்காதது மிகுந்த கவலையைத்தரும் விடயமாகும்.
அதிகாரிகளின் அசமந்த போக்கும் இவ்வாறான கவலைதரும் நிலைக்கு காரணமாக அமைகின்றன. சாய்ந்தமருது பிரதேச செயலாளர் மற்றும் கல்முனை மாநகர ஆணையாளர் போன்றோர் குறித்த விடயத்தில் விரைந்து நடவடிக்கையெடுக்க வேண்டும்.
தோணா அபிவிருத்தித் திட்டத்துக்கு பாரியளவில் நிதியொதுக்கீடு செய்துள்ள நகர அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் கூட வேலைத்திட்டங்களை கவைக்கின்றார்களா என்பது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அமைச்சர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் கவனத்திலெடுக்க வேண்டும்.
சாய்ந்தமருதின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு போராட்டங்களை நாடாத்திவரும் பள்ளிவாசல் சமூகமும் இவ்வாறன விடயங்களில் தங்களது கவனங்களை செலுத்த வேண்டும்.
பலகோடி ரூபாய்கள் செலவில் செய்யப்படும் வேலைகளின் மேல் தீ வைப்பது என்பது வருந்தக்கூடிய விடயமாக இருந்தால் சம்மந்தப்பட்ட அனைவரும் முன்வந்து இதனை பாதுகாக்க வேண்டும்.