வவுனியா பஸார் ஜும்ஆ பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைத் தொகுதியில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் மூன்று கடைகளுக்கு 31 ½ இலட்சம் ரூபா நஷ்டமேற்பட்டுள்ளதாகவும் பள்ளிவாசலுக்கும், பள்ளிவாசலுக்குச் சொந்தமான ஏனைய கடைகளுக்கும் சி.சி.ரி.வி கமெரா பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் வவுனியா பஸார் ஜும்ஆ பள்ளிவாசல் உப தலைவர் யூசுப் நஸார் தெரிவித்தார்.
இதேவளை பள்ளிவாசலுக்கும், பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைகளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அவர் தொடர்ந்தும் தீ அனர்த்தம் தொடர்பில் விபரிக்கையில் முற்றாக தீயினால் சேதமடைந்த பை விற்பனை கடைக்கு 25 இலட்சம் ரூபாவும் மற்றும் பென்சி கடைக்கு ஐந்து இலட்சம் ரூபாவும், பகுதியளவில் சேதமடைந்த கடைக்கு 1 ½ இலட்சம் ரூபாவும் நஷ்டமேற்பட்டுள்ளது.
இத் தீ அனர்த்தம் தொடர்பில் வட பிராந்திய பொலிஸ் மா அதிபர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், நகர சபையின் செயலாளர், பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகள், கடைகளின் உரிமையாளர்கள் என்போர் ஒன்றுகூடிக் கலந்துரையாடினர். கலந்துரையாடலின் போது சி.சி.ரி.வி கமரா பொருத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த 31 ஆம் திகதி வவுனியா பள்ளிவாசலுக்குச் சொந்தமான கடைகள் சட்டத்துக்கு முரணானவை என ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டதால் வட பிராந்தியத்துக்கு பொறுப்பான உதவி பொலிஸ்மா அதிபர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இருவரை அழைத்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் போது சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீ அனர்த்தம் மின் ஒழுக்கினால் ஏற்பட்டதா? அல்லது நாசகார செயலா? என்பது தொடர்பில் வவுனியா பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். தீயினால் சேதமடைந்துள்ள மூன்று கடைகளையும் புனர்நிர்மாணம் செய்வதற்கு பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
தீயினால் எரிந்த மாதிரிகள் இரசாயன பகுப்பாய்வுகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இரசாயன அறிக்கையை பெற்றுக்கொண்டதன் பின்பு மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் தொடரவுள்ளனர்.
இதேவேளை இன்று புதன்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூரண ஹர்த்தால் இரத்து செய்யப்பட்டதாகவும் பள்ளிவாசல் உப தலைவர் யூசுப் நஸார் தெரிவித்தார்.
சம்பவம் இடம்பெற்ற தினம் அதிகாலை1.30 மணியளவில் சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து இருவர் ஓடிச்செல்வதை நேரில் கண்ட சாட்சியாளர் இன்று வட பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் திணைக்களத்துக்கு வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்